ஹெலன் கெல்லர் என்ற ஆங்கில நாவலாசிரியையின் பிரபல
நாடகம் ``மூன்று நாள் மட்டுமே பார்வைத் திறன் (Three Days to See)’’. ஒருவருக்கு
மூன்று நாளில் பார்வைத் திறன் பறிபோய்விடும் என்ற நிலை ஏற்பட்டால் அவர் எவற்றை
பார்க்க விரும்புவார் என்பதை தத்ரூபமாக விவரிக்கும் இந்த நாடகம்.
கிட்டதட்ட இந்த நிலைதான் இப்போது வோடபோன்
நிறுவனத்துக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும். ஆனால், ஒரு வித்தியாசம் கால
அவகாசம் மட்டும் நிர்ணயிக்கப்படவில்லை. பார்வை பறிபோகுமா, போகாதா என்ற
இரண்டுங்கெட்டான் பரிதவிப்பு சூழல்தான் நிலவுகிறது.
ஏறக்குறைய 14 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த
வழக்குதான் வருவாய்ப் பகிர்வு அடிப்படையிலான ஒப்பந்தமாகும். இந்த வழக்கில் உச்ச
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழலுக்கு
தள்ளப்பட்டுள்ளது வோடஃபோன் ஐடியா நிறுவனம்.
இந்நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை
ரூ.53 ஆயிரம் கோடியாகும். இதுதவிர நிறுவனத்துக்கு உள்ள கடன் பொறுப்புகள்
ரூ.1,15,850கோடியாகும். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கு செலுத்த வேண்டிய கட்டணபாக்கி
ரூ.88,530 கோடியாகும்.
இந்நிறுவனம் செலுத்த வேண்டிய வரித்தொகை மட்டும்
ரூ. 4,293 கோடி. இவை அனைத்தையும் சேர்த்தால் அரசுக்கு வோடபோன்-ஐடியா செலுத்த
வேண்டிய தொகை ரூ.1.50 லட்சம் கோடியாகும்.
முன்னாள் தணிக்கை அதிகாரி வினோத் ராய் சுட்டிக்
காட்டிய 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்த ஊழலால், அரசுக்கு வருவாய் இழப்பு
நேர்ந்ததாகக் கூறப்படும் ரூ.1.76 லட்சம் கோடிக்கு கொஞ்சம் குறைவான தொகை இது.
ஆனால், வினோத் ராய் கணக்கு ஊகத்தின் அடிப்படையில் கூறப்பட்டது. வோடபோன் ஐடியா
விஷயத்தில் செலுத்த வேண்டிய தொகை உண்மையானது. இந்தத் தொகையை நிறுவனம்
செலுத்துவதைத் தவிர வேறு வழி இதுவரை இல்லை.
வங்கிகள் நிதி நெருக்கடியை சந்திக்கும்போது அது
அரசுக்கு பெரும் பாதிப்பாக அமைகிறது. இதனாலேயே வங்கிகளுக்கு அவ்வப்போது அரசு
மூலதனம் வழங்கிவருகிறது. ஆனால், தொலைத் தொடர்புத் துறையைப் பொறுத்தமட்டில் அரசு
அவ்விதம் அக்கறை காட்டுவதில்லை. ஒருவேளை வோடஃபோன் விவகாரத்தில் அரசு நடப்பது
நடக்கட்டும், அது நிறுவனத்தின் பிரச்சினை என்று கண்டுகொள்ளாமல் இருந்தால் என்ன
ஆகும்?
கடந்த ஆண்டு டிசம்பரிலேயே வருவாய்ப் பகிர்வு
தொகைக்கு அரசு தீர்வுகாணாவிட்டால், தொழிலை மூடிவிட்டு செல்வதைத் தவிர வேறு
வழியில்லை என்று மனம் வெதும்பி குறிப்பிட்டுள்ளார் தொழிலதிபர் குமார் மங்களம்
பிர்லா. ஒருவேளை வோடஃபோன் நிறுவனம்வேறு வழியின்றி திவால் நோட்டீஸ் அளிக்குமேயானால்
என்ன விளைவுகள் உருவாகும். வங்கிகளுக்கு வோடஃபோன்-ஐடியா செலுத்த வேண்டிய ரூ.25,000
கோடி கடன் திரும்ப கிடைப்பது நிச்சயம் சிக்கலாகும். பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே
இந்நிறுவனத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி கடன் வழங்கிஉள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க்ஆஃப் பரோடா
உள்ளிட்ட வங்கிகளும் கணிசமான அளவுக்கு கடன் வழங்கிஉள்ளன. தனியார் வங்கிகளில்
இண்டஸ்இந்த் வங்கி ரூ.3 ஆயிரம் கோடியும், ஐசிஐசிஐ வங்கி ரூ.1,700 கோடியும்,
ஹெச்டிஎஃப்சி வங்கி ரூ.500 கோடியும் கடன் வழங்கியுள்ளன.
இந்நிறுவனத்தில் மேலும் முதலீடுஎதையும்
மேற்கொள்ளப் போவதில்லை என்று 47 சதவீத பங்குகளை வைத்துள்ள வோடபோன் நிறுவனமும், 53
சதவீத பங்குகளைக் கொண்டுள்ள பிர்லா குழுமமும் தெள்ளத் தெளிவாக கூறிவிட்டன. அரசின்
தலையீடு மட்டும்தான் நிறுவனம் திவால் ஆவதிலிருந்து காப்பாற்ற முடியும் என்று
வோடபோன் சிஇஓ நிக் ரீட் தெரிவித்துவிட்டார்.
இந்நிறுவனம் திவாலானால் அது மத்திய அரசின்
நிதிப் பற்றாக்குறையில் 40 அடிப்படை புள்ளிகள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்று
கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக வோடபோன் ஐடியா நிறுவனம் 37 கோடி
வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. வோடபோன்-ஐடியா சேவை நின்று போனால் 37 கோடி
வாடிக்கையாளர்களது மொபைல் சேவையும் தொடர்பு எல்லைக்கு அப்பால் செல்வதுநிதர்சனம்.
அடுத்ததாக இந்நிறுவனத்தில்பணிபுரியும் 13,500 பேரின் வேலைகேள்விக்குறியாகும்மேலும்
இந்நிறுவனத்தின் விநியோகஸ்தர்களுக்கும் அவர்களிடம் பணி புரிவோருக்கும் பிங்க்
ஸ்லிப் நிச்சயம்.
இந்நிறுவன வாடிக்கையாளர்களில் 40 சதவீதம் பேர்
ரிலையன்ஸ் ஜியோவுக்கும், 60 சதவீதம் பேர் ஏர்டெல்லுக்கு மாறுவதாக
வைத்துக்கொள்ளலாம். வருங்காலத்தில் இவ்விரு நிறுவனங்கள் மட்டுமே சந்தையில்
நிலைத்திருக்கும். தற்போது மும்முனை போட்டியாக உள்ள இத்துறை இருமுனை போட்டியாக
மாறும். ஒருவேளை வோடஃபோன்ஐடியா நிறுவனத்தைக் காக்க வேண்டும் என அரசு முடிவு
செய்தால், இந்நிறுவனத்தை அரசே ஏற்று ஏற்கெனவே நொடித்துபோன பொதுத்துறை நிறுவனங்களான
பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுடன் சேர்த்துவிடலாம்.
தற்போதைய சந்தை மதிப்பீட்டின்படி வோடஃபோன்
ஐடியா நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகைக்கு ஈடாக 90 சதவீத பங்குகளைஅரசு பெற
முடியும். இந்த நடவடிக்கையானது வோடபோன் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை
எடுத்துபிஎஸ்என்எல்-எம்டிஎன்எல் நிறுவனத்தில் அரசு முதலீடு செய்ததைப் போலஆகிவிடும்.
இதன் மூலம் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 50 கோடி வாடிக்கையாளர்களைக்கொண்ட
பெரிய தொலைத் தொடர்புநிறுவனமாக உருவாகும் வாய்ப்பு உள்ளது. வங்கிகளுக்கு செலுத்த
வேண்டிய பெருமளவு கடன் தொகையும் திரும்புவதற்கான வாய்ப்பு உள்ளது. வேலையிழப்பையும்
ஓரளவு தவிர்க்க முடியும்.
மேலும் தொலைத் தொடர்பு துறைஅல்லாத பொதுத்துறை
நிறுவனங்கள் சில அலைக்கற்றையை தங்களது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தி
வருகின்றன. இவையும் வருவாய்ப் பகிர்வு அடிப்படையில் செலுத்த வேண்டியுள்ளன. அதன்படி
பார்க்கையில் கெயில் இந்தியா ரூ. 1.83 லட்சம் கோடியும், ஆயில் இந்தியா நிறுவனம்
ரூ.48,500 கோடியும், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ரூ. 21,953 கோடியும், குஜராத்
நர்மதா வேலி பெர்டிலைசர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனம் ரூ. 15,020 கோடியும்
செலுத்த வேண்டும்.
அரசு நிறுவனங்கள் வர்த்தக நோக்கில்
அலைக்கற்றையைப் பயன்படுத்தவில்லை என்றவாதத்தை ஏற்றாலும், அவை செலுத்தவேண்டிய தொகை
குறித்து உச்ச நீதிமன்றம் எவ்வித கருத்தும் தெரிவிக்காமலிருப்பது ஏன் என்றே
புரியவில்லை. அரசு நிறுவனங்களுக்கு ஒரு விதியும், தனியார் நிறுவனங்களுக்கு ஒரு
விதியும் இந்த விஷயத்தில் பின்பற்றப்படுகிறதா என்பதும் இங்கே எழுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் பு ரிலையன்ஸ் ஜியோ
தனது சேவையைத் தொடங்கியபோது, அது தொலைத் தொடர்பு துறையில் மிகப் பெரும் சூறாவளியை
உருவாக்கும் என ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் கருதின. ஆனால், அவை
அனைத்துமே வருவாய் பகிர்வு என்ற சுனாமி உருவாவதை சிறிதும் கணிக்காதது மிகப் பெரும்
பாதிப்பாக தற்போது அமைந்துள்ளது. ஜியோவின் போட்டியைச் சமாளிப்பதில் கவனம்
செலுத்திய இந்த நிறுவனங்கள் வருவாய்ப் பகிர்வு விவகாரத்தில் கோட்டைவிட்டுவிட்டன.
ஏர்டெல் எப்படியோநிதி திரட்டி தப்பித்துக்கொண்டது.
ஆனால், ஒரு துறையின் நலன் என்பது பல்வேறு
பொருளாதார, சமூக காரணிகளை உள்ளடக்கியது என்பதை அரசு உணர வேண்டும். அதுவும் தொலைத்
தொடர்பு துறைதான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய துறையாக மாறியிருக்கிறது.
தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் சரி,
பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அரசின் நடவடிக்கைகள் பெருவாரியான
மக்களின்நலன்களைப் பொறுத்தே இருக்கவேண்டும். இந்த வருவாய்ப் பகிர்வுதொகை
விவகாரத்தில் தெளிவான விதிமுறைகளும், அதை அமல்படுத்தபோதிய சட்ட பாதுகாப்புகளும்
இல்லாததே இப் பிரச்சினைக்கு காரணம். எனவே, மத்திய அரசு தனக்குள்ள பொறுப்பை தட்டிக்கழிக்க
முடியாது.
நவீன பொருளாதாரத்தின் தந்தை ஆடம் ஸ்மித் கூறிய
கருத்துகளை இங்கேபொருத்திப் பார்க்கலாம். அதாவது தனி நபர்கள் சொந்த நலனில் அக்கறை
கொண்டு செயல்படும்போதுதான் மிகச்சிறந்த பொருளாதாரப் பலன்களை அடைய முடியும்.
ஏஜிஆரைச் செலுத்துவதற்கு வோடஃபோன் ஐடியா மிகவும்சிரமப்படுகிறது.
இந்திய அரசு தன்னுடைய சொந்த நலனில் அதிக
அக்கறையுடன் செயல்பட நினைத்தால் வோடஃபோன் எப்படியாவது போகட்டும் என்று
விட்டுவிட்டு அது செலுத்த வேண்டிய நிலுவையை மட்டும் வசூலிப்பதில் குறியாக
இருக்கலாம். அல்லது மாற்று வழியைச் சிந்திக்கலாம். எந்த வழியை அரசு
தேர்ந்தெடுக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக