Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 27 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 167

அகத்திய முனிவரின் செயலைக் கண்ட இந்திரதேவன் மிகவும் ஆச்சர்யம் கொண்டு அவரை பிரம்மிப்போடு கண்டு கொண்டிருந்தார். அவ்வேளையில் அகத்திய முனிவர் உள்ளங்கையில் உளுந்து வடிவில் இருந்த கடல்நீர் முழுவதையும் பருகினார்.

அசுரனை வதம் செய்தல் :

கடல் நீர் அனைத்தும் வற்றிப்போனதும் கடலில் மறைந்திருந்த அனைத்து அசுரர்களும் வெளிப்பட்டு அங்குமிங்கும் ஓட துவங்கினர். ஆனால், இந்திரனின் விழிகளோ விருத்திராசுரனை மட்டும் தேடிக் கொண்டிருந்தது. இறுதியாக விருத்திராசுரனை கண்டார்.

கடலின் அடியில் இருந்த ஒரு மலை உச்சியின் மீது அமர்ந்து விருத்திராசுரன் தவம் செய்து கொண்டிருப்பதை கண்ட இந்திரன் தனது கரங்களில் இருந்த வஜ்ஜிராயுதத்தை அசுரனின் மீது ஏவினார். வஜ்ஜிராயுதம் மிகுந்த வேகத்துடனும், ஒளியுடனும் சென்று விருத்திராசுரனின் சிரத்தை அடைந்து துண்டித்து, அவனை வதம் செய்து மீண்டும் இந்திரனின் கரங்களுக்கே அந்த வஜ்ஜிராயுதம் வந்தது.

பிரம்மஹத்தி தோஷம் பற்றுதல் :

தேவர்களுக்கு எதிரிகளாக இருந்து செயல்பட்டு வந்த அசுரனான விருத்திராசுரன் அழிந்தான். ஆனால் விருத்திராசுரன், துவஷ்டா முனிவர் உருவாக்கிய வேள்வித் தீயிலிருந்து உருவானவன். துவஷ்டா முனிவர் பிரம்ம குலத்தைச் சார்ந்தவர். பிரம்ம குலத்தைச் சேர்ந்த முனிவரால் உருவாக்கப்பட்ட அசுரனும் பிரம்ம குலத்தை சார்ந்தவனாகவே கருதப்பட்டான். ஒரு பிரம்ம குலத்தைச் சேர்ந்த ஒருவனை வதம் செய்ததால் இரண்டாவது முறையாக மீண்டும் பிரம்மஹத்தி தோஷமானது இந்திரதேவனை பற்றிக்கொண்டது.

தேவேந்திரன் மறைதல் :

பிரம்ம குலத்தைச் சேர்ந்த விருத்திராசுரனைக் கொன்ற இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷமானது ஏற்பட்டது. இரண்டாவது முறையாக ஏற்பட்ட தோஷத்தின் விளைவாக இந்திரதேவன் தனது சித்தம் இழந்து பெரும் துன்பத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உண்டானது. சித்தம் இழந்த இந்திரதேவன், தேவர்கள் யாரும் அறியாவண்ணம் ஒரு சிறிய தாமரைக் குளத்திற்குள் சென்று மூழ்கினார்.

தேவேந்திரனான இந்திரன் தனது உருவத்தை சிறு வடிவில் மாற்றிக்கொண்டு அங்கிருந்த தாமரை தண்டுகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில் மறைந்து கொண்டார். தேவர்களின் அதிபதியான தேவேந்திரன் இல்லாததால் தேவலோகம் முழுவதும் தனது சுபத் தன்மையை இழந்து ஒளியில்லாத இருளைப் போன்று காணப்பட்டது.

தேவ பதவியை அடைதல் :

தேவர்களின் தலைவனான இந்திரன் இல்லாததால் தேவலோகத்தின் இந்திர பதவியை அடைவதற்கு நகுஷன் என்பவன் மிகவும் துணிவுடன் செயல்பட துவங்கினான். அதாவது, இந்திரனின் பதவியை அடைவதற்கான அஸ்வமேதயாகம், இன்னும் பல உயர்ந்த யாகங்கள் பலவற்றை செய்து அந்த யாகத்தின் பலனாக தேவேந்திரனாகவும், தேவர்களின் தலைவனாகவும் அமர்ந்தான் நகுஷன். தேவர்களின் தலைவனான பின்பு மனதில் அகம்பாவமும், ஆணவமும் பிடித்தவனாக செயல்பட துவங்கினான் நகுஷன். மற்ற தேவர்களையும் மதிக்காமல் அவர்களை அலட்சியத்துடன் நடத்தத் துவங்கினான்.

இந்திராணியை அடைய முயற்சித்தல் :

தேவர்களின் அதிபதியான நகுஷன் தேவராஜனின் அனைத்து பொறுப்புகளையும், பதவிகளையும் ஏற்கத் துவங்கினான். தேவராஜனின் பொறுப்புகள் மட்டும் அல்லாது எனக்கு இந்திராணியும் சொந்தமாக வேண்டும் என்று வாதம் செய்யத் துவங்கினான். மற்ற தேவர்களோ அதை தவறு என எடுத்துரைத்து நிராகரித்து வந்தனர்.

ஆனாலும் அவன் தனது முயற்சியை கைவிடாது இந்திராணியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திராணிக்கு பலவிதமான தொந்தரவுகளையும், இன்னல்களையும் கொடுக்கத் துவங்கினான். தனது தேவேந்திர பதவியின் மூலம் நகுஷன் செய்து வந்த அனைத்து கொடுமைகளையும், இன்னல்களையும் பொறுமையுடன் சகித்துக்கொண்டு தனது தேவனுக்கு என்னவாயிற்று? என்ற மனக்கவலையுடன் வாழ்ந்து கொண்டிருந்தார் இந்திராணி.

நகுஷன் இந்திராணியை அடைவதற்காக பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டும் அம்முயற்சிகள் யாவும் தோல்வியடைந்த வண்ணம் இருந்து வந்தன. இறுதியாக பொறுமை இழந்த நகுஷன் தன்னுடைய அந்தப்புரத்திற்கு இந்திராணியை அழைத்துவர தனது காவலாளிகளை அழைத்து ஆணைப் பிறப்பித்தான்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக