திங்கள், 9 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 134


ந்த பெரியவர்களும் தன் முன் நிற்பது யாதென்று அறியாது முனிவரே எங்களுக்கு நீர் வார்த்து என்னும் தர்ப்பணம் செய்து கரையேற்றப் புத்திரர்கள் இல்லாததால் புத் எனும் நரகத்தில் இவ்வகை துன்பத்தில் ஆட்பட்டு உள்ளோம் என்று கூறினார்கள். அவர்களின் கூற்றுகளில் இருந்து இவர்கள் தம் முன்னோர்கள் என்பதையும் அறிந்து அவர்களின் இன்னல்களையும் குறைக்க வேண்டும் என்பதையும் மனதில் கொண்டு வீதஹவ்யர் பூலோகத்தை அடைந்தார்.

கர்மாவை கரைத்தல் :

பூலோகத்தை அடைந்த வீதஹவ்யர் எமலோகத்தில் தான் கண்ட பாறைக்கு நிகரான பாறையை தேர்வு செய்து தான் வாழும் பொழுதே அப்பாறையை உண்ண முடிவு செய்தார். தினமும் சிவயோகத்தில் அமர்ந்து யோக நிலை முடிந்ததும் தான் தேர்வு செய்த பாறையை பொடிப்பொடியாக செய்து, அதை நீரில் கரைத்து தினமும் குடித்து வந்தார். இவ்விதமாக செய்துவர தான் தேர்வு செய்த முழு பாறையையும் அவர் கரைத்து குடித்து விட்டார். இதன் காரணமாகவே எமலோகத்தில் அவர் சிறு வயதில் அறியாமல் செய்த செயலால் உருவான சிறு கல்லானது, அதாவது பாறையாக உருவெடுத்த அப்பாறையானது முழுவதுமாக எமலோகத்தில் இருந்து அகன்றது.

சிலாதர் உருவாதல் :

இவ்விதமாக தனது கர்மாவை போக்க தான் வாழ்ந்த பூவுலகில் பாறையை கரைத்து உணவாக உண்டு அதை ஜீரணிக்க வீதஹவ்ய முனிவர் சிலாதர் என்னும் பெயரில் பின்னாளில் அழைக்கப்பட்டார்.

பித்ரு கடன்களை அடைத்தல் :

பின்பு ஒரு நன்னாளில் சிலாதர் சித்திரவதி என்னும் உத்தமியை மணந்து இல்வாழ்க்கையில் வாழ்ந்து வந்தார். திருமணம் நடந்து நீண்ட நாட்கள் ஆகியும் அவர்களுக்கு புத்திரப்பேறு என்பது கிடைக்காத கனியாகவே இருந்து வந்தது. இதன் காரணமாக அவரது மனைவியான சித்திரவதி தனது பதியிடம் தங்களின் குலத்தை விளக்க தங்களுக்கு ஒரு குழந்தையை என்னால் ஈன்றெடுத்துக் கொடுக்க முடியவில்லையே என்று கூறி தனது மனதில் கொண்ட கவலையை எடுத்துரைத்தாள். தனது இல்லத்தாள் கொண்டுள்ள கவலையை அறிந்ததும் தனது இல்லத்தாளை நோக்கி, கருவில் சுமந்து பிறக்கும் குழந்தைகளைவிட இறைவன் அருளும் குழந்தையை நாம் அடைவோம் என்று தெரிவித்து தனது மனைவிக்கு ஆறுதல் கூறினார்.

தவம் இயற்றுதல் :

தனது இல்லத்தாளுக்கு அளித்த வாக்குறுதியின்படி தனக்கு இறைவன் அருளும்படியான ஒரு புத்திரப்பேறு வேண்டும் என்பதை உணர்ந்ததும் சிவபெருமானை எண்ணி கடும் தவம் புரியத் தொடங்கினார். திருவையாறு எனப்படும் புண்ணிய நதிக்கு சென்று அங்குள்ள அயனரி என்னும் புனித தீர்த்தத்தில் நீராடி எம்பெருமானை பூஜித்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்து ஒற்றைக்காலில் பஞ்சாக்கினி மத்தியில் நின்று பிள்ளைவரம் வேண்டி கடும் தவம் புரியத் தொடங்கினார்.

வரம் வேண்டுதல் :

சிலாத முனிவர் ஆயிரம் தேவ ஆண்டுகள் எம்பெருமானை எண்ணி தவமிருந்தார். அவருடைய தவத்தால் மகிழ்ந்த எம்பெருமான் அவருக்கு காட்சியளித்தார். எம்பெருமானும் சிலாதரை கண்டு சிலாதரே உனது தவத்தினால் யாம் மனம் மகிழ்ந்தோம், உமக்கு வேண்டும் வரத்தைக் கேட்டுப் பெறுவாயாக என்று கூறினார். எம்பெருமானின் திருவாயிலிருந்து மலர்ந்த இவ்வார்த்தைகளைக் கேட்டதும் சிலாத முனிவர் எழுந்து எம்பெருமானை பலவாறாக துதித்து அதாவது, முக்கண் உடையவரே! ஐந்தொழில் புரிபவரே! அனைத்தையும் தன்னுள் கொண்டவரே! யோகிகளாலும் முனிவர்களாலும் தியானிக்கப்படுகின்றவரே! லோகநாயகரே! எனப் பலவாறாக துதித்து தன் மனதில் இருந்த கவலைகளை எடுத்துரைத்தார். அதாவது, தனக்கு இன்னும் புத்திர பாக்கியம் இல்லை என்றும், எனவே தங்கள் அம்சம் சார்ந்த புதல்வனை வரமாக எனக்குத் தந்தருள வேண்டும் என்றும் வேண்டி நின்றார்.

எம்பெருமானும் சிலாத முனிவரிடம் மெய் வருத்தி நீ செய்த தவத்தால் என்னை மகிழ்வித்த உனக்கு என் அம்சம் உடைய புதல்வனை தருவேன் என்று அவர் வேண்டிய வரத்தினை அளித்து அவ்விடம் விட்டு மறைந்து சென்றார். பின் சிலாத முனிவர் மனமகிழ்வுடன் தனது இருப்பிடம் நோக்கி விரைந்து சென்று நிகழ்ந்த யாவற்றையும் தனது இல்லத்தாளிடம் எடுத்துரைத்து மகிழ்ந்தார்.

வரம் கிடைக்கப் பெறுதல் :

சில காலம் சென்ற பிறகு தன் ஆசிரமத்தில் வேள்வி நடத்துவதற்காக தனது ஆசிரமத்தின் அருகில் இருந்த இடத்தை உழுத போது கலப்பையில் பட்டு ஒரு செப்பு பெட்டியானது வெளிப்பட்டது. அப்பெட்டியை திறந்து பார்த்தப்போது அதில் சூரியனைப் போன்ற அதிக ஒளியுடன் கலாதி அழகு கொண்ட ஆண் குழந்தை நான்கு கால் கொண்ட அமைப்புடன் இருந்தது.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்