சனி, 21 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 156


ப்போதும் சிரித்த முகத்துடன் விளையாடிக்கொண்டிருக்கும் பாலகன் அலறிக்கொண்டு வருவதைக் கண்டு என்னவாயிற்று? என்று அவனின் சத்தத்தைக் கேட்டதும் அவன் தாயான சநீதி அவன் அருகில் சென்றாள்.

அலறிக் கொண்டு ஓடிவந்த பாலகனோ தனது தாயை இறுக அணைத்துக் கொண்டு அவள் மார்போடு தன்னை இணைத்துக் கொண்டு தனது கண்களில் வழிந்த கண்ணீரை நிறுத்த இயலாமல் அழுதுகொண்டே இருந்தான்.

தனது மகனின் இந்த நிலைக்கு யார் காரணம்? விளையாட்டில் யாராவது அடித்து விட்டார்களோ? என்ற வகையில் எண்ணத் தொடங்கினார் சநீதி. பின்பு தனது மகனை மடியின் மீது அமர வைத்து அவன் கண்களில் வழிந்துகொண்டிருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு ஏன் அழுகிறாய்? உனக்கு யாராவது தீங்கிழைத்து விட்டார்களா? என்று கேட்டுக்கொண்டே அவனது கவலையை மறக்க வைப்பதற்காக பேச்சுக் கொடுக்க தொடங்கினார்.

அகோரம் முகம் அல்லது தோற்றம் :

அகோரம் என்பது ஐந்து முகங்களில் சிவபெருமானின் அழிக்கும் பணிபுரியும் ஒரு முகமாக கருதப்படுகின்றது.

சிவத்தோற்றம் :

நீல கற்பத்தில் படைப்புக் கடவுளான பிரம்மதேவன் சிவபெருமானை எண்ணி தவமிருந்தபோது அவருடைய தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் நெருப்பு மற்றும் வாள் ஆகியவற்றை தாங்கிய கரிய உருவத்தில் காட்சியளித்தார். இத்தோற்றம் அகோரம் எனப்படுகிறது. சிவபெருமான் அகோர முகத்திலிருந்து விஜயம், நிசுவாசம், சுவாயம்புவம், அனலம், வீரம் ஆகிய ஐந்து ஆகமங்களை தோற்றுவித்தார்.
ஆனால், பாலகனோ... மீண்டும் மீண்டும் சிற்றன்னையின் கூற்றுகளை எண்ணி எண்ணி தனது தாயின் மடியில் தனது முகத்தை மறைத்துக் கொண்டு அழத் தொடங்கினான்.

காரணம் அறிதல் :

பின்பு, தனது மகனை நோக்கி மகனே..! நீ அழுது கொண்டிருந்தால் நீ ஏன் அழுகிறாய்? என்ற விஷயம் எனக்கு எப்படி தெரியும்? நீ அழுவதை நிறுத்திவிட்டு என்ன நடந்தது என்று கூறினால் மட்டுமே என்னால் உனக்கு உதவ இயலும் என்று கூறி, அவனுக்கு ஆறுதல் உரைத்து அவன் அழுகைக்கான காரணங்களை கேட்டு கொண்டிருந்தார்.

பின்பு தனது அழுகையை நிறுத்திக்கொண்டு தனது தாயிடம் நந்தவனத்தில் நிகழ்ந்தவற்றையும், சிற்றன்னை கூறியவற்றையும், அதற்கு தன் தந்தை எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்காமல் அவைகள் யாவற்றையும் கண்டும் காணாமல் இருந்ததை தனது தாயிடம் எடுத்துரைத்து... தாயே நாட்டை ஆளும் அரசர் தான் எனக்கு தந்தையா? அவரது மடியில் உட்கார்ந்து விளையாட எனக்கு உரிமை இல்லையா? ஏன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என் தந்தை எதையும் பேசாமல் இருந்து கொண்டிருந்தார்? என்று துருவன் ஆழ்ந்த துயரத்துடன் தனது தாயிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

ஆறுதல் கூறுதல் :

தனது மகனின் உள்ளத்தில் பதிந்து விட்ட இந்த மோசமான நினைவுகளை அறிந்ததும் அவள் மனமே வெடித்துவிடுவது போல இருந்தது. இருப்பினும் என்ன செய்ய இயலும்? நிகழ்ந்ததை மாற்ற இயலுமா என்று தன்னை தானே நிதானப்படுத்திக் கொண்டு தனது மகனை அணைத்தப்படி அவனது தலைமுடியை கோதியவாறு மகனே...!! நான் உன்னிடம் ஏற்கனவே உரைத்துள்ளேன் அல்லவா? நீ என்னை விட்டு வெளியே எங்கும் போகக்கூடாது என்று சொல்லியிருந்தேன் அல்லவா. அவ்வாறு இருக்கையில் நீ ஏன் அவ்விடம் சென்றாய்? அவர்கள் அனைவரும் புண்ணியம் செய்தவர்கள் ஆகையால் தான் இன்று அவர்கள் மகிழ்வுடன் இருக்கின்றார்கள்.

நாம் பாவம் செய்துள்ளோம் ஆகவே நாம் துன்பமடைந்து கொண்டிருக்கின்றோம். இதை எண்ணுவதால் நமக்கு எந்தவிதமான பயனும் இனி நடக்கப்போவது கிடையாது. ஆகவே, இனிமேல் நீ இங்கேயே இருந்து கொண்டு என்னுடன் மகிழ்ச்சியாக இருப்பாயாக... என்று கூறி துருவனின் மனதை சமாதானப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டால் நீர் வடிந்த கண்களுடன் சநீதி.

தற்புருடம் முகம் அல்லது தோற்றம் :

தற்புருடம் என்பது ஐந்து முகங்களில் சிவபெருமானின் மறைத்தல் பணிபுரியும் முகமாகக் கருதப்படுகின்றது.

சிவத்தோற்றம் :

பீத கற்பத்தில் படைப்புக் கடவுளான பிரம்ம தேவன் சிவபெருமானை எண்ணி தவமிருந்த போது அவருடைய தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் தன்னுடைய கரிய சடாமுடியில் இளம்பிறை அணிந்த உருவத்தில் காட்சியளித்தார். இத்தோற்றம் தற்புருடமாகும்.

சிவபெருமான் தற்புருஷ முகத்திலிருந்து ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், பிம்பம் ஆகிய ஐந்து ஆகமங்களை தோற்றுவித்தார்.
துருவனின் முடிவு :

துருவன் தன் அன்னையை நோக்கி தாயே!! நான் உத்தமனைப் போன்று சிற்றன்னையின் வயிற்றில் பிறந்தால் மட்டுமே என் தந்தையுடன் விளையாட முடியுமா? அதற்காக நான் தவம் செய்ய வேண்டுமா? அப்படி செய்தால் அடுத்த பிறவியில் சிற்றன்னையின் வயிற்றில் பிறந்து என் தந்தையுடன் நான் விளையாட முடியும் என்று அவர்கள் கூறினார்கள்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்