சுவாமி! தாங்கள் அன்னையிடம் கணவரை பிரியக்கூடாது என்று சொன்னீர்கள். ஆனால் நான் தங்களை விட்டு பிரிந்து இருக்கலாமா? தாய்க்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? என்னை வரவேண்டாம் என்று சொன்னால் நான் உயிரற்ற ஒரு பொருள் ஆகிவிடுவேன் என்று சொல்லி தான் அணிந்திருந்த ஆடை ஆபரணங்களை அகற்றி கானகம் செல்லக்கூடிய ஆடையை அணிந்து தன் கணவனான இராமனின் திருவடியில் விழுந்து வணங்கினாள்.
இராமர், சீதை, இலட்சுமணர் மூவரும் வனம் செல்ல புறப்பட்டனர். இராமர் வசிஷ்டர் மற்றும் தன் தாய்மார்களை தொழுது வணங்கி விடைப்பெற்றார். சுமந்திரருடைய வேண்டுகோளின்படி அவர்கள் மூவரும் தேரில் ஏறி சென்றனர். அயோத்தி மக்கள் அனைவரும் இராமரை தொழுது, தேரை பின் தொடர்ந்து சென்றனர். இராமர் தன்னிடம் உள்ள பொன், பொருள் எல்லாவற்றையும் ஏழைகளுக்கு வழங்கினார்.
தேர் வெகு தூரம் சென்றது. மாலை மங்கி இருள் சூழ்ந்தது. மக்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். இராமர் சுமந்திரரை நோக்கி, தாங்கள் தேருடன் ஊர் திரும்புவீராக. அப்போது தான் மக்கள் அனைவரும் ஊர் திரும்புவார்கள். என் தாய் தந்தையருக்கு என் வணக்கத்தை சொல்வீராக என்றார். சீதை, தன் தங்கைகளுக்கு ஆசி கூறி தான் வளர்க்கும் கிளிக்கு வேளை தவறாமல் உணவு தர சொல்லி கூறி அனுப்பினாள்.
தசரதர் மயக்கம் தெளிந்து கௌசலையை பார்த்து தனக்கு நேர்ந்த சாபம் பலித்து விட்டது எனக்கூறி அழுதார். பல வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் நான் வேட்டையாட சென்ற போது, ஒரு முனிவரின் மகன் குளத்தில் சுரைக்காய் போன்ற ஒரு குப்பியில் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்தான். நான் ஒரு மறைவிடத்தில் நின்று கொண்டு யானை தான் தண்ணீர் குடித்து கொண்டிருக்கிறது என நினைத்து அந்த திசையை பார்த்து அம்பு எய்தினேன். பிறகு அந்த திசையில் இருந்து வந்த மனிதனின் சத்தத்தை கேட்டு அங்கு சென்று பார்த்தேன். அப்போது தான் எனக்கு தெரிந்தது. நான் எய்திய அம்பு யானை மீது அல்ல ஒரு பாலகன் மீது என்று. மேலும் அங்கே அந்த பாலகன் இறக்கும் தருவாயில் இருப்பதையும் கண்டேன். நான் செய்த தவறால் ஒரு பாலகன் இறந்ததை எண்ணி, அப்பாலகனின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்க நினைத்தேன்.
உடனே அப்பாலகனின் பெற்றோரிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். அவர்கள் நான் புத்திர சோகத்தை உணர வேண்டும் என்றும், புத்திர சோகத்தால் மடிய வேண்டும் என்றும் சாபமிட்டார்கள். அப்போது எனக்கு குழந்தை பிறக்கவில்லை. ஆனால் அவர்கள் கொடுத்த அந்த சாபம் இப்போது பலித்துவிட்டது என்று எண்ணி புலம்பினார். வசிஷ்டரிடம் தசரதர், கைகெயி எனக்கும் மனைவியும் இல்லை. பரதன் எனக்கு மகனும் இல்லை எனக் கூறினார். அவன் தனக்கு கடைசி ஈமச்சடங்கை கூட செய்யக்கூடாது என கூறினார்.
சுமந்திரர் தேரை செலுத்தி அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். அரண்மனைக்கு சென்று தசரத சக்ரவர்த்தியை சந்தித்தார். தசரதர் சுமந்திரரை பார்த்து எனது மகன்? எங்கே என்று கேட்டார். சுமந்திரர் மௌனத்தை வைத்து இராமர் கானகம் சென்றதை உணர்ந்தார். தசரதர் இராமரை நினைத்து, இராம இராம இராம என சொல்லி கொண்டு அவரின் உயிர், ஆன்ம ஒளியாக உடலில் இருந்து பிரிந்தது. தேவர்கள் வரவேற்க அவர் விண்ணுலகத்தை சேர்ந்தார். தசரதரின் மறைவை அறிந்து மக்கள் அனைவரும் கதறி அழுதார்கள்.
தொடரும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக