Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 2 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 119

 கோபம் கொண்ட முகத்துடன் காண்போரை நடுங்க வைக்கும் கம்பீரமான உடல் தோற்றத்தோடு பாணாசுரன் அந்தப்புரத்தில் அநிருத்தன் இருக்கும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்தப்புரத்தில் மலர்களால் நிரம்பிய குளத்தின் அருகில் அநிருத்தனை கண்ட பாணாசுரன் யார் நீ? என்றும், யார் உன்னை இங்கு அனுப்பியது என்றும் கேள்விகளைக் கேட்டார்.

ஆனால், அநிருத்தனோ தனக்கும், இங்கு நிகழ்ந்தவைக்கும் எவ்விதமான தொடர்பில்லாதது போல் எவ்விதமான பதிலும் உரைக்காமல் சாதாரணமாக இருந்து கொண்டு புன்னகைத்தார்.

அநிருத்தனின் புன்னகை பாணாசுரனின் கோபத்தை மேன்மேலும் அதிகப்படுத்தின. ஒரு வேந்தன் நான் கேட்கையில் நீர் இவ்வளவு மெத்தனமாக இருப்பது உனக்கு நல்லதல்ல என்று உரைத்து அநிருத்தனை நோக்கி மாபெரும் சுவாலையுடன் ஒரு சக்தியை உருவாக்கி அனுப்பினார். ஆனால், அநிருத்தனோ தன்னை நோக்கி வந்த அச்சக்தியை சாதாரணமாக பிடித்து அதன் திசையை மாற்றி பாணாசுரனை நோக்கி ஏவி விட்டார்.

சற்றும் எதிர்பாராத இந்த திடீர் தாக்குதலின் மூலம் தன் நிலையை மறந்தார் பாணாசுரன். சிறிது நொடிப்பொழுதில் மந்திரி உரைத்தது போல் இவன் சாதாரணமானவன் அல்ல என்று உணர்ந்தார் பாணாசுரன். பின்பு, தன்னிடம் உள்ள பலவிதமான சக்திகளை கொண்டு அநிருத்தனை தாக்கினார். பாணாசுரனின் தாக்குதல்களை தடுத்து ஒவ்வொரு தாக்குதலுக்கும் எதிர்தாக்குதல் அளித்தார் அநிருத்தன்.

இவனை நேரடியாக போரில் வெற்றிக்கொள்ள முடியாது என்பதை யூகித்த பாணாசுரன் பலவித மாயவித்தைகளின் மூலம் அவனின் கவனத்தை திசை திருப்பி அநிருத்தனை நோக்கி அவனை பிணைக்குமாறு நாக அஸ்திரத்தை ஏவி விட்டார்.

பல யுத்த கலைகளை கற்ற அநிருத்தனோ மற்ற ஆயுதங்கள் போல் இதையும் எளிமையாக தடுத்து விடலாம் என்று நினைத்தார். ஆனால், கண்ணிமைக்கும் பொழுதில் அந்த அஸ்திரம் அநிருத்தனை அடைந்து அவருடைய கை, கால்கள் என அனைத்தையும் இறுக்க பிணைத்து கொண்டு, அவர் எவ்விதமான ஆயுதங்களையும் ஏந்த முடியாத நிலைக்கு கொண்டு சென்று கட்டிப்போட்டது.

நாக அஸ்திரத்தால் கட்டப்பட்டிருந்த அநிருத்தனைக் கண்ட மன்னன் பாணாசுரன், இவனை உடல் வேறு தலை வேறாக பிரித்து அசுரர்களுக்கு உண்ணும்படி கொடுத்துவிடுங்கள் அல்லது நரிகள் உண்ணும் படியாக இவனை தூக்கி எறியுங்கள் அல்லது இவனை ஆழமான பாழங்கிணற்றில் தள்ளுங்கள் என்று மிகவும் கோபத்துடன் கூறினார்.

மன்னனின் உத்தரவை கேட்டதும் மந்திரியான குபாண்டன் வேந்தரே!! நாம் நிதானத்துடன் செயல்பட வேண்டிய காலம் இது. எனவே, தங்கள் கோபத்தை விடுத்து அமைதிக்கொள்ள வேண்டும். இவனை நாம் கொன்றோமேயானால் இவன் தேவர்கள் மத்தியில் பெரிய பராக்கிரமசாலியாக கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி பலவித இன்னல்களில் இவன் அகப்பட்டாலும் வீரத்துடன் செயல்பட்டான் என்று அனைவராலும் போற்றப்படுவான். ஆகவே, இவனை கொல்லாமல் நம் படையுடன் இணைத்துக்கொண்டால் நமக்கு நன்மை உண்டாகும் என்று கூறினார்.

பின்பு, அநிருத்தனை நோக்கி யார் நீ? எந்த குலத்தை சேர்ந்தவன்? என்றும், யாருடைய உதவியால் இங்கு வந்தாய்? என்றும் கேட்டார். ஆனால், அநிருத்தனோ மந்திரியான குபாண்டன் வினாவிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நாக அஸ்திரத்தால் அகப்பட்டு அமைதி கொண்டிந்தான்.

அநிருத்தனின் இந்த அமைதி அவர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தின. அசுரகுல வேந்தனாகிய பாணாசுரனை தோத்திரம்(புகழ்ந்து பேசுதல்) செய்தால் உனக்கு உயிர் தானம் அளிக்கப்படும் என்று கூறினார். மேலும், அவரை தினமும் தோத்திரம் செய்து அவர் அளித்த தானத்தால் தான் வாழ்கின்றோம் என்று அனைவரிடமும் உரைக்குமாயின் நீ அகப்பட்டிருக்கும் நாக அஸ்திரம் நீக்கப்பட்டு எங்களில் ஒருவனாக வாழ முடியும் என்று கூறினார் மந்திரியான குபாண்டன்.

ஆனால், அநிருத்தனோ வீரன் என்பவன் போரில் ஈடுபட்டு மரணமடைவனே தவிர, தனது உயிருக்காக மற்றவர்களை தோத்திரம் செய்து வாழ விரும்பமாட்டான். அதுமட்டுமின்றி இப்படி தோத்திரம் செய்வது என்பது இழிவான நிலையாகும். நான் ஒரு வீரன். போரில் ஈடுபட்டு நேருக்கு நேர் சண்டையிட்டு மரணம் அடைவதை தவிர, இழிவான செயல்களில் ஈடுபட்டு உயிர் வாழ வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. இப்படி இழிவான நிலையுடைய வாழ்க்கையை வாழ்வதைக் காட்டிலும் வீரன் என்ற பெயரோடு மரணிப்பதே சிறந்தது என்று கூறினான்.

 சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக