பெண்களுக்கு பிரசவம் எவ்வளவு சந்தோஷம் நிறைந்ததோ அதை விட வலி நிறைந்தது. அதிலும் தலைப்பிரசவம் என்றால் மறுஜென்மம் என்றே கூறலாம். ஆனால் அந்தக் காலத்தில் இருந்த மாதிரி எல்லாம் இல்லாமல் தற்போது மருத்துவ துறை நிறையவே வளர்ச்சி அடைந்து உள்ளது.
பெண்களுக்கு பிரசவத்தின் போது ஏற்படும் வலியை குறைக்க எபிடியூரல் என்ற மயக்க மருந்து முதுகுத் தண்டுவடத்தில் செலுத்தப்படுகிறது. இந்த மயக்க மருந்து பெண்கள் பிரசவத்தின் போது அதிகம் சிரமமின்றி இருக்க உதவுகிறது. கருவுற்ற பெண்ணின் முதுகுத் தண்டுவடத்தில் செலுத்தப்பட்டு அந்த பகுதியை உணர்ச்சியற்றதாக மாற்றுகிறது.
இதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரசவ வலியை உணர முடிவதில்லை. ஆனால் இந்த பிரசவ முறையை தேர்ந்தெடுப்பதற்குள் சில விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
சுகப்பிரசவம்
பெரும்பாலான பெண்கள் சுகப்பிரசவத்தை தான் விரும்புகிறார்கள். ஆனால் நிறைய பெண்களால் பிரசவ வலியை தாங்க முடிவதில்லை. எந்த பிரசவ முறை என்றாலும் குழந்தை பிறப்பு ஒன்றாகவே உள்ளது. கருப்பை சுருங்கி விரிந்து வலி ஏற்பட்டால் நல்லது. இது குழந்தை பிறப்பை உங்களுக்கு எளிதாக்கும். நிறைய பெண்களுக்கு பிரசவத்தை பற்றிய பயம் அதாவது டோகோபோபியா உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே பயத்தை விடுத்து பிரசவத்தை எதிர்கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களுக்கு சுகப்பிரசவம் கடுமையாக இருந்தால் இந்த எபிடியூரல் மயக்க மருந்து முறையை தேர்ந்தெடுக்கலாம். இதனால் எந்த தவறும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எபிடியூரல் முறையின் நன்மைகள் மற்றும் தீமைகள்
இந்த முறையிலும் சில பக்க விளைவுகள் உள்ளன. இது குறித்து மருத்துவரிடம் பேசி அறிந்து கொள்ளுங்கள். பெங்களூரின் தாய்மை மருத்துவமனைகளின் ஆலோசகர், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் மொஹமத் மன்சூர் கருத்துப்படி, இந்த எபிடியூரல் மருந்தால் பெண்களுக்கு மூச்சுத் திணறல், குமட்டல் மற்றும் உடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் நடுக்கம் போன்ற பக்க விளைவுகள் உண்டாகிறது என்கிறார். அதே நேரத்தில் இதில் இருக்கும் நன்மை என்னவென்றால் இது உங்கள் குழந்தையை எந்த வகையிலும் பாதிக்காதாம். பிரசவ வலியை குறைத்து ஓய்வான மனநிலையை தருகிறது. பெண்களுக்கு குழந்தை பிறப்பை எளிதாக்குகிறது. குழந்தை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. பெண்கள் மயங்காமல் வெறும் மரத்து போகும் செயல் மூலம் பெண்களால் பிரசவத்தை காணவும் முடிகிறது.
தகுந்த சரியான மருத்துவமனையை தேர்ந்தெடுத்தல்
பிரசவத்தின் போது சரியான தகுந்த மருத்துவமனையை தேர்ந்தெடுப்பது அவசியம். ஏனெனில் இதில் உங்கள் நலனும் உங்கள் குழந்தையின் நலன் இரண்டுமே இருக்கிறது. எனவே உங்கள் நண்பர்களுடன் எல்லாரிடமும் விசாரித்து தகுந்த மருத்துவமனையை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். எபிடியூரல் சிகிச்சையின் போது உங்கள் கருவின் இதயத் துடிப்பு, மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஏனெனில் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. ஒவ்வொரு 5 முதல் 10 நிமிடங்களுக்கு இந்த கண்காணிப்பை மருத்துவமனை ஊழியர்கள் செய்தாக வேண்டும். எனவே இந்த மாதிரி எல்லா காரணிகளையும் கருத்தில் கொண்டு புத்திசாலித்தனமாக மருத்துவமனையை தேர்ந்தெடுங்கள்.
உங்களுக்கு எபிடியூரல் தேவையா?
எபிடியூரல் மயக்க மருந்து எல்லா பிரசவ பெண்களுக்கும் தேவைப்படுவதில்லை. உங்களால் பிரசவ வலியை எதிர்கொள்ள முடியும் என்றால் இது தேவை கிடையாது. முதுவலி பிரச்சனை இருக்கும் பெண்கள், இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு எபிடியூரல் மருந்து உயிரை குடிக்கும் ஒன்றாக அமைந்து விடும். எனவே அவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இரத்த அடர்த்தியை குறைத்து மெல்லியதாக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பெண்கள் எபிடியூரலை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இது பிரசவத்தின் போது இரத்தத்தை உறைய வைக்க வாய்ப்புள்ளது. அதே மாதிரி இரத்த சம்பந்தமான பிரச்சனை இருக்கும் பெண்கள் இந்த எபிடியூரல் முறையை எடுக்கக் கூடாது என்கிறார் டாக்டர் பண்டிதா சின்ஹா அவர்கள்.
எபிடியூரல் எப்போது வழங்கப்படும்?
பிரசவத்தின் தொடக்கத்திலயே இது கொடுப்பதில்லை. பிரசவம் ஆரம்பித்த பிறகே கொடுக்கப்படும். 4 அல்லது 5 செ.மீ வரை இடைவெளியில் ஒழுங்கான பிரசவ அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே இந்த மருந்து கொடுக்கப்படும். இல்லையென்றால் கொடுக்க மாட்டார்கள். மருந்து கலப்பதற்கு நேரம் எடுக்கும். இந்த ஊசியை ஒரு சாய்த்து படுக்க வைத்தோ அல்லது உட்கார வைத்தோ போடுவர். கேதீட்டர் வழியாக மருந்து உட்செலுத்தப்படும். அதுவரை பெண்கள் கொஞ்சம் வலியை பொறுத்தாக வேண்டியிருக்கும். எனவே வலிகளை தாங்க உங்களை மனதளவில் தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
கருவுற்ற பெண்ணின் ஒப்புதல் பெறப்படும்
நன்கு பயிற்சி பெற்ற மருத்துவரால் மட்டுமே எபிடியூரல் வழங்கப்படும். வழங்கப்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு அதைப் பற்றி தெளிவாக கூறப்பட்டு ஒப்புதல் பெற்ற பின்னரே அளிக்கின்றனர். முதுகை ஆன்டிசெப்டிக் திரவத்தால் சுத்தம் செய்து குறிப்பிட்ட இடத்தில் ஊசியை குத்துவார்கள். ஊசி வழியே எபிடியூரல் கதீட்டர் என்கிற சன்னமான, மிருதுவான பிளாஸ்டிக் குழாய் நுழைக்கப்படும். ஊசியை எடுத்து விட்டு, அந்த குழாயை முதுகின் மேல் டேப் போட்டு ஒட்டி விடுவார்கள். இதன் பிறகு சோதனைக்காக மிகக்குறைந்த அளவு மருந்து கொடுக்கப்பட்டு, பக்க விளைவு ஏற்படுகிறதா என பார்க்கப்படும். பிறகே தேவையான மருந்தை செலுத்தி மரத்துப் போக வைப்பார்கள்.
தயாராக இருப்பது
எபிடியூரல் பிரசவ முறையில் இருக்கும் பெரிய பிரச்சனை, பிரசவம் நடக்க சிறிது நேரம் ஆகலாம். நீண்ட நேரம் குழந்தை வெளிவர நேரம் பிடிக்கும் போது குழந்தையின் இதயத் துடிப்பு குறைய வாய்ப்புள்ளது. கருப்பை சுருக்கமும் குறைய ஆரம்பித்தால் குழந்தையை கருப்பையில் இருந்து வெளியே தள்ளுவது கடினமாகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மருத்துவர்கள் உடனடியாக சிசேரியன் செய்ய தயராகுவார்கள். எனவே எப்போதும் எந்த பிரசவம் ஆக இருந்தாலும் பெண்கள் தயாராக இருக்க முற்படுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக