Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 மார்ச், 2020

கர்மவினை !

பூஞ்சோலை ஓர் அழகிய நாடு. அந்நாட்டை நீதிநெறி தவறாமல் விஷ்ணுவரதன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அந்த அரசன் அந்தணர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தான். விஷ்ணுவரதனின் ஆட்சியில் மக்கள் எந்த ஒரு குறையும் இன்றி மகிழ்ச்சியாக இருந்தனர். ஒருநாள் அரசர் அந்தணருக்கு உணவளித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் வானில் ஒரு கழுகு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அரண்மனையின் மேல் பறந்துச் சென்றது.

அப்பொழுது எதிர்பாராத விதமாக பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. இதை யாரும் கவனிக்கவில்லை. எதையும் அறியாத அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளித்தார். அந்த உணவை உண்ட மறுகணமே அந்தணர் உயிர் துறந்தார். இதைக் கண்டு அரசர் மிகவும் வருத்தம் கொண்டார்.

கர்ம வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு குழப்பமாகி விட்டது. இந்த கர்மவினையை யாருக்கு கொடுப்பது.?

கழுகிற்கா?

பாம்பிற்கா?

அல்லது அரசனுக்கா?

கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது. அதனால் அது கழுகின் தவறு இல்லை.

பாம்பின் விஷம் அதன் வாயிலிருந்து வழிந்தது, அதனால் பாம்பின் குற்றமும் இல்லை.

இதை எதையும் அறியாத அரசன் உணவை வழங்கியது அரசனின் தவறுமில்லை. அரசனும் இதை வேண்டுமென்றே செய்யவில்லை.

இதற்கான கர்மவினையை யாருக்கு கொடுப்பது? சரி, நாம் சென்று எஜமான் எமதர்மனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தை சித்திரகுப்தன் கூறினார். இதைக் கேட்ட எமதர்மன், சிறிது நேரம் சிந்தித்தார். அதன் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும். அதுவரை பொறுமையாக இருக்கவும் என அறிவுறுத்தினார்.

ஒருநாள் சில அந்தணர்கள் பூஞ்சோலை நகருக்கு வந்தனர். அரசன் விஷ்ணுவரதனை காண அரண்மனைக்கு செல்ல நினைத்தனர். ஆனால் அந்த அந்தணர்களுக்கு, அரண்மனைக்கு செல்ல வழி தெரியாததால், பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள். அப்பெண்மணியும், அந்த அந்தணர்களுக்கு சரியான பாதையை கூறிவிட்டு, அந்தணர்களிடம், ஒரு விஷயம். நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால் இந்த அரசன் அந்தணர்களுக்கு உணவளித்து கொல்பவன் என்று கூறினாள்.

இப்பெண் இவ்வாறு கூறி முடித்ததும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. அந்தணரைக் கொன்ற கர்ம வினை இந்த பெண்மணிக்கே என முடிவு செய்தார்.

இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நடந்த உண்மை எதுவும் அறியாமல், அவர்களின் மேல் பழி சுமத்தினால் கர்மவினை அனைத்தும் அவர்களையே வந்து சேரும்.

தத்துவம் :

மற்றவர்கள் மீது பழி சொல்லும் முன் யோசிக்க வேண்டும். எதையும் அறியாமல் மற்றவர்கள்மீது பழி சுமத்துதல் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக