அரசகுமாரியான உஷை கூறியதைக் கேட்ட அநிருத்தன் உஷையின் முகத்தை கரங்களில் ஏந்தியவாறு அச்சம் வேண்டாம் தேவி. நான் இவர்கள் அனைவரையும் வென்று உன்னை என் நாட்டிற்கு அழைத்துச் செல்வேன். எதற்கும் கவலை வேண்டாம். நான் இதில் வெற்றி பெற்றே தீருவேன் என்றும், என் மீது நம்பிக்கை கொள் என்றும் கூறி உஷையின் விழிகளில் வழிந்த முத்தான நீர் துவலைகளை துடைத்தார்.
வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமானாலும் அவ்வளவு எளிதாக என்னை, உன்னிடம் இருந்து பிரிப்பது என்பது முடியாத காரியமாகும். அதுமட்டுமின்றி நான் உன் மீது மிகுந்த அன்பும், காதலும் கொண்டுள்ளேன். நம் விருப்பமும், எண்ணமும் என்னை வழிநடத்தி உன்னிடம் என்னை என்றும் நிலைபெறச் செய்யும் என்று கூறி தன் நாயகியின் மனதில் இருந்த அச்சத்தை போக்கினார்.
அவ்வேளையில் அசுர வீரர்கள் தங்களிடமிருந்த ஆயுதங்களை அநிருத்தனை நோக்கி எறிந்தனர். அப்போது அநிருத்தன் அந்தப்புரத்தில் இருந்த மரக்கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு தன்னை எதிர்க்க வந்த வீரர்களை நோக்கி பாய்ந்து, தன்னிடம் உள்ள சிறு கட்டையைக் கொண்டு அவர்கள் அனுப்பிய சில ஆயுதங்களை தடுத்து, தன்னை நோக்கி அனுப்பிய சில ஆயுதங்களை பிடித்து வீரர்களை நோக்கி திருப்பி எறிந்தார்.
அதிக எண்ணிக்கையை கொண்ட வீரர்கள் இருப்பினும் அநிருத்தன் கற்ற போர் கலைக்கு முன்னர் அந்த வீரர்களால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க இயலவில்லை. அநிருத்தன் எறிந்த ஆயுதங்களின் வேகமானது எதிரிகளின் வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் சென்று அவர்களை பதம்பார்த்தது.
இதனால் எதிரிகளின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது. காலம் கடக்க கடக்க எதிராளிகளின் எண்ணிக்கை குறைந்து சொற்ப எண்ணிக்கை அடையத் தொடங்கின. இந்நிலை தொடர்ந்து கொண்டே இருந்தால் நாம் தோற்பது உறுதி என்பதை அறிந்த வீரர்களில் சிலர் இச்செய்தியை தனது மந்திரியிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று கூறி மந்திரியான குபாண்டன் இருக்கும் இடத்தை அடைந்து நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்தார்கள்.
குபாண்டன் வீரர்களின் பேச்சை கேட்டு சற்றும் எதிர்பார்க்க முடியாத ஆச்சரியத்துடன் காணப்பட்டார். பல அரசர்கள் நம் வீரர்களைக் கண்டு பயந்து ஓடினார்கள். ஆனால், இன்று சாதாரண ஒரு தனிநபரிடம் தங்களது படைவீரர்கள் தோற்றுக்கொண்டு இருப்பதை எண்ணி வியப்படைந்தார்.
அநிருத்தன் சாதாரணமானவனாக இருக்க இயலாது என்பதை யூகித்த மந்திரி தனது வேந்தனிடம் இச்செய்தியை பற்றி கூற வேண்டுமென்று வேந்தன் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாகவும், விவேகத்துடனும் செல்லத் தொடங்கினார்.
மந்திரி குபாண்டன், வேந்தர் இருக்கும் இடத்தை அடைந்து வேந்தரான பாணாசுரனை வணங்கினார். மந்திரியை கண்டதும் அந்தப்புரத்தில் நுழைந்தவனை கைது செய்து விட்டீர்களா? என்று கேள்வியை எழுப்பினார் பாணாசுரன்.
ஆனால், குபாண்டனோ ஒருவிதமான பதற்றத்துடன் என்ன சொல்வது? என்று அறியாமல் திகைத்து நின்றார். எதிலும் நிதானத்துடன் செயல்படும் தனது மந்திரி இன்று பதற்றத்துடன் இருப்பதை கண்ட பாணாசுரன் என்னவாயிற்று? நிகழ்ந்தது என்ன? என்று சினம் கொண்டு அரியணையில் வீற்றிருந்தவாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
சிறிது நொடிப்பொழுது யோசித்த மந்திரி தனது சிரத்தை தாழ்த்து ஒருவிதமான பதற்றக் குரலில் வேந்தரே!!.. நமது அந்தப்புரத்தில் நுழைந்தவன் சாதாரணமானவன் அல்ல. அவன் தேவர்களின் சக்தியைப் பெற்று நம்மை துன்புறுத்துவதற்காக, தேவர்களில் யாரோ இங்கே இவனை அனுப்பி இருக்கின்றார்கள். அவன் தனி ஒருவனாக இருந்து நம் வீரர்கள் அனைவரையும் தோற்கடித்து விரட்டி அனுப்புகின்றான். நம் வீரர்கள் அவனைக் கொல்ல அனுப்பிய ஆயுதங்களை திருப்பி அனுப்பியும் நம்மை தாக்குகின்றான் என்று அவனது செயல்களை பற்றி வேந்தனிடம் எடுத்துரைத்தார்.
மந்திரியான குபாண்டன் கூறியதைக் கேட்டதும் மிகுந்த சினம் கொண்டு, விழி சிவந்து ஒரு சாதாரண அற்ப மானிடனிடம் நாம் தோற்பதா? அவனை எந்த தேவர்கள் அனுப்பி இருப்பினும் அவர்கள் எனக்கு நிகரானவர்கள் அல்ல என்றும், அவர்கள் அனுப்பிய இவனிடம் நான் தோற்பதா? இதோ நானே வருகின்றேன் என்று அரண்மனை அதிரும் வண்ணம் கர்ஜித்துக் கூறிக்கொண்டே அந்தப்புரத்தை நோக்கி புறப்பட்டார் பாணாசுரன்.
அதுவரை சாதாரணமாக இருந்த வீரர்களை தாக்கிய மமதையில் இருந்த அநிருத்தன், யார் வந்தாலும் என்னை எவராலும் இங்கிருந்து கைது செய்து அழைத்துச் செல்ல இயலாது என்று உரைத்துக் கொண்டிருந்தார். அவ்வேளையில் அந்தப்புரத்தை அடைந்த பாணாசுரன், அங்கு சடலமாக இருந்த வீரர்களை கண்டு அநிருத்தன் மீது மிகுந்த சினம் கொண்டார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக