ஒரு காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்த தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தது. அதனால் அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது. ஆனால் அந்த பொல்லாத தேள் நம்மைக் கொட்டிவிடும் என்ற பயத்தில் தேளுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டன.
எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள் யோசித்துக் கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள், ஆமையிடம், ஆமையாரே! நான் அக்கரைக்கு செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா? என்று கேட்டது.
அதற்கு ஆமை நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளுங்கள், உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்! என்று ஆமை கூறியது. தேளும் ஆமையின் முதுகில் ஏறிக்கொண்டது. ஆமை நீரில் நீந்திச் செல்ல ஆரம்பித்தது.
சிறிது தூரம் ஆமை சென்றதும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது. நான் பல பேரைக் கொட்டியிருக்கிறேன். அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன். ஆனால் நான் ஒரு நாளும், ஆமையை கொட்டவில்லை. இந்த ஆமையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று ஆமையை கொட்டிப் பார்க்க நினைத்தது.
உடனே, தேள் ஆமையின் முதுகில் கொட்டியது. ஆனால் ஆமை பேசாமல் சென்று கொண்டிருந்தது. உடனே தேள் ஆமையைப் பார்த்து ஆமையாரே! உமது முதுகு கடினமாக இருக்கிறதே. உமது உடம்பில் வலியே வருவதில்லையா? என்று கேட்டது.
தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத ஆமை, எனது முதுகு கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளது. அதனால் எனக்கு அந்த இடத்தில் வலி வருவதில்லை. ஆனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும். இதில் தான் எனக்கு வலிகள், காயங்கள் ஏற்படும் என்று ஆமை கூறியது.
ஆமை கூறியதைக் கேட்ட தேள், மெதுவாக ஆமையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது. கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்கு சென்ற தேள் ஆமையை கொட்ட ஆரம்பித்தது. தலையில் ஏதோ குத்தியதால், ஆமை விடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டது. தேள் நீரோடையில் விழுந்து விட்டது.
தனக்கு உதவி செய்த ஆமைக்கு கேடு விளைவிக்க நினைத்த தேள் இப்பொழுது தண்ணீரில் மூழ்கி இறந்தது. ஆமை கரையை நோக்கி நீந்திச் சென்றது.
தத்துவம் :
ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் நமக்கு உதவி செய்தால், அவரின் உதவியை நாம், நம் வாழ்நாளில் என்றுமே மறந்து விடக்கூடாது. அவர்களுக்கு நன்றியுடையவராக இருக்க வேண்டும். மாறாக அவருக்கு கேடு செய்ய நினைத்தால், அது நம்மையே வந்து சேரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக