முருகப்பெருமான் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படைவீடாகத் திகழ்வது திருத்தணி திருத்தலமாகும்.
தெற்கில் காஞ்சிபுரம், மேற்கில் சோளிங்கபுரம், கிழக்கில் திருவாலங்காடு, வடக்கில் திருக்காளத்தி மற்றும் திருப்பதி ஆகிய திருத்தலங்கள் சூழ நடுநாயகமாக அமைந்துள்ளது திருத்தணி.
சுமார் 4000 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலுக்கு அபராஜிதவர்ம பல்லவன், பராந்தகச் சோழன், மதுரை கண்ட கோப்பரகேசரி வர்மன், முதலாம் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், விக்கிரம சோழன், வீரகம்பன உடையார், வீரபிரதாப சதாசிவதேவ ராயர், விஜயநகர மன்னர்கள் மற்றும் கார்வேட் ஜமீன்தார்கள் ஆகியோரால் திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தல வரலாறு :
முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன், முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்டு கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலையாகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.
கோயிலின் அமைப்பு :
திருத்தணி திருக்கோவில் சாளுக்கியர் காலக் கட்டிட பாணியிலானது. தற்போது 101 அடி உயரத்தில் 9 நிலைகளுடன் கூடிய ராஜ கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் கிழக்கில் இருக்கும் இந்த ராஜ கோபுரம், சுமார் 25 கி.மீ. தொலைவிலிருந்து பார்த்தால்கூட தெரியும் அளவுக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் நான்கு பிரகாரங்கள் கொண்டது. மலையின் மீது படிகள் ஏறிச் சென்றால் முதலில், தேரோடும் வீதியான நான்காம் பிரகாரத்தை அடையலாம். இங்கு வாகன மண்டபம், கல்யாண மண்டபம் ஆகியன உள்ளன. இங்கிருந்து மூன்றாம் பிரகாரத்துக்குச் செல்லும் நுழை வாயிலின் அருகே கற்பூர அகண்டம் உள்ளது.
நான்காம் பிரகாரத்தின் கிழக்கு வாசல் வழியாக சில படிகள் ஏறி, மூன்றாம் பிரகாரத்தை அடையலாம். இங்கு கொடிமர விநாயகர், உமா மகேஸ்வரர், உச்சிப் பிள்ளையார் ஆகியோரது சன்னிதிகளும் உள்ளன.
இங்கு மயிலுக்குப் பதிலாக ஐராவத யானையே முருகப் பெருமானின் வாகனமாகத் திகழ்கிறது. இது மூலவர் சன்னிதியை நோக்கி அல்லது கிழக்கு நோக்கியவாறு காட்சி தருகிறது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள், மூலவர் உட்பட எல்லா சன்னிதிகளையும் தரிசித்த பிறகு, நிறைவாக இங்குள்ள ஆபத் சகாய விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
திருமால் ஆலயங்களைப் போன்று, முருகனின் திருப்பாத சின்னத்தை (சடாரி) பக்தர்களின் தலையில் வைத்து ஆசி வழங்குவது, திருத்தணிக் கோயிலின் தனிச் சிறப்பு.
முருகனின் சிறப்பு :
ஆடிக்கிருத்திகை நன்னாளில் திருத்தணி முருகனை வழிபடுதல் சாலச்சிறந்தது. திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று அர்ச்சித்து இருநெய் விளக்கை முருக பெருமானுக்கு ஏற்றி வழிபாடு செய்வதன்மூலம் சகல நன்மைகளையும் பெறலாம்.
முருகப் பெருமானுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை நாளில் மனமுருக வேண்டினால் நல்ல வேலை கிடைக்கும், விவசாயம் மேன்மையடையும், உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் மேலும் சிறப்படைவார்கள்.
தாழ்வு மனப்பான்மை நீங்கும். உடல் ஆரோக்கியம் பெருகும். நல்ல வாழ்க்கைத்துணை அமையும். மக்கள் செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம் என அனைத்தும் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக