கௌசிக முனிவரின் வழிகாட்டுதல் :
சிறு பாலகன் கொண்டுள்ள எண்ணத்தை கண்டு வியந்த முனிவர் குழந்தாய்!... ஈசனின் வலது புறத்தில் இருந்து உருவான வைகுண்டத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமந் நாராயணனை நோக்கி தவம் செய். அவரின் அருளால் உனக்கு உயர்பதவிகள் கிடைக்கும் என்று கூறினார். பின்பு ஸ்ரீமந் நாராயணனை வழிபடுவதற்கு உகந்த விதத்தையும், அவருக்குண்டான மந்திரங்களையும் அதை எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பதையும் துருவனிடம் எடுத்துரைத்தார்.
தவத்தை ஆரம்பித்தல் :
முனிவர் அருளியப்படியே அறிவுரைகளை அறிந்து கொண்டதுடன் முனிவரின் பாதங்களை வணங்கி அந்த கானகத்தில் தனியாக ஓரிடத்தில் அமர்ந்து தவம் புரிவதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்தான். பின்பு, அவ்விடத்தில் அமர்ந்து கண்களை மூடி முனிவர் அருளிய மந்திரங்களை எண்ணியவாறு தவத்தை தொடங்கினான்.
இடையூறுகள் உருவாதல் :
சிறு பாலகனான துருவன் தவநிலையில் கானகத்தில் தனித்தே அமர்ந்திருந்தான். அவ்வேளையில் வனத்திலிருந்த கொடூரமான மிருகங்கள் பலவாறு உறும்பின. பூதங்களும், பேய்களும், பிசாசுகளும் மனதை உறைய வைக்கக்கூடிய குரலில் அலறத்தொடங்கின. இருப்பினும் துருவன் தனது சிந்தனைகள் யாவற்றையும் ஸ்ரீமந் நாராயணனின் மீதே வைத்திருந்தார்.
அவரை சுற்றி எழுந்த சத்தங்கள் எதையும் கண்டு கொள்ளாமல் நடப்பது நடக்கட்டும் என்று மிகவும் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் அவர் கொண்டுள்ள எண்ணத்தின் மீதும், ஸ்ரீமந் நாராயணன் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் தனது தவத்தை தொடர்ந்து கொண்டிருந்தான்.
துருவனின் தவத்தினை கலைக்க வனத்தில் இருந்த ஒரு வேதாளம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தது. அதாவது துருவனின் தாயின் உருவம் கொண்டு துருவனின் அருகில் சென்று மகனே நீ ஏன் இன்னும் இங்கே தனியாக அமர்ந்து இருக்கின்றாய்? நமது கஷ்டமெல்லாம் தீர்ந்து விட்டது மகனே. உனது தந்தை மனம் மாறிவிட்டார். என் உடன் வா... நமது ராஜ்ஜியத்திற்கு சென்று உன் விருப்பம் போல் உன் தந்தையின் மடியில் அமர்ந்து விளையாடுவாய் என்று கூறியது.
தான் கூறியதைக் கேட்டும் துருவன் கண் விழிக்காததை கண்ட வேதாளம் வேறொரு விதத்தில் முயற்சிக்கத் தொடங்கியது. அதாவது உன்னை வதைத்து புசிப்பதற்காக நிறைய கொடிய அரக்கர்கள் மற்றும் அசுரர்கள் இங்கு வந்துள்ளார்கள் என்றும், என்னுடன் உடனே புறப்படு இல்லையென்றால் உன்னையும், என்னையும் அவர்கள் இங்கேயே பலியாக்கி கொன்றுவிடுவார்கள் என்று மிகவும் பயந்த மற்றும் அழுதக்குரலில் கூறியது.
வேதாளத்தின் எந்த முயற்சிக்கும் துருவனின் கண்களானது திறக்கவே இல்லை. ஏனெனில், தனது தாயானவள் தனது மகன் வெற்றி அடைய வேண்டும் என்றே எண்ணுவார்களே தவிர அவன் தோல்வியடைய வேண்டும் என்று எண்ணமாட்டார்கள் என்ற எண்ணத்தில் மிகவும் திடமாக இருந்து வந்தான் துருவன். அது அவனின் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆகும். மேலும், ஸ்ரீமந் நாராயணனின் மீது கொண்டுள்ள நம்பிக்கையிலும் முனிவர் உரைத்த மந்திரங்களைத் தொடர்ந்து ஜபித்த வண்ணம் தனது தவத்தை தொடர்ந்து கொண்டே இருந்தான்.
திருமால் உதயமாதல் :
துருவனுடைய மன உறுதியைக் கண்ட ஸ்ரீமந் நாராயணன் வைகுண்டத்தில் இருந்து துருவன் தவம் புரியும் அவ்விடத்திற்கு காட்சியளித்தார். திருமாலை கண்டதும் தனது தவ நிலையிலிருந்து எழுந்து திருமாலின் திருவடியில் விழுந்து பணிவுடன் அவரை வணங்கி அவரின் ஆசியையும், அனுகிரகத்தையும் பெற துவங்கினான் துருவன்.
உன்னுடைய மாசற்ற தவத்தினால் யாம் மனம் மகிழ்ந்தோம் என்றும், உனக்கு வேண்டும் வரத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்வாயாக... என்றும் தனது திருவாய் மலர்ந்து பக்தரிடம் கூறினார் திருமால்.
வரம் கேட்டல் :
வைகுண்டத்தில் வீற்றிருக்கும் வைகுண்ட நாதரே!!... என் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் தாங்கள் அறிவீர்கள் பிரபுவே... என்று கூறினார். அதாவது எனது சிற்றன்னையால் நானும், எனது தாயும் மிகவும் களங்கப்பட்டு துன்பத்தில் ஆழ்ந்துள்ளோம். இந்தத் துன்பத்திலிருந்து விடுபட்டு உலகில் உள்ள அனைவரும் வியக்கும் வண்ணம் காணும் வகையில் உயர்ந்த பதவியை தாங்கள் எனக்கு அளிக்க வேண்டும் என்றும், என்னுடன் பல இன்னல்களையும், துன்பங்களையும் அனுபவித்து வந்த எனது தாய்க்கும் ஒரு நல்ல நிலையை தங்களின் பார்வையால் அருள வேண்டும் என்றும் வேண்டி நின்றார் துருவன்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக