ஆன்மிக ரீதியாக ராகுவை பாம்பு உடலும் மனித தலையும்
கொண்டவராகவும், கேதுவை பாம்பு தலையும், மனித உடலும் கொண்டவராகவும்
சித்தரிக்கிறார்கள். நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும்
இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள்
சிக்கிக் கொண்டு இருந்தால் அவை கால சர்ப்ப தோஷமாகிறது. சர்ப்ப தோஷங்கள் பல வகை
இருக்கிறது. நாக தோஷம் ஏற்பட்டால் பல தடைகள் ஏற்படுகிறது.
நாகதோஷம் அல்லது சர்ப்ப தோஷம் பற்றி
இன்றைக்கு பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். ராகு கேதுவுக்கு இடையே கிரகங்கள்
சிக்கியுள்ள போது பிறக்கும் குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும். முன்
ஜென்மத்தில் வாழ்ந்த போது பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு
விளைவித்திருந்தால் உங்களுக்கோ அல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக சர்ப்ப தோஷம்
ஏற்படும்.
நாக தோஷம் உள்ளவர்கள் ஸ்வாதி, சதயம்,
திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களில் உள்ள பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ
அர்ச்சனை செய்தால் ராகு கேதுவின் விஷத்தன்மை நீங்கி தோஷத்தின் வீரியம்
குறைந்திடும்.காளஹஸ்தி, ராமேஸ்வரம், திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கொடுமுடி
போன்ற புண்ய ஸ்தலங்களில் வழிபாட்டின் மூலமாக பரிகாரம் செய்துகொள்வது நல்லது.
தோஷ ஜாதகம்
ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம்
இடத்தில் ராகுவோ கேதுவோ அமர்ந்திருந்தால் திருமணம் தாமதமாகலாம். மிதுனம், கன்னி,
தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் ராகு-கேது அமர்ந்திருந்தால் எவ்வித தோஷமுமில்லை. இந்த
நான்கு மூலைகள் தவிர மற்ற இடங்கள் ஏழாம் இடமாக அமைந்து அங்கே ராகுவோ கேதுவோ
அமர்ந்திருக்கும் அமைப்பை உடையவர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.
இளமையில் சிரமம்
லக்னம் எனப்படும் முதல் வீட்டில் ராகு
இருக்க கேது ஏழாம் வீட்டிலும் இருப்பர். மற்ற கிரகங்கள் இவர்களுக்கு இடையில்
அமைந்திருக்கும். இந்த தோஷம் இருப்பவர்களுக்கு இளமை காலம் மிகவும் சிரமமானதாகவும்,
கடினமானதாகவும் இருக்கும். சிலருக்கு திருமணத்தடை இருக்கும். திருமணத்திற்கு
பிறகான வாழ்க்கை அமைதியாக மாறிவிடும். இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் ராகு மற்றும்
கேது எட்டாம் வீட்டில் இருந்தால் பொருளாதரப் பின்னடைவு ஏற்படும். 32வயதுக்கு மேல்
நன்மைகள் உண்டு.
வேலையில் சிக்கல்
ராகு மூன்றாம் வீட்டிலும் கேது
ஒன்பதாம் வீட்டிலும் இருப்பதை வாசுகி கால சர்ப்பதோஷம் என்கிறார்கள். இவர்கள் எந்த
வேலையையும் துணிந்து செய்ய முன் வர மாட்டார்கள். நான்காம் வீட்டில் ராகுவும்
பத்தாம் வீட்டில் கேது இருந்தால் சங்கல்ப கால சர்ப்ப தோஷம் ஏற்படும். இவர்களுக்கு
வாசுகி கால சர்ப்ப தோஷ தாக்கத்துடன் கூடுதலாக மன அழுத்தம் ஏற்படக்கூடும். இவர்கள்
பார்க்கிற வேலை மற்றும் தொழிலில் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டேயிருக்கும்
ராகு அள்ளி கொடுப்பார்
ராகு தான் இருக்கும் இடத்தின்
வலிமையைக் கூட்டி வேகமாகச் செயல்பட வைப்பார். உதாரணமாக தன ஸ்தானத்திலோ அல்லது லாப
ஸ்தானத்திலோ ராகு அமர்ந்திருந்தால் தனமும், லாபமும் பெருகும் அதே போல புத்ர ஸ்தானத்தில்
அமர்ந்தால் நிறைய பிள்ளைகளைத் தருவார். இதற்கு நேர்மாறான பலனைக் கேது தருவார்.
அதாவது, தான் அமர்ந்திருக்கும் இடத்தின் வலிமையை முற்றிலுமாகக் குறைத்துவிடுவார்.
புத்திர தோஷம்
புத்திர ஸ்தானம் என்று கருதப்படும்
ஐந்தாம் இடத்தில் கேது தனித்து அமர்ந்திருந்தால் புத்ரதோஷம் என்று
வர்ணிக்கப்படுகிறது. இதனாலும் குழந்தை பாக்கியம் தாமதமாகலாமே தவிர தடைபடாது. இந்த
அமைப்பைப் பெற்றவர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. அதேபோல கடனைக் குறிக்கும்
ஆறாம் இடத்தில் கேது அமர்ந்திருந்தால் கடன், பிரச்னைகள் முற்றிலுமாகக் குறையும் என்றே
பலன் கொள்ள வேண்டும்.
திருமண தடை
ஏழாம் வீட்டில் ராகுவும் லக்னத்தில்
கேது இருந்தால் அது கால மிருத்யு சர்ப்ப தோஷம். இவர்களுக்கு 27வயதுக்கு பிறகு தான்
திருமணம் செய்ய வேண்டும். அதற்கு முன்னால் செய்து கொண்டால் அது நிலைக்காது.
எட்டாம் வீட்டில் ராகுவும் இரண்டாம் வீட்டில் கேதுவும் இருந்தால் அது கார்க்கேடக
கால சர்ப்ப தோஷம். பூர்வீக சொத்துக்களால் இவருக்கு ஆபத்துக்கள் உண்டு. தந்தை வழி
சொத்தினை அடைய ஆசைப்பட்டால் தவறாகி விடும்.
கால சர்ப்ப தோஷம்
ஒன்பதாம் வீட்டில் ராகுவும் மூன்றாம்
வீட்டில் கேதுவும் இருந்தால் சங்ககுட கால சர்ப்பதோஷம் ஏற்படும். இவர்களுக்கு சீரான
ஒரு வாழ்க்கை அமையாது. மேடு பள்ளங்கள் நிறைந்ததாகவே இருக்கும். தொடர்ந்து தனது
இருப்பை தக்கவைத்துக் கொள்ள பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டிய
அவசியம் இவர்களுக்கு உண்டு. 10ஆம் வீட்டில் ராகு மற்றும் நான்காம் வீட்டில் கேது
இருந்தால் அதன் பெயர் கடக கால சர்ப்ப தோஷம் ஏற்படும்
கல்வி யோகம்
பதினோராம் இடத்தில் ராகு மற்றும்
ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் அதன் பெயர் விஷ்தார கால சர்ப்ப தோஷம். அடிக்கடி
பயணம் மேற்கொள்கிற வேலை அமையும். இதனால் உடல்நலனில் ஏதாவது சிக்கல்கள் வந்து
கொண்டேயிருக்கும். பன்னிரெண்டாம் இடத்தில் ராகு மற்றும் ஆறாம் இடத்தில் கேது
இருக்க இதனை ஷேஷ கால சர்ப்ப தோஷம் என்பார்கள். இவர்களுக்கு கல்வி யோகம் நிறைய
இருக்கிறது. கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்கு எதிரிகளும்
அதிகமிருப்பார்கள்.
பரிகாரம் என்ன
ராகு, கேதுகளினால் தோஷம் ஏற்பட்டு
பருவமடைந்தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரமும், வேப்ப
மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாக சிலைக்கு பால் விட்டு, அபிஷேகம் செய்து
வர நன்மைகள் நடைபெறும். தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர
வேண்டும். நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும்.
பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள
வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.
கேதுவிற்கு பரிகாரம்
கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும்
எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம். கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு
கலந்த சாதத்தை நைவேத்யாமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய்
விளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும். காஞ்சியில் உள்ள சித்ரகுப்தன் கோவில் சென்று
வழிபாடு செய்வது நன்மை தரும். வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை வழிபாடு
செய்வதால் நன்மை உண்டாகும். கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், முதற்கடவுளான
விநாயக பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும். மாத சங்கடஹர
சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறு
தோறும் ஆஞ்சநேயப் பெருமானை துளசியினால் அர்ச்சித்து வரலாம். கும்பகோணம் அருகே
நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடனை தரிசனம் செய்து வர நன்மைகள் நடைபெறும்.
Sir enaku mithuna lagnam lagnathil Rahu ullathu.. Thanusu veetil sevvai+ketu ullathu.. Enaku rahu ketu dosham irukaa ilaya??
பதிலளிநீக்கு