மோகினியிடம் மயங்குதல் :
அமிர்த கலசத்தை பெற்ற மோகினியோ நான் உங்கள் அனைவருக்கும் சம அளவில் அமிர்தத்தை பகிர்ந்து தர வேண்டும் என்றால் நான் எது செய்தாலும், எப்படி செய்தாலும் நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னை சினம் கொள்ளும் விதமாக ஏதேனும் நிகழ்வுகள் நடக்குமாயின் நான் அமிர்த கலசத்துடன் மறைந்து விடுவேன் என்று கூறினாள். மோகினி கூறியதற்கு அனைத்து அசுரர்களும் ஒப்புக்கொண்டனர். அன்று உண்ணா நோன்பு இருந்து புனித நீராடினர். ஹோமங்கள் நடத்தி தானங்கள் செய்தனர்.
திருமாலாகிய மோகினி தேவர்களை ஒரு பந்தியாகவும், அசுரர்களை ஒரு பந்தியாகவும் அமர்த்தினாள். அனைவரும் மோகினியின் விருப்பத்தின் அடிப்படையிலேயே அமர்ந்திருந்தனர். அசுரர்கள் கிழக்கு முகமாகவும், தேவர்கள் மேற்கு முகமாகவும் அமர்ந்து அமுதத்தை அருந்த தயாரானார்கள். முதலில் எந்த வரிசைக்கு கொடுக்கட்டும் அல்லது ஒருவர் மாற்றி ஒருவராக தரட்டுமா? எனக் கேட்டாள் மோகினி.
அமிர்தம் பகிர்ந்தளித்தல் :
மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் அமுத கலசத்தின் அடிப்பாகத்தில் உள்ள அமுதத்தை தங்களுக்கும், தெளிந்த மேல் பகுதியை தேவர்களுக்கும் அளிக்கலாம் எனக் கூறினார்கள். பின்பு தேவர்களுக்கு அமுதம் அதிகமாகவே மோகினியால் விநியோகம் செய்யப்பட்டது. இதை அறியாத அசுரர்கள் நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
சூழ்ச்சியை உணர்தல் :
மோகினியின் சூழ்ச்சியை உணர்ந்த சுவர்பானு என்ற அசுரன், தேவரை போல் உருவம் மாற்றிக் கொண்டு தேவர்கள் நின்ற வரிசையில் நின்றார். மோகினி அவரைப் பார்க்காமல் அமுதத்தை சுவர்பானுவிடம் கொடுத்து விட்டார். அமுதம் கிடைத்தவுடன் அதை சட்டென்று சுவர்பானு பருகிவிட்டான். ஆனால், எவரும் அறியவில்லை என்று கருதிய சுவர்பானுவின் செயலை கவனித்த சூரியன் மற்றும் சந்திரன் சுவர்பானுவை அசுரன் என்று காட்டிக் கொடுத்து விட்டார்கள்.
மோகினியின் சினம் :
சுவர்பானுவின் இந்த செயலை அறிந்த திருமால்(மோகினி) தனது சுதர்சனத்தால் சுவர்பானுவின் தலையை வெட்டிவிட்டார். சுதர்சன சக்கரம் வருவதை உணர்ந்த சுவர்பானு அமிர்தத்தை விழுங்கி விட அமிர்தமானது சுவர்பானுவின் கழுத்துப் பகுதியை தாண்டி உடல் பகுதியை அடையச் செல்லும் கணப்பொழுதில் சுதர்சனமானது சுவர்பானுவின் சிரத்தை துண்டித்து விட தலை வேறு, உடல்வேறாகிவிட்டான். அமிர்தம் உண்டதால் தலையும் அழியவில்லை, உடலும் அழியவில்லை. சுவர்பானுவின் செயலால் சினம் கொண்ட மோகினி அமிர்த கலசத்துடன் அவ்விடம் விட்டு மறைந்து சென்றாள்.
தேவர்கள் வெற்றி கொள்ளுதல் :
அமிர்தத்தை உண்ட தேவர்கள் அனைவருக்கும் தங்களின் பழைய சக்திகள் கிடைத்தது. பின் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நிகழ்ந்த கடுமையான போரில் அமிர்தத்தை உண்ட தேவர்களை அசுரர்களால் அழிக்க முடியவில்லை. ஆகவே, தேவர்கள் அசுரர்களை வெற்றி கொண்டு மீண்டும் அவர்களை பாதாள லோகத்திற்கு அனுப்பினார்கள்.
தேவர்களும், அசுரர்களும் சுவர்பானுவை வெறுத்தல் :
போரில் தோற்ற அசுரர்கள் அனைவரும் சுவர்பானுவின் செயலால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அமிர்தம் கிடைக்காமல் போனது என்று அவரை முழுவதுமாக வெறுத்தனர். அதனால் சுவர்பானுவை அசுரர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
பின்பு, சுவர்பானு தேவர்களிடம் தஞ்சமடைய, இத்தகைய மாறுபட்ட உருவ அமைப்பை கொண்ட சுவர்பானுவை தேவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
பிரம்ம தேவரிடம் தஞ்சமடைந்த சுவர்பானு :
மிகவும் வருந்தத்தக்க நிலையை அடைந்த சுவர்பானு பிரம்ம தேவரிடம் தஞ்சமடைந்தார். பிரம்ம தேவரும் மனமிறங்கி வேண்டும் வரத்தினை கேள் என்று கூறினார். சுவர்பானு தனது பழைய நிலையை அடைய அருள்பாலிக்குமாறு கூறினார். ஆனால், பிரம்ம தேவரோ திருமாலின் சுதர்சனத்தால் தண்டிக்கப்பட்ட உனக்கு அம்மாதிரியாக வரம் அளிக்க இயலாது. ஆகவே, நீ இன்று போல் என்றும் இரு வேறு உடல் பிரிவுகளை கொண்டவராக இருப்பாய் என அருளினார்.
ராகு-கேது உருவாதல் :
பிரம்ம தேவர் அருளிய வரத்தால் துண்டிக்கப்பட்ட தலையோடு ஒரு சர்ப்ப உடலை பொருத்தினார். துண்டிக்கப்பட்ட உடலோடு ஒரு சர்ப்பத்தின் தலையைப் பொருத்தி இணைத்தார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக