பாற்கடலை கடைதல் :
தேவர்கள், அசுரர்கள் என அனைவரும் சிவபெருமானை பலவாறாக போற்றி அவ்விடத்தில் நின்று கொண்டிருந்தனர். சிவபெருமான் அனைவரையும் மீண்டும் பாற்கடலை கடைய ஆணையிட்டார். பின்பு, திருப்பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் முழுவதுமாக அகன்றதால் தேவர்கள் மற்றும் அசுரர்கள் மீண்டும் ஒன்றிணைந்து வாசுகி பாம்பினை கயிறாக திரித்து, மந்திர மலையை மத்தாக கொண்டு மனதில் எவ்வித பயமும் இன்றி மிகவும் ஆரவாரத்துடனும், மிகுந்த சக்தியுடனும் கடையத் தொடங்கினர். திருப்பாற்கடலை கடையும் பொழுது அதிலிருந்து ஒவ்வொரு பொருட்களாக வெளிவரத் தொடங்கின.
திருப்பாற்கடலை கடையும்போது வெளிவந்த அளப்பறிய சக்திகள் கொண்ட பொருட்கள் :
1. காமதேனு பசு = யாகங்களுக்கு பரிசுத்தமான பொருட்களை அளிக்கும் பொருட்டு முனிவர்கள் எடுத்துக் கொண்டனர்.
2. காண்போரை கவரும் விதமாக மிகவும் கலாதி உடைய உச்சை சிரவசு என்ற வெள்ளைக் குதிரைகள் = அசுரர்களின் தலைவன் தனக்கு உடையதாக எடுத்துக் கொண்டான்.
3. நான்கு கொம்புகள் உடைய வெள்ளை யானையான ஐராவதம் = தேவர்களின் அரசனான இந்திரன் தனக்கு உடையதாக ஏற்றுக் கொண்டார்.
4. கௌஸ்துபம் என்ற அழகிய சிகப்பு நிற மணி = திருமால் அவ்வணியை தனதாக்கி தனது மார்பில் வைத்துக் கொண்டார்.
5. கற்பக விருட்சம் = விரும்பியதை அளிக்கும் தன்மை கொண்ட கற்பக விருட்சம் தேவர்கள் நிறைந்த தேவலோகத்தை அடைந்தது.
6. அப்சரஸ் ஸ்திரீகள் = பேரழகிகளாகவும், சிகை அலங்காரத்தில் விருப்பம் கொண்ட கணக்கற்ற அப்சரஸ் ஸ்திரீகள் விண்ணுலகம் எங்கும் வியாபித்தவாறு மறைந்து சென்றார்கள்.
7. அகலிகை = அகலிகையை பிரம்ம தேவர் தனது வளர்ப்பு மகளாக ஏற்றுக் கொண்டார்.
8. லட்சுமி தேவி = பேரழகிற்கு பேரழகியாகவும், காண்போரை மதி இழக்கச் செய்யும் தேக அமைப்புடனும், பார்த்தவுடனே வணங்கும் தெய்வாம்சமும் உடைய லட்சுமி தேவியை, திருமால் மணந்து கொண்டு தனது இல்லாளாக ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து வந்த பொருட்களில் பெரும்பாலானவை தேவர்கள் கைவசமே இருந்ததை அறிந்த அசுரர்கள் இனி இவர்களை நம்பி செயல்படுதல் என்பது நம் குலத்திற்கு நல்லதல்ல என்பதை அறிந்து கொண்டனர்.
திருப்பாற்கடலைக் கடைய உதவுவது போல் உதவி அமிர்த கலசம் வரும் வரை பொறுமை காத்து நிகழ்வனவற்றை நிதானத்துடன் அனுசரித்து, திருப்பாற்கடலை கடைய தேவர்களுக்கு உதவி புரிந்து கொண்டிருந்தனர் அசுரர்கள். அவர்கள் எதிர்பார்த்த தருணமும் வரத்தொடங்கியது. அதாவது, அமிர்தம் ததும்பும் தங்க கலசத்துடன் திருமாலின் அம்சமான தன்வந்திரி திருப்பாற்கடலில் இருந்து உதயமானார்.
கலசம் பறிபோதல் :
இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல அசுரர்கள் தன்வந்திரியிடம் இருந்த அமிர்த கலசத்தை கண்டவுடன் அவரிடம் திடீரென பாய்ந்து அமிர்தம் நிறைந்த கலசத்தை அபகரித்து, மேகக் கூட்டங்களில் திடீரெனத் தோன்றும் மின்னலைப் போன்று அவ்விடம் விட்டு மறைந்து சென்றனர். கிடைக்கும் அமிர்தம் முழுவதையும் அசுரகுலம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற பேராசை குணத்தால் இமைப்பொழுதில் இம்மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபட்டமையால் தேவர்கள் அனைவரும் நிகழ்வது என்னவென்று அறியாமல் திகைத்து நின்றனர். தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஒன்றிணைந்து கடைந்ததால் கிடைத்த அமிர்தமானது அசுரர்களுக்கு மட்டுமே சென்று அமைந்தமையால் மிகவும் சோர்வுடன் தேவர்கள் காணப்பட்டனர். பின்பு, என்ன செய்வது என்று அறியாமல் காப்பவரான திருமாலை அனைவரும் வேண்டினார்கள்.
அசுரர்களுக்கிடையே சண்டையிடுதல் :
அமிர்தம் நிறைந்த கலசத்தை அபகரித்து வந்த அசுரர்கள் தங்களுக்கு இடையே சண்டையிட்டுக் கொண்டனர். அமுதத்தை யார் அடைவது? என்ற சண்டையில் அமுதம் வீணாகிவிடும் என்ற நிலைக்கே சென்றது.
மோகினி அவதாரம் :
திருமாலும் தேவர்களின் வேண்டுதலுக்காக காண்போரை வசீகரிக்கும் எழில் மிகு தோற்றம் கொண்டு, மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை காணச் சென்றார். அதுவரை யாரும் காணாத அழகில் மோகினி இருந்ததால் அசுரர்கள் அனைவரும் தம் எண்ணங்களை மறந்தனர். பின்பு, மோகினி அமிர்த கலசத்தை பெற்று நடனம் ஆடி அங்கிருந்த அனைத்து அசுரர்களையும் கிறங்க செய்தாள். மோகினியின் நடன அசைவுகள் மற்றும் மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்களும் அமுத கலசத்தை மோகினியிடம் ஒப்படைத்து இதை எங்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி சம அளவில் பகிர்ந்து கொடு என்றனர்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக