Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 5 மார்ச், 2020

சிவபுராணம்..! பகுதி 126


மாயாவதி தன் வாழ்நாளில் தான் அடைந்த இன்னல்களை எடுத்துரைத்தப்பின் மாயாவதியின் மீது அன்பு கொள்ளத் தொடங்கினார் பிரத்தியும்னன். மாயாவதி காட்டிய சில காட்சிகளால் பிரத்தியும்னனின் நினைவில் இருந்த முன்ஜென்ம நினைவுகள் யாவும் அவனுக்கு தோன்றத் தொடங்கின. அதில் ரதியும் மன்மதனும் சேர்ந்து கழித்த காலங்கள், பின்பு சிவபெருமானால் தான் அழிந்த விதமும், ரதிதேவி கொண்ட கவலையும்... அதனால் சிவபெருமான் அளித்த வரமும், உடலற்ற ஆன்மாவாக தோன்றிய நினைவுகளும் அவன் கண்முன்னே தோன்றத் தொடங்கின. அந்நிலையில் பிரத்தியும்னன் தன்னை மறந்து தன்னை மன்மதனாகவே எண்ணி ரதிதேவியான மாயாவதியை அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினான். பின்பு, பிரத்தியும்னன், மாயாவதி அடைந்த இன்னல்களுக்கு காரணமான சம்பரனை வதம் செய்ய தன்னை மனதளவிலும், உடலளவிலும் தயார்படுத்திக் கொண்டார்.

சம்பரனை வதம் புரிதல் :

தன்னை தன் தாயிடமிருந்து பிரித்து, தன் காதலியை சிறுவயது முதலே துன்புறுத்தி அவளை அடைய முற்பட்டதாகவும் கூறி சம்பரனை வதம் செய்ய போருக்கு அழைத்தார் பிரத்தியும்னன். சம்பரன் தன்னை எதிர்க்க ஒருவன் வந்துள்ளான் அவனை எளிமையாக வென்று விடலாம் என்ற எண்ணத்தோடு போர்க்களத்திற்கு தனது சேனைகளோடு சென்றான். ஆனால், பிரத்தியும்னன் மாயாவதி கற்றுக்கொடுத்த மாய சக்திகளைக் கொண்டு தனக்கென்று ஒரு மாபெரும் சேனையை உருவாக்கிக் கொண்டார்.

அச்சேனையானது சம்பரனின் சேனையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்படி, காட்சி அளிக்கும் விதமாக தனது மாய சக்திகளைக் கொண்டு உருவாக்கி, சம்பரனை ஒரு வினாடி நேரத்தில் அச்சமடையச் செய்தார். இதைச் சற்றும் எதிர்பாராத சம்பரன் என்ன செய்வது என்று யோசிக்கும் கணப்பொழுதில் போர்கள் தொடங்கின. பிரத்தியும்னன் தனது ஆற்றலாலும், தான் கற்ற மாயவித்தைகள் மூலமாகவும் அனைத்து படை வீரர்களையும், சம்பரனையும் வீழ்த்தினார். சம்பரன் என்னும் அசுரனை வதம் செய்தமையால் 'சம்பராரி" என்ற பெயரையும் அடைந்தார் பிரத்தியும்னன்.

பெற்றோரை காணுதல் :

பின்பு, போரில் வெற்றி கொண்டதும் மாயாவதியை அழைத்துக்கொண்டு துவாரகைக்கு கிருஷ்ணர் வீற்றிருக்கும் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். பிரத்தியும்னனின் உருவத்தோற்றமும், அவரது நடவடிக்கைகள் யாவும் கிருஷ்ணரை போன்றே இருந்தது. கிருஷ்ணரே மற்றொரு வடிவில் இங்கு வந்தது போன்று அவர்களுக்கு காட்சியளித்தார். கிருஷ்ணரின் மனைவியான ருக்மணிதேவி பிரத்தியும்னனை கண்டதும் இவன் தன் மகனாகத்தான் இருக்க வேண்டும் என்று தன் உள்ளுணர்வு எடுத்துரைக்க தெரிந்துகொண்டாள். பின்பு, பிரத்தியும்னனை நோக்கி விரைந்து சென்று மகனே! என்று அவரை அரவணைத்து வரவேற்று, அவரது மனைவியான மாயாவதியையும் ஒருவிதமான சங்கடத்துடன் ஏற்றுக் கொண்டாள்.

அத்திரி முனிவருக்கும், அனுசூயாவுக்கும் பிறந்த மாமுனிவர் துர்வாசகர் ஆவார். ருத்திரனின் மறுபிறப்பு என்று சொல்லும் அளவிற்கு முன் கோபம் கொண்டவர். அவர் மற்ற முனிவர்களை போல் அல்லாமல் தன்னை அவமானப்படுத்தும் எண்ணம் கொண்டவர்கள் மற்றும் தனது செயல்களில் இடையூறு செய்பவர்கள் எவர்களாக இருப்பினும் அவர்களுக்கு உடனடியாக தண்டனையையும், அதற்கான சாபத்தையும் அளிக்கக்கூடியவர். இக்காரணங்களினால் தேவர்கள், துர்வாசக முனிவரை எங்கு கண்டாலும் மனதில் ஒருவிதமான பயமும், மரியாதையும் கொண்டு நடத்துவார்கள்.

ஆனந்தம் கொள்ளுதல் :

ஒரு சமயம் தேவலோக கன்னிகை ஒருவர் துர்வாசக முனிவரை சந்திக்க வேண்டிய சூழல் உருவாயிற்று. அவரை சந்தித்த அக்கணத்தில் தனது கரங்களில் இருக்கும் இந்த மாலையானது தன்னிடம் இருப்பதை காட்டிலும் தவத்திலும், ஞானத்திலும் சிறந்த முனிவர்களிடம் இருப்பதே சிறப்பாகும் என எண்ணி, தன் கரங்களில் இருந்த அந்த மலர் மாலையை அவரிடம் ஒப்படைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். துர்வாசக முனிவர் அந்த மாலையின் முக்கியத்துவம் யாது? என வினவியபோது அக்கன்னிகையோ இந்த மாலையானது உலக நாயகனின் நாயகியின் கழுத்தில் மாலையாக இருந்துள்ளது என்றும், நாங்கள் அவர்களை மகிழ்வித்தமைக்காக எங்களுக்கு மனம் மகிழ்ந்து கொடுத்தார் என்றும், இம்மலர் மாலையானது சொல்வதற்கு அடங்கா மாபெரும் சிறப்புகளை கொண்டது என்றும் எடுத்துரைத்தாள். பின்பு, முனிவரும் அதை மிகுந்த மனநிறைவுடன் பெற்றுக்கொண்டு தனக்கு அந்த மாலையை அளித்த தேவலோக கன்னியை வாழ்த்தி வழியனுப்பினார்.

தேவேந்திரனை காணுதல் :

தனது கரங்களில் அம்மாலையை ஏந்திய வண்ணம் முனிவர் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு எதிரில் யானையின் மீது தேவேந்திரன் அமர்ந்து உலா வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அம்மாலை தேவர்களின் அரசனான தேவேந்திரனிடம் இருப்பது தேவர்களுக்கு நன்மை அளிக்கும் என கருதி அம்மாலையை அவரிடம் கொடுத்தார்.

தேவேந்திரன் அம்மாலையின் முக்கியத்துவத்தை அறியாது தனது மமதையால் தனக்கு எதிரில் நின்று கொண்டு இருப்பவர் யாரென்று உணராமல், அதை தனது வஜ்ராயுதத்தால் பெற்று யானையின் மீது வைத்தார்.

இச்செயலை கண்ட துர்வாசக முனிவர் மிகுந்த சினம் கொண்டார். மேலும், அம்மலர் மாலையில் இருந்து வெளிப்பட்ட வாசனைகளால் வண்டுகள் மொய்க்கத் தொடங்கின. அதனால் ஏற்பட்ட இடர்பாடுகளால் அந்த யானையானது தன் சீரத்தின் மீது இருந்த மாலையை கீழே தள்ளி அதன் அருமை தெரியாமல் அதனை மிதித்தது.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக