Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 மார்ச், 2020

சிவபுராணம்..! பகுதி 175

எம்பெருமான் காட்சி அளித்தல் :

திருநகரம் எவ்விதம் அமைக்கப்பட வேண்டுமென்று பல அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து கொண்டிருந்தார் குலசேகர பாண்டியன். அச்சமயத்தில் குலசேகர பாண்டியனின் கனவில் தோன்றிய சித்தரை போன்று காட்சி அளித்த எம்பெருமான் அவ்விடத்திற்கு வருகை தந்திருந்தார். தான் கனவில் கண்ட சித்தரை நேரில் கண்டதும் தன்னையும் அறியாமல் குலசேகர பாண்டியன் எழுந்து நின்று அவரை வணங்கினார்.

ஆகம விதிப்படி திருத்தலம் அமைதல் :

சித்தரின் உருவத்தில் எழுந்தருளிய எம்பெருமான் சிவாகம விதிப்படி தோன்றிய சிற்ப சாஸ்திர முறைப்படி ஆலயம், மண்டபம், கோபுரம் மற்றும் கோவிலை சுற்றி அமைக்கும் நகரங்கள் எந்தவிதத்தில் மற்றும் முறையில் அமைக்கப்பட வேண்டும் என்று அனைவருக்கும் புரியும் விதத்தில் எடுத்துரைத்து அவ்விடத்தை விட்டு மறைந்து சென்றார்.

சித்தரின் உருவத்தில் வந்து மறைந்ததும் வந்தவர் எம்பெருமானே...!! என்றும், தன்னுடைய இருப்பிடத்தை தானே நிர்ணயம் செய்துள்ளார் என்றும் அறிந்து, அங்கிருந்த அனைவரும் எம்பெருமானை எண்ணி மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தனர். எம்பெருமான் எடுத்துரைத்த சாஸ்திரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்று மன்னன் ஆணையை பிறப்பித்தார்.

பாண்டிய மன்னன் நாட்டில் உள்ள பல சிற்ப வல்லுநர்களையும், சிறந்த தளபதிகளையும் பல இடங்களிலிருந்து வரவழைத்து எம்பெருமான் சித்தர் உருவத்தில் அருளிச் சென்ற வண்ணத்தில் திருக்கோவிலும், திருநகரமும் அமைப்பதில் பெரிதும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

திருத்தலத்தில் இருக்கும் சிற்பங்கள் மிகுந்த முக்கியத்துவமும், கலைநுட்பமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் சிற்பக் கலைஞர்களை வரவழைத்து, அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். சிற்பங்கள் செய்வதற்கான கற்களையும் தகுந்த முறையில் தேடிச் சென்று திருத்தலம் உள்ள இடத்திற்கு எடுத்துவர பல நாடுகளில் இருந்தும் அவர் முயற்சி செய்து அவ்விடத்திற்கு அனைத்துக் கற்களையும் கொண்டு வந்தார்.

பாண்டிய மன்னன் பல சிற்பக் கலைஞர்களைக் கொண்டு பல அழகிய சிற்பங்களை செய்து எம்பெருமான் அருளியப்படியே திருத்தலமானது அமையப்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆழ்ந்த சிந்தனையில் சிந்தித்து செயல்பட்டு கொண்டிருந்தார். எம்பெருமானின் விருப்பத்தின் அடிப்படையிலேயே திருத்தலமும், திருநகரமும் அமையப் பெற்றன. வேத பத்ம மண்டபம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், உற்சவ மண்டபம் மற்றும் யாகசாலை என பல இடங்கள் மிகவும் நேர்த்தியுடனும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடனும் அமைக்கப்பட்டன.

திருக்கோவிலின் சுற்றுவட்டாரங்களில் உள்ள மதில் சுவர்களின் மீது அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் உடைய கோபுரங்கள் விண்ணைத் தொடும் அளவில், அனைத்தும் சாஸ்திர ரீதியாக தேர்வு செய்யப்பட்டு அழகிய முறையில் கட்டப்பட்டன. மேலும், திருத்தலத்தை மையமாகக் கொண்டு பல அழகிய வீதிகளையும் அமைத்துக் கொண்டிருந்தார் பாண்டிய மன்னன். முனிவர்கள் வந்து தங்குவதற்கு உரிய இடங்களும், மாணவர்களுக்கான கல்விச் சாலைகளும், மக்களின் போக்குவரத்திற்கான சாலை அமைப்புகளும், கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நாடக சாலைகள் என மக்களின் இன்றியமையாத தேவைகளை, திருத்தலத்தை மையமாகக் கொண்டே பாண்டிய மன்னன் அமைத்து வந்து கொண்டிருந்தார்.

மேலும், அந்நகரத்தை எம்முறையில் அழகுப்படுத்த முடியும் என பல வகைகளில் முயற்சி செய்து திருத்தலம் கொண்டிருக்கும் திருநகரத்தை மிகவும் எழில் மிகுந்த ஒரு அழகிய இடமாக அமைத்துக் கொண்டிருந்தார். திருத்தலத்தின் பணிகள் முடிந்தவுடன் தினமும் பெருமானை தரிசிக்க வேண்டும் என்று எண்ணி திருநகரத்தின் வடகிழக்கிலேயே தனக்கென்று ஒரு அரண்மனையையும் கட்டிக்கொண்டார் குலசேகர பாண்டியன்.

மதுராபுரி உருவாதல் :

திருத்தலமும், திருநகரமும் நன்முறையில் அமைக்கப்பெற்று அனைத்தும் சிறப்பாக இருந்த நிலையிலும் மன்னருக்கு ஏனோ மனதில் ஒருவிதமான கவலை இருந்தவண்ணமே இருந்து கொண்டிருந்தன.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக