Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 மார்ச், 2020

சிவபுராணம்..! பகுதி 173

சிவராத்திரிக்கு உரிய பூஜைகளை போன்று நான்கு ஜாமங்களிலும் சொக்கலிங்க பெருமானுக்கு விசேஷ பூஜை செய்து கொண்டிருந்தனர். விடிய விடிய பூஜையானது நடைபெற்று கொண்டிருந்தது. பொழுது விடிந்ததும் தேவர்கள் அனைவரும் எம்பெருமானை வணங்கிவிட்டு தங்களின் விமானத்தில் ஏறி தங்களது லோகத்திற்கு சென்றனர்.

தேவர்கள் யாவரும் விண்ணுலகம் சென்ற பின்பு தனஞ்செயன் நித்திரையில் ஆழ்ந்த வண்ணமே இருந்திருந்தார். தான் நித்திரையில் இருந்து கண் திறந்து பார்க்கும் பொழுது தான் கண்டது கனவா? அல்லது நினைவா? என்று எண்ணுமளவிற்கு தேவர்களின் பூஜைகள் நடந்த வண்ணம் இருந்தன. தான் கண்டது கனவல்ல நினைவுதான் என்பதற்கு சான்றாக சொக்கலிங்கப் பெருமானுக்கு அருகிலிருந்த பூக்களும், வழிபாடுகளும் சாட்சியாக அமைந்திருந்தன.

வனத்தின் நடுவில் எழுந்தருளி இருக்கும் சொக்கலிங்கப் பெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கி, வலம் வந்து அவ்விடத்திலிருந்து நீங்க மனமில்லாமல் மிகவும் ஆச்சரியத்துடனும், கவலையுடனும் தன் ஊரான மணவூருக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தார் தனஞ்செயன். ஊருக்கு திரும்பிய தனஞ்செயன் உடலளவில் மட்டுமே தனது சொந்த ஊரில் இருந்தார். ஆனால், மனதளவில் கடம்பவனத்தில் தான் கண்ட காட்சிகளை எண்ணி எண்ணி மனம் மகிழ்ந்து கொண்டிருந்தார். பின்னர், சிறிது நேரத்தில் தான் கண்ட காட்சியைப் பற்றி மன்னரிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று எண்ணினார். பின்பு அரண்மனையில் வீற்றிருக்கும் மன்னனைக் காண விரைவாக சென்றார்.

மன்னரை காணுதல் :

கடம்பவனத்தின் கிழக்கு பகுதியை ஆண்டு வந்துகொண்டிருந்த குலசேகர பாண்டியனை வணங்கி மன்னா! நேற்று இரவு நான் வணிகத்தை முடித்து நமது நாட்டிற்கு வந்து கொண்டிருந்த பொழுது அருகிலிருந்த கடம்பவனத்தில் ஒரு அதிசயமான காட்சிகளை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று எடுத்துரைத்தார். மன்னருக்கோ வணிகரான தனஞ்செயன் கூறிய அதிசய காட்சியை அறிந்துகொள்ள ஆவல் தோன்றியது. என்ன அதிசய காட்சி வணிகரே! நானும் அறிந்துகொள்ள ஆவலாக இருக்கின்றேன் என்று கூறினார்.

தெய்வகாட்சியை கூறுதல் :

தனஞ்செயன் மன்னரிடம், மன்னா...!! நேற்று இரவு விண்ணுலகிலிருந்து தேவர்கள் யாவரும் அருகிலுள்ள கடம்பவனத்தில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த விமானத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானைக் காண வந்திருந்தனர் என்றும், அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எம்பெருமானை வணங்கி நியம நிஷ்டைகளுடன் நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்தனர் என்றும், சூரிய உதயத்தைக் கண்ட அவர்கள் தங்களது விமானங்களில் ஏறி அவர்களின் உலகத்திற்கு சென்றுவிட்டனர் என்றும், நானும் அந்த அரிய காட்சியைக் காண நேரிட்டது என்றும் எடுத்துரைத்தார்.

பரவசமும், பதற்றமும் :

தனஞ்செயன் கூறியதைக் கேள்விப்பட்டதும் மன்னர் மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஒருவிதமான பரவசத்துடனும் எம்பெருமானை தியானித்து இரு கைகளையும் சிரமேற்கூப்பி வணங்கினார். மனதில் ஒருவிதமான பக்தியும், ஆச்சரியமும் கொண்ட ஒருநாளாகவே அன்றைய பொழுது முழுவதுமாக மன்னருக்கு கழிந்தது. ஏனெனில் தனஞ்செயன் கூறியது உண்மையா? அல்லது பொய்யா? என்ற குழப்பம் அவர் மனதில் தோன்றத் தொடங்கியது. ஆனால், தனஞ்செயனோ தன்னிடம் எந்த ஒரு பொருளையும் எதிர்பார்க்கவே இல்லையே, அவன் கண்டு மகிழ்ந்த செய்தியை மட்டுமே தன்னிடம் எடுத்துரைத்து சென்று இருக்கின்றான். அவன் பொய்யுரைக்க வாய்ப்பில்லையே என பலவிதமான சிந்தனைகள் அவரிடத்தில் தோன்றத் தொடங்கின.

எம்பெருமான் தோன்றுதல் :

மனதளவில் தனஞ்செயன் கூறிய நிகழ்வுகளை எண்ணியவாறே குலசேகர பாண்டியன் அன்றிரவு நித்திரையில் ஆழ்ந்திருந்தார். நித்திரையில் ஆழ்ந்திருந்த குலசேகர பாண்டியனின் கனவில் எம்பெருமான் ஒரு சித்தரை போன்று தோன்றினார். கனவில் தோன்றிய எம்பெருமான், அரசனான குலசேகர பாண்டியனிடம் கடம்பவனக் காட்டை திருத்தி திருநகர் ஒன்று உருவாக்குவாயாக என்று ஆணையைப் பிறப்பித்து விட்டு மறைந்து சென்றார். எம்பெருமான் மறைந்ததும் தான் கண்டது கனவா? அல்லது உண்மையா? என்று மிகுந்த பயத்துடனும், ஆச்சரியத்துடனும் நித்திரையில் இருந்து எழுந்தார் மன்னர்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக