நான்கு கால் கொண்ட அமைப்புடன் இருந்த குழந்தையை கண்டு அங்கிருந்த சில முனிவர்கள் இந்த குழந்தையானது அசுரர்களின் சதியாக கூட இருக்கலாம் என எண்ணி அந்த இடத்தை விட்டு போய்விட முயன்றனர். அவ்வேளையில் அசரீரி ஒன்று உண்டாயிற்று. அதாவது, எம்பெருமானிடம் நீர் பெற்ற வரமே இக்குழந்தை ஆகும். சிவபெருமானே உனக்கு இக்குழந்தையை தந்துள்ளார். குழந்தையை எடுத்து வளர்த்து, இந்நாள் வரை நீர் அனுபவித்து வந்த துன்பத்தில் இருந்து உனக்கும், உன் முன்னோர்களுக்கும் மகிழ்ச்சி உண்டாகும் என்று கூறியது.
செப்பேசன் :
அசரீரி கூறிய கூற்றிலிருந்து எம்பெருமான் கூறிய அருளும் தன் நினைவுக்கு வரவே அக்குழந்தையை மிகவும் அன்புடனும், வாஞ்சையுடனும் எடுத்து தனது மார்புடன் அணைத்துக் கொண்டார். பின்பு, ஆகாயத்தை நோக்கி தனக்கான புத்திரனை அளித்த எம்பெருமானுக்கு மிகுந்த மகிழ்வுடன் தனது நன்றியை செலுத்தினார். பின்பு குழந்தையுடன் தான் தங்கியிருக்கும் ஆசிரமத்திற்கு விரைந்து சென்று, நமக்கு ஒரு மகன் பிறந்து விட்டான் என்று தனது துணைவியிடம் மகிழ்வுடன் கூறி தனது மகிழ்ச்சியை தனது இல்லத்தாளிடம் பகிர்ந்து கொண்டார் சிலாத முனிவர். செப்பு பெட்டியில் இருந்து தனக்கு இவ்வளவு பெரிய ஒரு மாணிக்கம் கிடைக்க பெற்றமையால் இனி உன்னை அனைவரும் 'செப்பேசன்" என்றும் 'நந்தி" என்றும் அழைப்பார்கள் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் சிலாத முனிவர்.
வேதம் கற்றல் :
சிலாத முனிவருடன் ஆசிரமத்தில் வளர்ந்து வந்த நந்தியோ சிறுவயது முதல் இதிகாசங்களையும், தர்மசாஸ்திரங்கள், புராணம் என அனைத்து வேதங்களையும், மந்திரம் யோகம் போன்ற கலைகளில் நிபுணத்துவம் கொண்டவராகவும், சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். சிறுவயது முதலே அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்து அதே வேளையில் அனைவருடன் பணிவுடனும், அனைவரையும் ஈர்க்கும் குணம் கொண்டவராகவும், நல்லதொரு சிறுவனாகவும், மனதிற்கும் பார்வைக்கும் அனைவரையும் பரவசமூட்டும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய சிறுவனாகவும் வளர்ந்து ஏழு வயதை அடைந்தார் நந்தி.
ஆசி பெறுதல் :
அன்றொரு சமயத்தில் சிலாத முனிவருடைய ஆசிரமத்திற்கு மித்ரா வருணர்கள் வருகை தந்தனர். சிலாத முனிவரும் அவர்களின் வருகையை கண்டு மனதில் எல்லையற்ற மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் கொண்டார்.
சிலாத முனிவர், மித்ரா வருணர்களை மிகுந்த பக்தியோடு உபசரித்து தனது புதல்வனான நந்தியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் முன் நந்தியும் பணிவுடன் நடந்து கொண்டு வணங்கி நின்றார்.
ஆயுளை அறிதல் :
அவ்வேளையில் மித்ரா வருணர்கள் நந்தியை நோக்கி நீ குருவிற்கு உண்டான பணிவிடைகளைச் செய்து என்றும் அழியாத புகழுடன் நல்லதொரு பதவியை அடைவாயாக... என்று ஆசீர்வதித்தார். இவர்களின் ஆசீர்வாதத்தை கேட்டு திடுக்கிட்டார் சிலாதர். அதாவது மூன்று காலம் உணர்ந்த முனிவர்களே... அனைத்தும் உணர்ந்த ஞானிகளே... பெற்றோர்களாகிய நீங்கள் என் மகனை என்றும் தீர்க்காயுளுடன் வாழ் என்று ஆசீர்வதிப்பதை விட்டுவிட்டு வேறு விதமாக ஆசீர்வதிக்கின்றீர்களே, இதைக் கேட்கும்போது என் மனம் மிகுந்த கவலை கொள்கிறது. இதற்கான காரணம் என்னவென்று சிலாதர், அவர்களிடம் கேட்டார்.
சிலாத முனிவருக்கு பதிலளிக்கும் வகையில் மித்ரா வருணர்கள் முனிவரே உங்கள் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் புதல்வனின் ஆயுள் காலம் என்பது எட்டு வருடங்கள் தான் என்றும், இன்னும் அவன் ஒரு ஆண்டு காலம் மட்டுமே வாழ இயலும். இதுவே அவனுக்கு விதிக்கப்பட்ட விதி ஆகும். இவ்வாறு இருக்க நாங்கள் அவனை எவ்வாறு தீர்க்காயுளுடன் வாழ்வாய் என்று ஆசீர்வதிக்க இயலும் என்று பதிலளித்தனர்.
முனிவர்களிடம் சற்றும் எதிர்பார்க்காத இவ்விதமான பதிலால் தன் நிலை என்ன என்று அறியாது அவ்விடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்பு முனிவர்கள் அனைவரும் சிலாதரை மயக்கத்திலிருந்து விழித்தெழச் செய்து, அவரவர்களின் கர்ம வினையை அவரவர்கள் செய்த வினைக்கு ஏற்ப அனுபவிக்க வேண்டும் என்பதே விதியாகும். இதை எவராலும் மாற்ற இயலாது. இதை அறிந்து உனது மனதை திடப்படுத்திக்கொள் என்று சிலாதரிடம் ஆறுதல் கூறி அங்கிருந்து விடை பெற்றுச் சென்றனர்.
கவலை கொள்ளுதல் :
முனிவர்கள் அவ்விடம் விட்டு அகன்றதும் அவர்கள் உரைத்த பதில்களே சிலாத முனிவரின் செவிகளில் மீண்டும் மீண்டும்... கேட்கத் தொடங்கின. அருள் பாவித்தவரோ சிவபெருமான். ஆனால், பாலகனின் உயிர் இவ்வளவுதான் என்று தனக்கு எடுத்துரைத்தவர்கள் மூன்று காலங்களையும் உணர்ந்தவர்களான முனிவர்கள். ஆனால், எம்பெருமானின் வாக்கு பொய்யாகாது என்ற எண்ணமும், பலவிதமான சஞ்சலங்களும் தோன்றி அவர் தன்னை அறியாது தன் மகனை எண்ணி அழுது கண்ணீர் விடத் தொடங்கினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக