Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 168

பிரகஸ்பதியின் வருகை :

தேவலோகத்தின் அதிபதியான நகுஷன் பிறப்பித்த ஆணையை தனது திவ்ய சக்திகளின் மூலம் கண்ட தேவர்களின் குருவான பிரகஸ்பதி மிகவும் அதிர்ச்சி அடைந்தார். தான் கொண்ட பிடிவாதம் மற்றும் கோபத்தினால் இந்திரதேவனின் மனைவிக்கு கலங்கம் ஏற்பட்டுவிடுமோ? அவர்களின் கற்புக்கு கலங்கம் ஏற்பட்டால் அதற்கு நானே பொறுப்பாவேன் என்ற எண்ணம் அவரிடம் தோன்றவே இனியும் நாம் மறைந்து இருத்தல் ஆகாது என்று முடிவெடுத்து தனது மறைவிடத்தில் இருந்து வெளிவந்து, தேவலோகத்திற்கு செல்ல தனது பயணத்தை துவங்கினார்.

தேவலோகத்தில் தேவர்களின் குருவான பிரகஸ்பதியை கண்டதும் இந்திரதேவனின் மனைவியான இந்திராணி, அவரின் பாதங்களில் விழுந்து தனது கணவன் இழைத்த பிழைகளை தாங்கள் மன்னித்து அவரை மீண்டும் காத்தருள வேண்டும் என்றும், தனது கற்பிற்கு எவ்விதமான கலங்கமும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும் பொருட்டு தாங்கள் ஏதாவது வழிவகை செய்ய வேண்டும் என்றும் வேண்டி நின்றார்.

இந்திராணியை இந்நிலையில் கண்டதும் பிரகஸ்பதியின் மனமானது இளகத் துவங்கியது. பின்பு, இந்திராணிக்கு ஏற்பட இருக்கும் கலங்கத்தில் இருந்து காப்பாற்ற அதற்கான வழிவகைகளை பிரகஸ்பதி கூறத் துவங்கினார்.

ஆலோசனை கூறுதல் :

நகுஷன் சாதாரணமான பதவியில் இன்றைய நிலையில் இல்லை. அவன் உயர்ந்த பதவியில் இருக்கின்றான். மேலும், அவன் ஒரு சத்ரியன் ஆவான். அவனை அவ்வளவு எளிதில் வெற்றி கொள்வது என்பது இயலாத காரியமாகும். அவனது பராக்கிரமத்தை அடக்கியாள ஒரு உபாயம் மட்டுமே உள்ளது. அதை நீ மேற்கொண்டால் உனக்கு ஏற்பட இருக்கும் கலங்கமானது முற்றிலுமாக அகலும் என்று கூறினார்.

அதாவது நகுஷன் ஒரு தங்கப்பல்லக்கின் மீது அமர்ந்திருக்க... அவரை ஏழு ரிஷிகளும் தூக்கி வர... என்னை காண வேண்டும் என்றும், அவ்விதம் அவர் வந்து என்னை கண்டால் நான் உனது மனைவி ஆகின்றேன். இந்த தகவல்களை ஒற்றர்கள் மூலம் தேவேந்திரனான நகுஷனுக்கு சொல்லி அனுப்புங்கள் இந்திராணி என்று கூறினார் பிரகஸ்பதி.

நகுஷன் மனமகிழ்ச்சி அடைதல் :

தேவகுருவான பிரகஸ்பதி எடுத்துரைத்தப்படியே தேவேந்திரனான நகுஷனுக்கு தனது ஒற்றர்களின் மூலம் தேவகுரு எடுத்துரைத்த செய்திகளை தூது அனுப்பினார் இந்திராணி. தேவேந்திரனான நகுஷனிடம் சென்ற தூதுவர்கள் தேவி உரைத்த தகவலை எடுத்துரைத்தனர். தேவியிடம் நிகழ்ந்த இந்த மாற்றத்தை கண்ட தேவேந்திரனான நகுஷன் மிகவும் மனமகிழ்ச்சி அடைந்தார்.

தேவி உரைத்தப்படியே தேவ தச்சனை அழைத்து தங்கத்தால் ஆன ஒரு பல்லக்கை தயார் செய்ய ஆணை பிறப்பித்தார். பின்பு, தேவேந்திரனான நகுஷன் தனது தேவ தூதுவர்களின் மூலம் சப்தரிஷிகளை தேவலோகத்திற்கு அழைத்து வரும்படி அனுப்பி வைத்தார். தேவ தூதுவர்களும் நகுஷனின் எண்ணத்திற்கு ஏற்ப சப்தரிஷிகளை(சப்த முனிவர்களை) அழைத்துக்கொண்டு தேவலோகத்திற்கு வருகை தந்தனர். சப்த முனிவர்களில் அகத்திய முனிவரும் ஒருவராவார்.

ஆணை பிறப்பித்தல் :

தேவ தச்சனால் தயார் செய்யப்பட்ட தங்க பல்லக்கும் தயாராக தேவலோகத்திற்கு எடுத்து வரப்பட்டது. பின்பு, சப்த முனிவர்களை நோக்கி அந்த பல்லக்கில் யாம் அமர்ந்து கொள்வோம் என்றும், நீங்கள் அனைவரும் அந்தப் பல்லக்கை எடுத்துச்சென்று அந்தப்புரத்தில் உள்ள இந்திராணி அறையின் அருகே வரை தூக்கி வர வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார். தேவர்களின் அதிபதியான நகுஷனின் ஆணையை மீற மனமில்லாமல் முனிவர்களும் அவ்விதமே செய்யத் துவங்கினர். பல்லக்கும் புறப்படத் தொடங்கியது.

சப்தரிஷிகளில் ஒருவர் மட்டும் சிறியவராக இருந்தமையால் மற்றவர்களுக்கு இணையாக அவரால் நடக்க இயலாததால் அகத்திய முனிவரின் வேகத்திற்கு ஏற்ப மற்ற முனிவர்களும் நடக்கத் துவங்கினர். இதனால் பள்ளியறைக்குச் செல்லும் நேரமானது அதிகரிக்கத் துவங்கியது. இவர்கள் சென்ற வேகத்தினால் மிகுந்த கோபம் கொண்ட நகுஷன், சப்தரிஷிகள் ஒருவரை தூக்கிச் செல்ல இவ்வளவு நேரமா? யார் இந்த கூட்டத்தில் மிகவும் மெதுவாக செல்வது என்று சினத்துடன் கேட்க? அகத்திய முனிவர் தேவேந்திரனான நகுஷனை எட்டிப்பார்த்தார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக