Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

மருத்துவமனையில் நடந்த நிகழ்வு.!

Image result for மருத்துவமனை

ரு பெரிய மருத்துவமனையில் பல படுக்கையறைகள் இருந்தது. அவற்றில் ஒரு அறையில் இரண்டு நோயாளிகள் இருந்தனர். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் ஒன்று இருந்தது. ஒருவர் படுத்திருக்கும் படுக்கை ஜன்னல் அருகில் இருந்தது. இன்னொருவருக்கு ஜன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர அங்கு அவர் தனிமையாகவே இருந்தார்.

ஜன்னல் அருகே இருக்கும் நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் அவர்களுக்கிடையே நட்பு மலர்ந்தது. ஒருமுறை எலும்பு முறிவு நோயாளி ஜன்னல் நோயாளியிடம் உனக்காவது பொழுது போக்க, ஒரு ஜன்னல் இருக்கிறது எனக்கு அதுகூட இல்லை..! என்று கூறினார்.

அதற்கு ஜன்னல் அருகே இருப்பவர் கவலைப்படாதே நண்பா..! நான் ஜன்னல் வழியாக பார்த்து என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைபிடிப்பேன்..! என்று கூறினார்.

அன்று முதல் ஜன்னல் அருகே இருக்கும் நோயாளி, தான் கண்ட காட்சிகளை அனைத்தும் தன் நண்பனுக்குக் கூறிக் கொண்டு வந்தார். நண்பா..! ஜன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி உள்ளது, அதன் நடுவில் சிறு தீவு, ஏரியில் படகுகள் மிதக்கின்றன. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! ஒன்று உள்ளது. அங்கு காதலர்கள் தங்களை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!

எலும்பு முறிவு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் அனைத்தும் மனக்கண்ணில் நினைத்து கற்பனையில் மூழ்கினார்.

ஜன்னல் நோயாளி இதுபோல மற்றொருநாள், ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.... அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடி விளையாடுகின்றனர். மணப்பெண்ணிடம் தோழி ஏதோ கூறுகிறாள். அதைக் கேட்ட மணப்பெண் வெட்கப்பட்டு சிரிக்கிறாள்..!

ஊர்வலத்தை பார்க்க முடியவில்லை என்றாலும், எலும்பு முறிவு நோயாளிக்கு நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை கற்பனையாக பவித்து ரசித்து பார்த்தார்.

ஒருநாள் ஜன்னல் அருகே இருக்கும் நோயாளி இறந்து விடுகிறார். மீண்டும் எலும்பு முறிவு நோயாளிக்கு தனிமை ஏற்பட்டது. ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை ஜன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டார். அதனால் அவரது படுக்கையை ஜன்னல் அருகே மாற்றப்பட்டது.

இனிமேல் எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே, எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி ஜன்னல் வழியே பார்த்தார், ஆனால் அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால் ஜன்னல் நோயாளி சொன்ன கதைகள் எல்லாம் எப்படி..? என்று யோசித்தார். மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எல்லாம் எலும்பு முறிவு நோயாளி கூறினார். செவிலி, எலும்பு முறிவு நோயாளிக்கு ஊசி போட்டபடியே, நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டார்! என்று செவிலி கூறினார்.

தத்துவம் :
தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் சில மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை, குறை கூறாமல் இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக