சனி, 21 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 155


னது தந்தையின் அருகிலேயே சென்ற பாலகனான துருவன் தந்தையே... தந்தையே... என்று அழைத்தவாறு அவரின் கழுத்துகளைப் பிடிக்க அவரை நோக்கி அவரின் அருகில் செல்ல தொடங்கினான். அதை சற்றும் எதிர்பாராத சுரூசி சிறு பாலகன் என்று கூட பார்க்காமல் அவனை கீழே தள்ளி விட்டாள்.

யாரை தந்தை என்றழைக்கின்றாய்? எதற்காக இவ்விடம் வந்து கொண்டிருக்கின்றாய்? என்று மிகுந்த கோபத்துடன் சிறு பாலகன் என்று கூட பார்க்காமல் அவனிடம் கேட்டாள் சுரூசி. சுரூசியின் வார்த்தைகளில் இருந்த கடுமையை கண்டதும் மிகுந்த பயம் கொண்டவனாக, அவர்களை நோக்கி அழுத வண்ணமே நான் எனது தந்தையின் மடியில் அமர்ந்து விளையாட வேண்டுமென்று எண்ணியே இவ்விடம் வந்துள்ளேன் என்று கூறினான் துருவன்.

இதைக்கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே சென்ற சுரூசி நீ என் வயிற்றில் பிறந்தவன் அல்ல. அவ்வாறு இருக்கையில் நீ எப்படி எனது கணவரின் மடியில் விளையாடுவாய்?. அவரின் மடியில் விளையாடுவதற்கு என் வயிற்றில் பிறந்த உத்தமனுக்கு மட்டும் தான் அந்த பாக்கியமும், விளையாடும் உரிமையும் உள்ளது என்று முதல் மனைவியான சநீதியின் வயிற்றில் பிறந்த உனக்கு அந்த பாக்கியம் கிடையாது. இனி இந்த பக்கம் வந்து விடாதே, இங்கிருந்து ஓடிப்போ என்று அவனிடம் மிகுந்த கோபத்துடன் கூறியது மட்டுமல்லாமல் அவனை அவ்விடம் இருந்து வெளியேற்ற காவலாளிகளை அழைத்து பாலகன் என்று கூட பார்க்காமல் தள்ளிவிட்டாள் சுரூசி.

தந்தையின் செயல்பாடுகள் :

சிற்றன்னையின் செயல்பாடுகளும் அவர்களின் கூற்றுகளும் துருவனுடைய மனதில் பலவிதமான குழப்பங்களையும், உணர்ச்சிகள் என்றால் என்னவென்று அறியாத சிறு வயதில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தெரியாமலும் அவனுடைய கண்களில் நீர்வழிய தொடங்கின. அந்த நொடிப்பொழுது தனது தாயை பற்றியும், தன்னைப் பற்றியும் இவ்விதம் எடுத்துரைத்து கொடுமைகளை புரிந்து கொண்டுள்ள தனது சிற்றன்னையின் செயல்களையும் கண்டும் காணாமல் நின்று கொண்டிருந்த தனது தந்தையை நோக்கி தந்தையே என்று அழைக்கத் தொடங்கினான்.

தந்தையின் செயலைக் கண்ட அந்த நொடிப்பொழுதில் அவனுக்கும், அவன் உடலுக்கும் மனதிற்கும் ஒருவிதமான அரவணைப்பு தேவைப்பட்ட பொழுதில்கூட தந்தையான உத்தானபாதன் தன் மகனை ஏறெடுத்துப் பார்க்காமல் தனது முகத்தைத் திருப்பிக்கொண்டு தனது இளைய மனைவிக்கு பிறந்த மகனை தூக்கிக்கொண்டு செல்ல தொடங்கினான். அதைக் கண்டதும் நிகழ்வது யாது? என்று அறியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தான் துருவன்.

வாமதேவ முகம் அல்லது தோற்றம் :

வாமதேவம் என்பது ஐந்து முகங்களில் சிவபெருமானின் காத்தல் பணிபுரியும் ஒருமுகமாக கருதப்படுகின்றது.

சிவத்தோற்றம் :

இரத்த கற்பத்தில் படைப்புக் கடவுளான பிரம்ம தேவன் சிவபெருமானை எண்ணி தவமிருந்த போது அவருடைய தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் சடாமுடியில் பாம்புகளையும், கரங்களில் மால் மற்றும் மழு ஆகியவையும் கொண்டு தோன்றினார். இத்தோற்றம் வாமதேவம் எனப்படுகிறது.

ஐந்து முகங்களில் சிவபெருமானின் காத்தல் முகமான வாமதேவ முகத்திலிருந்து தீப்தம், சூட்சுமம், ஸகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம் என ஐந்து ஆகமங்களை தோற்றுவித்தார்.
காவலாளிகள் அவ்விடம் வந்ததும் தனது தந்தை சென்ற பாதையை நோக்கி நின்று கொண்டிருந்த துருவனுடைய காதுகளில் திருகிய வண்ணம் நான் சொல்லியும் உனக்கு அங்கென்ன பார்வை நீ இன்னும் இங்கு நின்று கொண்டிருக்கின்றாயா? என்று கூறிய வண்ணம், வேண்டுமாயின் அடுத்த பிறவியிலாவது தவமிருந்து என் வயிற்றில் பிறந்தால் மட்டுமே நீ உன் தந்தையுடன் விளையாடுவதற்கான ஒரு வாய்ப்பாவது கிடைக்கும் என்று கூறி காவலாளிகளிடம் பாலகனை தள்ளி விட்டாள்.

தாயை காணுதல் :

காவலாளிகளிடம் இருந்து ஓடத் தொடங்கியதும் தனது தாய் இருக்கும் இருப்பிடத்தை நோக்கி தாயே ! தாயே ! என்று அலறிய வண்ணம் ஓடி வந்து கொண்டிருந்தான். காவலர்களும் சிறு பாலகனின் நிலையை கண்டு என்ன செய்வதென்று அறியாமல் நின்று கொண்டிருந்தனர்.

எப்போதும் சிரித்த முகத்துடன் விளையாடிக்கொண்டிருக்கும் பாலகன் அலறிக்கொண்டு வருவதைக் கண்டு என்னவாயிற்று? என்று அவனின் சத்தத்தைக் கேட்டதும் அவன் தாயான சநீதி அவன் அருகில் சென்றாள்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்