திங்கள், 10 பிப்ரவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 82


  குமரன் குன்றில் இருப்பதை அறிந்ததும், ஒளவையார் குமரனை காண குன்றுக்கு வந்தார். அங்கு வந்து குமரனை போற்றி பலவாறு பாடினார். பின்பு தேவர்கள், முனிவர்கள் முதலானோர் பலவாறு போற்றிப்பாடி குமரனை மனம் அமைதி கொள்ள வேண்டினார்கள்.

ஒளவையாரின் அமுதத் தமிழ் பாடல்களை கேட்ட தமிழ் கடவுளான குமரன் தன் தாய், தந்தையர் மீது இருந்த சினத்தை மறந்து அவ்விடத்திலேயே இருந்தார். தமிழுக்கு கடவுளான குமரா... நீ தாய், தந்தையரிடம் சண்டையிட்டு வரலாமா? வேண்டாம் குமரா? என பலவாறு கூறி குமரன் கொண்ட கோபத்தை குறைத்து அவரை சாந்தம் கொள்ள செய்தார்.

பின்பு தாயான பார்வதி தேவி சிவபெருமானின் பல திருவிளையாடல்களைப் பற்றி குமரனுக்கு எடுத்துக் கூறினார். பின்பு நீ கோபம் கொண்டு குன்றின் மேல் அமர்ந்ததால் இன்று முதல் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும் என கூறினார்.

மேலும், ஞானக்கனியின் காரணமாக நீ இங்கு வந்து அமர்ந்ததால் இந்த இடம் இனி வரும் காலங்களில் 'பழம் நீ" என அழைக்கப்படும் என்று கூறினார். மேலும், இங்கு வந்து உன்னை வணங்க வரும் பக்தர்களுக்கு அருள் புரிவாயாக என்று கூறினார்.

பின்பு, குமரன் பார்வதி தேவியுடன் கைலாய மலைக்கு சென்று தன் தந்தையான சிவபெருமானை வணங்கி தான் இழைத்த பிழையை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினார். கருணைக் கடலான சிவபெருமானும் குமரனின் பிழைகளை மன்னித்து ஏற்றுக்கொண்டார்.

பின்பு தன் தமையனான கணபதியிடம் தான் இவ்விதம் நடந்தமைக்கு மன்னிப்பு வேண்டினார். கணபதியோ! குமரா நீ கைலாயம் வந்ததே மகிழ்ச்சி என்று கூறினார்.

பின் கணபதியும் குமரனை மனதார ஏற்றுக்கொண்டார். பிறகு கணபதியும், குமரனும் தன் தாய், தந்தையருடன் அமர்ந்து காட்சியளித்தனர். சிவபெருமானும், பார்வதியும் தமது புத்திரர்களோடு இணைந்த காட்சியை காண தங்களிடம் இருக்கும் கண்கள் போதவில்லையே என அங்குள்ள அனைவரும் எண்ணத் தொடங்கினார்கள்.

இறுதியில் இவையனைத்திற்கும் காரணமான நாரதரும் விழிகளுக்கு காண கிடைக்காத அந்த காட்சியினை கண்டு மனம் மகிழ்ந்தார். பின்பு தாம் நடத்திய இந்த கலகத்தால் ஏற்பட்ட விளைவுகளை மறந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினார்.

பார்வதி தேவியோ நாரதரே இந்த திருவிளையாடல் தங்களால் பிரபஞ்ச மக்களின் நன்மையை பொருட்டே நடந்ததாகும் எனக் கூறி நாரதரை பார்வதி தேவி மன்னித்தருளினார்.

தெற்கு திசையில் சார்ந்து இருக்கின்ற பல்வேறு வனங்களில் காமதம் என்னும் வனத்தில் எண்ணற்ற பல இன்னிசை எழுப்பும் பறவைகளும், அதே நேரத்தில் மனதிற்கு முழு அமைதியையும், உயிரினங்களின் வாழ்க்கைக்கு தேவையான அழகிய பசுமைகளும் நிறைந்திருந்தது. இந்த வனத்தில் மும்மூர்த்திகளில் படைப்பவரான பிரம்ம தேவரின் மகனான அத்திரி முனிவர் தன்னுடைய துணைவி அனுசுயா தேவியோடு ஒரு குடில் அமைத்து வாழ்ந்து வந்தார்.

அந்த வனத்தில் இவர்களோடு பல குடும்பங்களும் வாழ்ந்து வந்தனர். அங்கு அத்திரி முனிவர் இந்த பிரபஞ்சத்தில் நிகழும் மாற்றங்கள் யாவற்றையும் அறியாதவராக தவநிலையில் இருந்தார். அனுசுயா தன் கணவருக்கு தேவையான பணிவிடைகளை செய்து முடித்து சிவபெருமானையும் வணங்கி வந்தார்.

அவ்வேளையில் தேசங்களில் பொழிய வேண்டிய மழையானது பொழியாமல் போயிற்று. இதனால் பூவுலகில் வாழ்கின்ற உயிரினங்களின் வாழ்க்கைக்கும், உயிருக்கும் அடிப்படையாக இருக்கும் தண்ணீருக்கு பஞ்சம் ஏற்பட தொடங்கிற்று.

அங்குள்ள மக்களால் காலம் தவறாமல் பராமரிக்கப்பட்ட நீர் நிலையங்களான குளம், ஆறு மற்றும் கிணறு ஆகியவற்றில் இருந்த நீரைக் கொண்டு தங்களின் வாழ்க்கையை வாழத் தொடங்கினர்.

நாட்கள் செல்ல செல்ல நீர் நிலையங்களில் இருந்த நீரானது குறையத் தொடங்கியது. ஏனெனில், ஒரு பருவம் மட்டுமல்லாது பல பருவங்களில் பெய்ய வேண்டிய மழையானது பொழியத் தவறியது. இதனால் அழகிய பசுமை நிறைந்த வனம் தனது பசுமையை இழக்கத் தொடங்கின. மனதிற்கு இதமளித்த இன்னிசை குரலுடைய பறவைகள் யாவும் வேறு இருப்பிடம் நோக்கி செல்லத் தொடங்கின.

பசுமை இழந்த வனத்தில் எங்கும் வெப்பக் காற்றுகள் வீசத் தொடங்கின. இதனால் நீரின்றி தவித்த காட்டு விலங்குகள் பலவும் மடிந்தன. அதுமட்டுமின்றி அங்கு வாழ்ந்து வந்த மக்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் மிகவும் சீர்குலைந்து வர தொடங்கின.

இதனால் அந்த வனத்தில் வசித்து வந்த குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மனதில் எண்ணி குடியிருக்கும் வனத்தை விட்டு வேறு வனத்திற்கு குடிபெயரத் தொடங்கின. ஆனால், அனுசுயா தேவி மட்டும் தனது கணவருடன் யாரும் இல்லாத அந்த வனத்தில் தன்னுடைய பதியானவருக்கு தேவையான பணிவிடைகளை செய்து சிவபெருமானுக்கு பூஜையும் செய்து வந்தார்.

நீரின்றி வறண்டு போன அந்த வனத்தில் சிவபூஜைக்கு தேவையான மலர்கள் எதுவும் கிடைக்காமல் மிகவும் வருத்தம் கொண்டார். இருப்பினும் அதற்காக சிவபூஜையை எந்நிலையிலும் நிறுத்தாமல் மானசீகமாக (மனதளவில் ஈடுபாடு காட்டும் நிலை) மலர்களை தூவி சிவபெருமானை பூஜித்து வந்தார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்