அனந்தபுரம் என்ற ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு நாள், ஒரு ஞானியை சந்தித்து, அவர் தன்னிடம் நிறைய செல்வங்கள் இருப்பதாகவும், அச்செல்வத்தை வைத்து, அவர் இதுவரை செய்த தானங்கள் அனைத்தையும் கூறி இதற்கு என்ன பலன் கிடைக்கும்? என்று கேட்டார்.
செல்வத்தால் புண்ணியத்தையும், மோட்சத்தையும் விலைக்கு வாங்க முடியாது என்பதை செல்வந்தருக்கு உணர்த்த எண்ணிய ஞானி, அவரை நாளை மதிய வேளையில் தன்னை வந்து சந்திக்கும்படி கூறி அனுப்பி வைத்தார்.
மறுநாள் மதியவேளை, செல்வந்தர் ஞானியைப் பார்க்க வந்தார். ஞானியும், அவரும் சேர்ந்து சிறிதுதூரம் நடக்க ஆரம்பித்தனர். மதியவேளை என்பதால் வெயில் அதிகமாக இருந்தது. செல்வந்தருடைய கால்களுக்கு வெயிலைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வெயிலில் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தார்.
செல்வந்தரின் நிலையைக் கண்ட ஞானி, செல்வந்தரைப் பார்த்து, தாங்கள் நடந்து வருவதில் வேகம் குறைகிறதே ஏன்? என்று கேட்டார். அதற்கு செல்வந்தர், கடுமையான வெயில் அடிப்பதால், வெயில் காலைச் சுடுகின்றது. என்னால் வெயில் சூடு தாங்க முடியவில்லை என்றார்.
அதற்கு ஞானி, நீங்கள் நடந்து வரும்போது உங்களது உருவத்தின் நிழல் தரையில் விழுகிறதல்லவா, அந்த நிழலில் நடந்து வர முயற்சி செய்து பாருங்கள். அப்போது உங்கள் கால்களை வெயில் சூடு அதிகம் தாக்காமல் இருக்கும் என்றார்.
உடனே செல்வந்தர், தனது நிழலின் மீது கால்களை ஊன்றி நடக்க முயன்றார். ஆனால் அவருடைய நிழல் அவர் நடந்து செல்ல செல்ல, அவருடைய நிழலும் நகர்ந்து நகர்ந்து சென்றதால், அவரால் அவருடைய நிழலில் காலை ஊன்றி நடக்க இயலவில்லை.
உடனே ஞானி, அந்த செல்வந்தரைப் பார்த்து சிரித்தார். செல்வந்தர், எதற்காக சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு உங்களின் நிழலே உங்களுக்கு உதவவில்லை. நீங்கள் சேர்த்து வைத்துள்ள செல்வங்கள் எப்படி உங்களுக்குப் புண்ணியம் கிடைக்க உதவி செய்யும் என்று கேட்டார்.
அப்போதுதான் செல்வந்தருக்கு தான் சேர்த்து வைத்துள்ள செல்வத்தினால் மட்டும் புண்ணியத்தையும், மோட்சத்தையும் பெற முடியாது என்பதையும், பலனை எதிர்பார்த்து தானம் செய்யக்கூடாது என்பதையும் புரிந்து கொண்டார்.
தத்துவம் :
பலனை எதிர்பார்த்து எந்தவொரு செயலையும் செய்வது தவறு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக