வீரப்பன் என்பவர் ஒரு தொழிலாளி. அவருக்கு இரண்டு மகன்கள். பெரியவன் சிவா. இளையவன் சங்கரன். சிவா நல்ல ஆரோக்கியமான உடலுடன் அழகாக இருந்தான். ஆனால் சிறியவன் சங்கரன் இரண்டு கால்களும் செயலிழந்து நடக்க இயலாதவனாக இருந்தான்.
அந்தப் பிறந்த நாள் சங்கரனின் வாழ்வில் மறக்க முடியாத நாள். அவன் மாமா அவனுக்கு ஒரு வண்ணம் தீட்டும் பெட்டியைக் கொண்டுவந்து பரிசாகக் கொடுத்தார். கைக்குக் கிடைத்த தாள்களில் எல்லாம் அவனுக்குத் தோன்றிய படங்களை வரைந்து தள்ளி மகிழ்ந்தான். அவன் இருந்த அறை முழுவதும் தாள்கள் சிலசமயங்களில் அவன் அப்பா வீரப்பன் இதென்னடா குப்பை என்று திட்டிவிட்டுச் செல்வார். ஆனாலும் ஏதோ பொழுதைக் கழிக்கட்டும் என்று பேசாமல் இருந்து விடுவார். அவனுடைய வரையும் ஆர்வத்திற்கு தூண்டுகோலாக இருந்தவன் அவன் அண்ணன் சிவாதான். தினமும் பள்ளியில் இருந்து வந்தவுடன் தன் தம்பியுடன் சேர்ந்துதான் டீ அருந்துவான். சங்கரும் தன் அண்ணனுக்காகக் காத்திருப்பான். இருவரும் ஒருவர்மேல் ஒருவர் மிகுந்த அன்பு வைத்திருந்தனர்.
அன்றும் பள்ளி விட்டு ஓடிவந்த சிவா தன் தம்பி வரைந்த ஓவியங்களை எடுத்துக் கொண்டு ராதா டீச்சர் வீட்டுக்குப் போனான். அவர்களிடம் அத்தனை ஓவியங்களையும் கொடுத்தான். ஒரு வாரம் கழிந்ததும்தான் அவர்கள் ஏன் அந்த ஓவியங்களைக் கேட்டார்கள் என்று புரிந்தது. சிவா படித்த பள்ளியில் கலைப் பொருள் கண்காட்சி ஒன்று நடத்துவதாக ஏற்பாடாகியிருந்தது. அந்த சமயம் ஒரு அறை முழுவதும் சங்கரனின் ஓவியங்களுக்கு அழகாக தலைப்புகளைக் கொடுத்து வரிசைப் படுத்தி காட்சிக்கு வைத்திருந்தனர்.
பள்ளிவிழாவுக்கு வந்திருந்த பிரமுகர் அந்த ஓவியங்களைப் பாராட்டியதோடு சிறுவர்களுக்கான கலைப் போட்டி டில்லியில் நடக்கிறது அதற்கு இந்த ஓவியங்களில் சிறந்ததை அனுப்புமாறு ஆலோசனை கூறினார். ராதா டீச்சர் மிகுந்த மகிழ்ச்சியோடு அப்படியே செய்வதாக வாக்களித்ததோடு அடுத்த நாளே ஐந்து சிறந்த ஓவியங்களை அனுப்பிவைத்தார். அத்துடன் பள்ளியில் அந்த ஓவியங்களைப் பார்ப்பவர்கள் தங்களால் இயன்ற காசுகளைத் தருமாறு ஒரு உண்டியலும் வைத்திருந்தார். பதினைந்து நாட்களில் அந்த உண்டியலில் கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய்கள் சேர்ந்திருந்தன.
ராதா டீச்சர் அந்தத் தொகையை எடுத்துக் கொண்டு சிவாவுடன் அவர்களின் இல்லம் நோக்கிச் சென்றார். ராதா டீச்சர் வீரப்பனையும் அவர் மனைவி தேவானையையும் அழைத்து அவர்களிடம் பேசினார். அவனுடைய படங்கள் டில்லிக்குப் போயிருக்கின்றன. கட்டாயம் அவன் திறமைக்குப் பரிசு கிடைக்கும். இதோ அவனுடைய படங்களுக்கான வெகுமதி இந்தப் பணம். இதைவைத்து அவனுக்கு மரக்கால்களைப் பொருத்துங்கள். நானும் உதவி செய்கிறேன். அவனை உலகின் சிறந்த மனிதனாகத் தலை நிமிர்ந்து நிற்கச் செய்யலாம்.
தேவானை, அம்மா, இத்தனை நாள் நாங்கள் செய்த பாவம். அவன் விதி இதுன்னு இருந்தோம். ஆனா நீங்க சொன்ன பிறகுதான் அவனும் நல்லா வருவான்னு எங்களுக்குத் தெரியுதும்மா. உங்களுக்குத்தான் நாங்க நன்றி சொல்லணும் என்று டீச்சரின் கரங்களைப் பற்றிக் கொண்டாள் தேவானை. வீரப்பன் ஏதும் பேசாமல் கண்களில் நன்றியும் மகிழ்ச்சியும் கலந்த நீர் நிறைய சங்கரனை அணைத்துக் கொண்டார்.
அடுத்தமாதமே அந்த ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி பரிசுப் பொருள்களுடன் சங்கரனைத் தேடி வந்ததும் அவனுக்கு டில்லிக்கு வரச்சொல்லி அழைப்பு வந்திருப்பதும் விழாவில் குடியரசுத் தலைவரின் கையால் அவன் பரிசு பெறப் போவதையும் அறிந்த போது வீரப்பனால் நம்பவே முடியவில்லை.
தத்துவம் :
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக