விதுரர், போதும் இந்த விளையாட்டை நிறுத்துங்கள். இதற்கு மேலும் இந்த அநியாயத்தை எங்களால் பார்க்க இயலாது. அரசே! துரியோதனன் நம் குலத்தை அழிக்கப் போகிறான். இன்று பாண்டவர்கள் மிகவும் பொறுமை காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விளையாட்டு பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களிடையே பெரும் பகையை ஏற்படுத்திவிடும். கற்ற கல்வி இருக்கும்போது இந்த சூதாட்டம் எதற்கு? துரியோதனன் சகுனியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு மிகவும் தவறு செய்து கொண்டிருக்கிறான். சகுனி இங்கு இருக்கும் வரையில் இரு சகோதரர்கள் இடையே பகை இருந்து கொண்டேதான் இருக்கும். அதனால் இப்பொழுதே இந்த விளையாட்டை நிறுத்துவிடுங்கள் எனக் கூறினான்.
விதுரரின் இப்பேச்சைக் கேட்டு கோபங்கொண்டு துரியோதனன் எழுந்தான். விதுரரே! தாங்கள் என்ன பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் எங்களையே தவறு என்று கூறுகின்றீர்களா? நான் நினைத்தால் இப்பொழுதே உங்களுக்கு தண்டனை கொடுக்க முடியும். எனது தந்தையின் சகோதரன் என்று பார்க்கிறேன். நாங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறோமோ, அதை சரியாகத்தான் செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு நல்லது செய்யவில்லை என்றாலும் பராவில்லை. தயவுசெய்து இடையில் புகுந்து தொந்தரவு செய்யாமல் இருங்கள். உங்களின் உபதேசம் வேண்டும் என்று இங்கு யாரும் கேட்கவில்லை. உங்களை யாரும் இங்கு கட்டாயப்படுத்தி இருக்க சொல்லவில்லை.
உங்களுக்கு விருப்பமில்லையன்றால் இப்பொழுதே இங்கிருந்து செல்லலாம் என்றான். துரியோதனா! நான் உன்னை அழிவில் இருந்து தான் தடுக்கப் பார்த்தேன். ஆனால் விதியை வெல்ல முடியுமா என்ன? என் அறிவுரையை நீ கேட்க மாட்டாய். இனி உனக்கு அறிவுரை சொல்வதில் என்ன பயன் எனக் கூறி இருக்கையில் அமர்ந்தார். சகுனி யுதிஷ்டிரா! நீ உன் நாடு முதற்கொண்டு அனைத்தையும் இழந்துவிட்டாய். இனி உன்னிடம் என்ன இருக்கிறது உன் தம்பிகளை தவிர. வேண்டும் என்றால் உன் தம்பிகளை வைத்து பணயமாக ஆடு. இதில் நீ வென்றால் அனைத்தையும் பெற்று விடலாம் என்றான்.
அப்பொழுது நகுலனும் சகாதேவனும் முன் வந்து அண்ணா! தாங்கள் எங்களை பணயமாக வைத்து விளையாடி எல்லாவற்றையும் வெல்லுங்கள் என்றனர். தன் தம்பிகளின் பாசத்தை எண்ணி மகிழ்ந்த யுதிஷ்டிரன், தன் தம்பிகளை பணயமாக வைத்தான். தாயங்கள் உருட்டப்பட்டது. வென்றது துரியோதனன் தான். சகுனியும், துரியோதனனும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். சகுனி தர்மரே! தாங்கள் நகுலனும், சகாதேவனும் மாற்றாந்தாயின் புதல்வர்கள் என்பதால் பணயம் வைத்து தோற்றுவிட்டீர்கள். எதற்காக அர்ஜூனனையும், பீமனையும் தாங்கள் பணயம் வைக்கவில்லை என தூண்டினான். தருமர், நாங்கள் நாட்டை இழந்தாலும், எங்கள் ஐவரையும் எவராலும் பிரிக்க முடியாது. அதனால் நான் என் தம்பிகள் பீமன் மற்றும் அர்ஜூனனை பணயமாக வைக்கிறேன் என்றான்.
தாயங்கள் உருட்டப்பட்டது. இம்முறையும் துரியோதனனே வெற்றி கண்டான். வெற்றியில் ஆரவாரம் செய்தான். சகுனி, தருமரே! தாங்கள் தம்பிகளையும் இழந்து விட்டீர்கள். இப்பொழுது யாரை பணயமாக வைக்கப் போகிறீர்கள் எனக் கேட்டான்.
யுதிஷ்டிரன், நான் என்னையே பணயமாக வைக்கிறேன் என்றான். இதைக்கேட்டு பீஷ்மரும், விதுரரும் துடிதுடித்து போயினர். ஆனால் இம்முறையும் துரியோதனனே வெற்றிப் பெற்றான். துரியோதனன், நான் வெற்றிப் பெற்று விட்டேன். நீங்கள் ஐவரும் இப்பொழுதில் இருந்து என்னுடைய அடிமைகள் என ஏளனம் செய்தான். சகுனி, மருமகனே! அவர்களே துன்பத்தில் மிகவும் வருந்திக் கொண்டு இருக்கின்றனர். நீ வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் பேசலாமா? அவர்களுக்கு நாம் மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம். இவர்களிடம் பணயமாக வைக்க இன்னும் ஒரு பொருள் உள்ளது. அதை வைத்து இவர்கள் ஆடினால் இழந்த பொருட்களையும், இந்திரப்பிரஸ்தத்தையும், தம்பிமார்களையும் மீட்டுக் கொள்ளலாம் என்றான்.
யுதிஷ்டிரன், இன்னும் என்ன பொருள் இருக்கிறது என யோசித்துக் கொண்டு இருந்தான். சகுனி, தருமரே! தங்களுக்கு இன்னும் புரியவில்லையா? உங்களிடம் இன்னும் மிச்சம் இருப்பது திரௌபதி தான். நீ அவளை பணயமாக வைத்து ஆடினால், இழந்த அனைத்தையும் பெறலாம். இந்த சந்தர்ப்பத்தை ஒரு முறை தான் கொடுக்க முடியும். அதனால் இதை நழுவ விடாதே என தூண்டும்படி பேசினான். துரியோதனனுக்கு, சகுனியின் திட்டம் நன்கு புரிந்தது. மாமா அவர்களே, உங்களின் யோசனை அருமையாக உள்ளது. யுதிஷ்டிரா! இம்முறை நீ வென்றால் இழந்த அனைத்தையும் நீ பெற்றுக் கொள்ளலாம் என துரியோதனனும் தூண்டும் வகையில் பேசினான்.
யுதிஷ்டிரன் யோசித்தான். திரௌபதியை பணயமாக வைத்தால் அனைத்தையும் திரும்ப பெறும் வாய்ப்பு உள்ளது. இதை பயன்படுத்தி நிச்சயம் வெற்றிப் பெற வேண்டும் என நினைத்தான். அதனால் திரௌபதியை பணயமாக வைக்க சம்மதித்தான். இதைக் கேட்டு அவையில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். திருதிராஷ்டிரனும் இதற்கு மறுப்பும் எதுவும் தெரிவிக்கவில்லை.
தொடரும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக