Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 17 மார்ச், 2020

சென்னை கொரோனா பீதிக்கிடையே, இப்படி ஒரு சோகம்!


மெட்ரோ ஏற்படுத்திய பாதிப்பு
மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வந்த தண்டையார்பேட்டையில் கட்டிடம் சரிந்து இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வந்த நிலையில் திடீரென கட்டிடம் சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை ஒன்பது கிலோமீட்டர் தூரம் ரூ. 3 ஆயிரத்து 700 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.


இந்நிலையில் வண்ணாரப்பேட்டையிலிருந்து தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை வரை பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் செல்வதற்கான சுரங்க பணிகள் நிறைவுபெற்றது. இந்நிலையில் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை அருகே சுரங்கம் அமைப்பதற்காக ராட்சத கிரேன் மூலம் பள்ளம் தோண்டும் பணிகள் நடந்தது.

அப்போது, திருவொற்றியூர் நெடுஞ்சாலை தண்டையார்பேட்டை அருகே டீ கடை பேக்கரி உணவகங்கள் இருக்கும் கட்டிடம் ஒன்று அதிகாலை திடீரென்று இடிந்து கீழே சரிந்தது.


இதற்கிடையே, காலை வழக்கம் போல் டீக்கடையை திறப்பதற்காக வந்த ஊழியர்கள் கட்டிடம் சரிந்து விரிசல் விட்டு கீழே விழுவதை நேரில் கண்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த டீக்கடைக்காரர், சுவர் இடிந்து விழுவதைக் கண்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறி விட்டார்.


டீக்கடைக்காரர் வெளியே வந்தவுடன் கட்டிடம் முழுவதுமாக சரிந்து விழுந்தது. கடையின் உள்ளே சிலிண்டர்கள் குளிர்சாதனப் பெட்டி உணவு பொருட்கள் இருந்துள்ளது. இதையடுத்து மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தண்டையார்பேட்டை போலீசார் கட்டிட இடிபாடுகளில் ஊழியர்கள் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்பதைக் கண்காணிக்கத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தண்டையார்பேட்டை தீயணைப்புத் துறையிலிருந்து 3 வாகனங்களில் வந்த வீரர்கள் கட்டிட இடிபாடுகளில் சோதனை மேற்கொண்டனர்.


நல்ல வேளையாக எந்த உயிர்ச் சேதமும் ஏற்படாமல் பொருட்கள் மட்டுமே சேதமடைந்தது கண்டறியப்பட்டது. மெட்ரோ ரயில் பணிகள் எவ்வித பாதுகாப்பு வசதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல் நடந்து வருவதால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் விரிசல் ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் கொரோனா பரபரப்பால் வெளியே பெரிய செய்தியாக ஊடகங்களால் முன்னெடுக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக