அம்பிகையான பார்வதி தேவி அக்குழந்தையை அரவணைத்து தனது கரங்களில் எடுத்தார். அந்நிலையில் ஹிரண்யாக்ஷனை கைலாய மலைக்கு செல் என்று அசரிரீ ஒலித்தது. அதைக்கேட்ட ஹிரண்யாக்ஷன் கைலாய மலையை நோக்கி சென்றான்.
தனது கரங்களில் பார்வதி தேவி குழந்தையை எடுத்த அடுத்த கணத்தில் சிவபெருமான் தனது பக்தனான ஹிரண்யாக்ஷன் கைலாய மலையை அடைந்ததை உணர்ந்தார். பின், பார்வதி தேவியிடம் அக்குழந்தையை ஹிரண்யாக்ஷனிடம் கொடுத்து விடுமாறு கூறினார். எம்பெருமானின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பார்வதி தேவி, பதியின் பேச்சை மீற முடியாமல் கைலாய மலைக்கு வந்த ஹிரண்யாக்ஷனிடம் அக்குழந்தையை அளித்தார்.
எம்பெருமானான சிவபெருமான் எந்நிலையிலும் இக்குழந்தையின் பிறப்பை பற்றிய இரகசியம் தெரியக்கூடாது என்றும், இக்குழந்தையை உன்னுடைய மைந்தனாக நல்லறங்களை போதித்து சிறந்தவனாக வளர்க்க வேண்டிய பொறுப்பு உன்னுடையதாகும் என்றும் கூறினார்.
எம்பெருமானின் கூற்றின்படியே அந்தகாசூரனின் பிறப்பு பற்றியவை இரகசியமாக இருந்தது. அந்த இரகசியமே அவனை அழிவு பாதைக்கு அழைத்துச் சென்றது. இதனால் அவனது மார்க்கத்திற்கான வழியை அவனே தேர்ந்தெடுத்து கொண்டான் என எண்ணினார் பிரம்ம தேவர்.
முனிவரின் துணைவியின் வருகைக்காக வாயிற்படிகளை நோக்கி கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அந்தகாசூரன். மேலும், தன்னுடைய ஆணைக்கு இணங்கி மாதுவை கவர சென்ற அசுரர்கள் வெறுங்கையுடனும், காயங்களுடனும் வருவதை அறிந்த அந்தகாசூரன் அதிர்ச்சி அடைந்தான்.
காயங்களுடன் வந்த அசுரர்கள் அந்தகாசூரனிடம் நிகழ்ந்த யாவற்றையும் எடுத்துக்கூறினார்கள். அப்போது அசுரர்களில் ஒருவன் அந்த முனிவரின் பலமானது எங்களை விட அதிகமாக இருந்தது. எந்தவிதமான தந்திரங்களுக்கும் ஏமாறாமல் எங்களின் அனைத்து தந்திரங்களையும் முறியடித்து எங்களையும் இந்நிலைக்கு ஆளாக்கினார் என்று கூறினான்.
கணப்பொழுதில் முனிவரின் திறமையை மிகைப்படுத்தி கூறிய அசுரரின் சிரமானது(தலை) அந்தகாசூரனின் வாலால் வெட்டப்பட்டு சிரமும், தேகமும் என தனித்தனியே கிடந்தது. என் முன்னிலையில் சாதாரண முனிவனை புகழ்ந்து பேசுகின்றாயா.. மதிகெட்ட மூடனே..!! எனது படைகளை எதிர்க்க அந்த தேவர்களே பயம் கொள்வார்கள். ஆனால், இந்த முனிவனோ எனது சேனைகளை எதிர்ப்பதா... இனி அவனை அழித்து அவனுடைய துணைவியை கவர்ந்து வந்தால் மட்டுமே எனக்கு மனமகிழ்ச்சி என கரங்களில் வாலுடன் முனிவர் குடில் அமைத்திருக்கும் இருப்பிடத்தை நோக்கி அதாவது அவனது கடைசி நிமிடங்களை நோக்கி சென்றான் அந்தகாசூரன். அந்தகாசூரனின் செயலைக்கண்டு பயம்கொண்ட அசுரர்கள் அவனின் சொல்படி நடந்தனர்.
தனது ராஜ்ஜியப் பகுதியில் இருந்து முனிவரின் குடில் அமைந்திருக்கும் இடத்தை அடைந்தான் அந்தகாசூரன். இந்த முனிவரை கொல்ல நான் செல்வதா..? என எண்ணி தன்னுடன் வந்த வீரர்களை அனுப்பி அந்த பெண்னை கவர்ந்து வர ஆணையிட்டான்.
தன் மனைவியான பார்வதி தேவியை கவர வந்த அசுரர்கள் அனைவரையும் முனிவர் உருவத்தில் இருந்த சிவபெருமான் தண்டித்து அவ்விடத்தை விட்டு அகற்றினார். பாதிப்படைந்த அசுர வீரர்கள் அந்தகாசூரனிடம் சென்று மீண்டும் நடுங்கிய குரலில் நிகழ்ந்தவற்றை எடுத்துக் கூறினார்கள்.
அவர்கள் கூறியதைக்கேட்டு, அதுவரை தேவியை காண வேண்டும் என்ற ஆவலை மட்டும் கொண்டிருந்த அந்தகாசூரன் இனி அந்த முனிவரை வதம் செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு குடிலை அடைந்தான்.
அந்தகாசூரனின் வருகையை எதிர்பார்த்து இருந்தது போல் முனிவரான சிவபெருமான் குடிலின் நுழைவாயிலின் அருகில் இருந்தார். முனிவரை கண்ட அந்தகாசூரன் ஓ... நீதான் என்னுடைய வீரர்களை தாக்கி காயம் உண்டாக்கியவரோ? இன்றே உனது கடைசி நாள் ஆகும் எனக் கூறிக்கொண்டே தனது ஆயுதத்தை ஏந்திய வண்ணம் முனிவரான சிவபெருமானை தாக்க முயன்றான் அந்தகாசூரன்.
அந்தகாசூரனின் பலம் வாய்ந்த தாக்குதல்கள் அனைத்தையும் மிகவும் எளிய முறையில் தகர்ந்து ஏறிந்தார் முனிவரான சிவபெருமான். பின்னர், தன்னுடைய தந்திர வியூகங்களை பயன்படுத்தி முனிவரை தாக்க முயன்றார் அந்தகாசூரன்.
அந்தகாசூரனின் அனைத்து வியூகங்களையும் உடைந்தெறிந்து அவனையும் தாக்கினார் முனிவரான எம்பெருமான். ஆனால் வதம் செய்யவில்லை. ஏனெனில், அந்தகாசூரன் பெற்ற வரமே அவனை இம்முறையும் காத்தது.
முனிவருடைய இத்தாக்குதலை சற்றும் எதிர்பாராத அந்தகாசூரன் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் அவ்விடத்தை விட்டு மறைந்தான். பின் ஒரு மாபெரும் சோனையை திரட்டி அந்த முனிவரை அழித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு போர் தொடுக்கும் எண்ணத்துடன் சென்றான்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக