Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

அர்ஜூனன் பிறப்பு...!


ணியாட்கள் அஸ்தினாபுரம் அரண்மனைக்கு சென்று அடைந்தனர். பாண்டு தவ வாழ்க்கை மேற்கொண்ட செய்தியை அனைவரிடமும் தெரிவித்தனர். அனைவரும் இதை அறிந்து மிகவும் துன்பம் அடைந்தனர். திருதிராஷ்டிரன் தன் தம்பி தவ வாழ்க்கை மேற்கொண்டதை நினைத்து புலம்பி அழுதான். பாண்டு சித்தர்களும், முனிவர்களும் வாழும் மலைகளிலும், காடுகளிலும் சில காலம் தங்கினான். வெகு விரைவிலேயே பாண்டு தன்னை முழுமையாக தவ வாழ்க்கைக்கு அர்ப்பணித்தான். அங்கு வாழும் முனிவர்களும், சித்தர்களும் பாண்டுவை தன் மகன் போல் அன்பாக பார்த்துக் கொண்டனர். அதே போல் பாண்டுவும் சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும் இயன்ற அளவு பணிவிடை செய்தான்.

ஒரு அமாவாசை நாளில் முனிவர்கள் பிரம்ம தேவனைக் காண ஒன்று கூடினர். அதைப் பார்த்த பாண்டு அவர்களிடம் சென்று, தாங்கள் அனைவரும் எங்கு செல்கிறீர்கள்? எனக் கேட்டான். முனிவர்கள், மன்னா! பிரம்ம தேவனின் வசிப்பிடத்தில் தேவர்களும், முனிவர்களும் ஒன்று கூடுவர். நாங்கள் அதைக் காண செல்கிறோம் என்றனர். இதைக் கேட்ட பாண்டு, நானும் தங்களுடன் வருகிறேன் எனக் கூறி தனது இரு மனைவிகளுடன் புறப்பட்டான். முனிவர்கள், மன்னா! நாங்கள் வடக்கு நோக்கி செல்லும் பயணத்தில், அடர்ந்த காடுகளும், சமமும் சமமற்ற மலைகளும், நதிகளின் கரைகளும், ஆழமான குழிகளும், மனிதர்களால் செல்ல முடியாத சில பகுதிகளும் இருப்பதை நாங்கள் கண்டுள்ளோம். அதுமட்டுமல்லாமல் பனிகளால் காய்கனிகள் மூடப்பட்டிருக்கும், நாம் பார்த்திடாத பல மிருகங்களும் இருக்கும், அத்தகைய இடத்தில் காற்று மட்டுமே செல்ல முடியும்.

இத்தகைய இடத்தில் பெரும் முனிவர்களும், சித்தர்களும் மட்டுமே செல்ல முடியும். அங்கு இளவரசிகள் எவ்வாறு வருவார்கள். அந்த இடங்களை இவர்கள் எவ்வாறு கடப்பார்கள். அதனால் ஏற்படும் துன்பங்கள் இவர்கள் எப்படி தாங்குவார்கள். அதனால் மன்னா! நீங்கள் எங்களுடன் வர வேண்டாம் என்றனர். பாண்டு, முனிவர்களே! நான் மகனற்றவன். நான் முனிவர்களுக்கும், சக மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் ஆற்ற வேண்டிய கடன்களை தீர்த்துவிட்டேன். முன்னோர்கள், நாம் பிள்ளைகள் பெறுவதாலும், ஈமக்கடன்கள் செய்வதாலும் கடன் அடைபடுகின்றனர். ஆனால் நான் இந்த கடனில் இருந்து விடுபடவில்லை. அதனால் நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். என் தந்தை என்னை பெற்றெடுத்தை போல நானும் பிள்ளைப்பேறு பெறுவேனா? எனக் கேட்டான்.

முனிவர்கள், மன்னா! உனக்கு திறமை வாய்ந்த, தேவர்கள் போன்ற சந்ததி உள்ளது. இதை நாங்கள் ஞான கண்ணால் காண்கிறோம். உன் சந்ததி மக்கள் திறமையானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள் என்றனர். முனிவர்கள் கூறியதைக் கேட்ட பாண்டுவின் மனதில், மானினால் ஏற்பட்ட சாபம், அவன் மனதை வருத்தியது. அதன் பிறகு பாண்டு குந்தியை தனியாக அழைத்துச் சென்று, குந்தி! நான் மானின் சாபத்தில் நம் சந்ததி தழைக்க தடையாகிவிட்டேன். நம் சந்ததி தழைக்க வாரிசை உருவாக்க முயற்சி செய் என்றான். குந்தி, தாங்கள் அறம் சார்ந்தவர். நீங்கள் இவ்வாறு என்னிடம் பேசுதல் கூடாது. நான் தங்களுக்கு மட்டுமே உரியவள். உங்களை தவிர வேறு எந்த மனிதனையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. இவ்வுலகில் தங்களை காட்டிலும் சிறந்த மனிதன் வேறும் இல்லை எனக் கூறினாள்.

பாண்டு, குந்தி ஒருவருக்கு வாழ்க்கையில் புத்திரர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. கணவன் பணிந்து சொல்வதை மனைவியர் செய்ய வேண்டும். புத்திர திறனை இழந்த நான், குழந்தைகளை காண வேண்டும் என விரும்புகிறேன். அதனால் நீ ஒரு அந்தணர் மூலம் எனக்கு புத்திர செல்வத்தை தர வேண்டும் என்றான்.

குந்தி, மன்னா! நான் இளமைப்பருவத்தில் துர்வாச முனிவருக்கு சேவை செய்தேன். அந்த சேவையினால் மகிழ்ந்த துர்வாச முனிவர் எனக்கு ஒரு வரம் கொடுத்தார். தேவர்களில் எவரேனும் ஒருவரை மனதில் நினைத்து மந்திரத்தை கூறினால் அவர்கள் மூலம் குழந்தைகள் பிறக்கும் என்பது தான். இன்று உங்களின் விருப்பத்திற்காக அந்த வரத்தை உபயோகிக்கிறேன். நான் இப்பொழுது தேவர்களில் யாரை அழைப்பது என்று சொல்லுங்கள். குந்தியே! நமது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள தர்மதேவனை அழைப்பாயாக. தர்மதேவனால் பெறப்படும் மகன் நீதிநெறி தவறாமல், ஒழுக்கத்திற்கு அதிபதியாக இருப்பான். அதனால் மனதார தர்மதேவனை நினைப்பாயாக என்றான். குந்தி, தங்கள் கட்டளையே எனது விருப்பம் என்றாள்.

அங்கு அஸ்தினாபுரத்தில் காந்தாரி, கருவுற்று ஒரு வருடம் ஆகியிருந்தது. குந்தி, தர்மதேவனை மனதில் நினைத்து மந்திரத்தை உச்சரித்தாள். மந்திரத்திற்கு கட்டுப்பட்டு தர்மதேவன் குந்தி முன் தோன்றி அழகிய மகனை கொடுத்தான். அப்பொழுது அசரீரி ஒன்று ஒலித்தது. இக்குழந்தை மனிதர்களில் சிறந்தவனாகவும், அறம்சார்ந்தவர்களில் முதன்மையானவனாகவும், வீரமும், பேச்சில் உண்மையும் கொண்டு இந்தப் பூமியை ஆள்வான். பாண்டுவின் முதல் குழந்தை யுதிஷ்டிரன் என்ற பெயரால் அறியப்படுவான் என்றது. அதன் பிறகு பாண்டு, சத்தியர்கள் பலம்மிக்கவனாக இருக்க வேண்டும். அதனால் பலம் பொருந்திய மகனை கேட்பாயாக என்றான். குந்தி, மனதில் வாயுதேவனை நினைத்து மந்திரத்தை உச்சரித்தாள். மந்திரத்திற்கு கட்டுப்பட்டு வாயுத்தேவன் குந்தி முன் தோன்றி பலம் பொருந்திய மகனை கொடுத்தார். அப்பொழுது அசரீரி ஒன்று ஒலித்தது. இக்குழந்தை பெரும் பலசாலியாக இருப்பான். இவன் பீமன் என்று அறியப்படுவான் என்றது.

அதன் பின் பாண்டு தனக்கு உலகப் புகழ் பெறும் மிகச் சிறந்த மகனை நான் எப்படி அடையப்போகிறேன். இந்திரன், தேவர்களுக்குத் தலைவன் ஆவான். நிச்சயமாக, அவனே அளவிடமுடியாத பலமும், சக்தியும், வீரமும், புகழும் கொண்டவன். இந்திரனை திருப்திப்படுத்தி, அவனைப் போன்ற பெரும் பலம் கொண்ட மகனை நான் பெறுவேன் என தீர்மானித்தான். பிறகு குந்தியை ஒரு வருடம் இந்திரனுக்காக நோன்பு இருக்க செய்தான். அதன் பிறகு குந்தி மனதில் இந்திரனை நினைத்து மந்திரத்தை உச்சரித்தாள். இந்திரன் அவர்கள் முன் தோன்றி உன் நோன்பு வெற்றி பெற்றது. உனக்கு ஒரு மகனை கொடுக்க விரும்புகிறேன் எனக் கூறி ஒரு மகனை கொடுத்தார். அப்பொழுது அசரீரி ஒன்று ஒலித்தது. இக்குழந்தை மிகுந்த திறமையுடையவனாகவும், சாதனை புரிபவனாகவும், பெரும் புகழையும் அடைவான். இவன் அர்ஜூனன் எனப் பெயரோடு அறியப்படுவான் என்றது.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக