Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 133


னிதத் தலையும், பாம்பு உடலும் கொண்ட உடல் அமைப்பிற்கு 'ராகு" என்றும், மனித உடலும், பாம்பின் தலையும் கொண்ட அமைப்புக்கு 'கேது" என்ற பெயரும் நிலைக்கும் என்றார் பிரம்ம தேவர்.

பிரம்ம தேவர் சுவர்பானுவிற்கு அளித்த வரம் :

சூரியன் மற்றும் சந்திரனால் காட்டி கொடுக்கப்பட்டு இந்த நிலை அடைந்ததால் அவர்களை பழி வாங்குவதற்கு அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினார் சுவர்பானு. பிரம்ம தேவர் எவ்வளவு எடுத்துரைத்தும் சமாதானம் அடையாத சுவர்பானுவை கண்ட பிரம்ம தேவர் நவகிரக பரிபாலனத்தில் இணையும்போது சூரியன் மற்றும் சந்திரனின் ஒளிகளை அடக்கி அவர்களுக்கு கிரகண தோஷத்தை ஏற்படுத்துவீர்களாக என அருள் புரிந்தார்.

பின்னர், இத்துடன் திருப்திக்கொள் என்றார் பிரம்ம தேவர். மேலும், நீங்கள் இருவரும் மற்ற கிரகங்களை போல் முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி எதிர் எதிராக சஞ்சாரம் செய்வீர்களாக... என அருள்பாலித்தார்.

அப்போது மகாவிஷ்ணு ராகு, கேதுவின் முன் தோன்றினார். நவகிரக பரிபாலனத்தில் இடமளித்தும் ஒளியை அளிக்கும் சூரியன் மற்றும் சந்திரனுக்கு கிரகணம் பிடிக்கும் வரத்தினை அளித்துவிட்டீர்களா? என பிரம்ம தேவரிடம் கேட்டார். மேலும், அசுரர்களின் ஆட்சி நடக்கும் காலத்தில் ஒரு அசுரனை எவ்வாறு நவகிரக பரிபாலனத்தில் ஈடுபடுத்த முடியும்.

இது அசுரர்களின் பலத்தை மேலும் அதிகரிக்கும். எனவே கடைசி அசுரன், இராவணன் அழியும் வரை இவர்கள் இருவரில் கேதுவானவன் கடக ராசியில் அமர்ந்து ரிக், யஜூர், சாம வேதங்களையும், ராகுவானவன் மகர ராசியில் இருந்து அதர்வண வேதத்தையும் உரியவர்களின் மூலம் கற்றுணர்ந்து வேத ஞானம் பெற்ற ராகு ஞானகாரனாகவும், கேது மோட்சகாரனாகவும் செயல்பட்டு பூமியில் தோன்றிய உயிர்களுக்கு ஞானம் மற்றும் மோட்சம் பெற அனுகிரகம் செய்யட்டும் என்றார்.

அதன்படியே, இறுதியில் அசுரன் இராவணன் மாண்ட பிறகு நவகிரகங்களில் இருவரும் கிரக அந்தஸ்து பெற்று சஞ்சாரம் செய்யத் தொடங்கினார்கள்.

வீதஹவ்யர் என்னும் முனிவர் சிறந்த சிவபக்தராகவும், அனைவருக்கும் உதவும் தர்ம சீலராகவும் வாழ்ந்து வந்தார். வீதஹவ்யர் சிறு வயதில் தன் வீட்டிற்கு யாசகம் கேட்டு வந்தவர்களின் தட்டில் சிறு கற்களை போட்டுவிட்டார். யாசகம் கேட்டு வந்தவரும் அதை அறியாது உண்டு சிறு உடல் உபாதைக்கு ஆளாகி துன்புற்றார்.

எமலோகத்தை காணுதல் :

தனது தவ வலிமையால் ஒரு சமயம் எமலோகத்தை நாடி, எமனுடன் நரகத்தின் அனைத்து பகுதிகளையும் பார்த்து வந்தார். அப்போது வழியில் தெரிந்த ஒரு கல் பாறை ஒன்றை பற்றி வினவினார்.

கர்மாவை அறிதல் :

அதற்கு எமலோகத்தின் வேந்தனான தர்மராஜன் பூவுலகில் வாழ்ந்த ஒருவர் சிறு வயதில் தன் வீட்டிற்கு யாசகம் கேட்டு வந்தவர்களின் தட்டில் சிறு கற்களை போட்டு விட்டார். அதை அறியாத யாசகரும் உண்டு துன்புற்றார் என்றும், அன்று அவர் அளித்த சிறு கல்லானது இன்று வளர்ந்து பெரிய பாறையாக உள்ளது என்றும் கூறினார். அவர் தனது வாழ்நாள் முடிந்து எமலோகம் அடையும் பொழுது இக்கல் பாறையானது பொடியாக்கப்பட்டு அவருக்கு உண்ண அளிக்கும் பொருட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது என்றார் தர்மராஜன். இதை கேட்டதும் அது யாரென்று அறிந்து கொண்டார் வீதஹவ்யர். பின்பு தர்மராஜாவிடம் இச்செயலுக்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா? என்று கேட்டார்.

ஆலோசனை கிடைத்தல் :

தர்ம ராஜாவோ இச்செயலுக்கு பரிகாரம் உள்ளது என்றும், இச்செயலை செய்தவர் தம் வாழும் பூவுலகில் இப்பாறைக்கு நிகரான பாறையை தேர்ந்தெடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து குடித்து வர இப்பறையானது கரைந்துவிடும் என்றார். தனது அலட்சியத்தால் ஏற்பட்ட இந்தப் பாவ மலையை நான் உண்டே கரைப்பேன் என்று வீதஹவ்யர் தனது மனதில் சபதம் கொண்டார்.

முன்னோர்களை காணுதல் :

பின்பு நரகத்தில் மற்றொரு இடத்தில் சில பெரியவர்கள் பசி, தாகத்தால் அவதிப்படுவதை வீதஹவ்யர் கண்டு அவர்களிடம் என்ன குற்றம் இழைத்தீர்கள் என்று வினவினார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக