இலட்சுமணர் அனுமனிடம், சகோதரனே! நாங்கள் ரகு
குலத்தில் பிறந்தவர்கள். அயோத்தியின் சக்ரவர்த்திகள். தசரத சக்ரவர்த்தியின்
புதல்வர்கள் இராமர், இலட்சுமணர். கைகெயி தாயின் கட்டளைப்படி, இராஜ்ஜியத்தை
பரதனிடம் ஒப்படைத்துவிட்டு நாங்கள் வனவாசம் வந்துள்ளோம். பிறகு அனுமன், சுக்ரீவனை
அழைத்து வரச் சென்றார். அனுமன் சுக்ரீவனிடம் சென்று, சுக்ரீவா! இனி நீ வாலியைக்
கண்டு அஞ்சி நடுங்க வேண்டாம். இனி உனக்கு துன்பம் நீங்கி இன்பம் வர போகிறது. உன்னை
காக்க இராமர் வந்துள்ளார். அவர் வாலியை கொன்று உன்னை காத்தருள்வார். இராமர்
நீதிநெறி தவறாதவர். விசுவாமித்திர முனிவரிடம் சீடனாக இருந்தவர். அரக்கர்கள்
தாடகையையும், சுபாகுவையும் வதம் செய்தவர். விராதனை கொன்றவர். கரன் முதலிய
அரக்கர்களை தனியாக நின்று கொன்றவர். தன் தாய் கைகெயின் கட்டளையினால் இராஜ்ஜியத்தை
துறந்து வனம் வந்து உள்ளார். இராமரால் உன் வாழ்வில் பிரச்சனைகள் தீரும். கவலைக்
கொள்ளாதே எனக் கூறினான்.
இராமாயணம்
சுக்ரீவன் அனுமனின் வார்த்தைகளை கேட்டு மிகவும்
மகிழ்ந்து போனார். உடனே தொலைவில் நிற்கும் இராம இலட்சுமணரை கண்டு
மகிழ்ச்சியடைந்தான். சிறிது நேரம் கண்ணிமைக்காமல் இராம இலட்சுமணைரையே பார்த்துக்
கொண்டு இருந்தான். பிறகு அவர்களின் பக்கம் சென்று தொழுது வணங்கினான். இராமரும் சுக்ரீவனை
தழுவிக் கொண்டார். இராமரோ சூரிய வம்சத்தில் பிறந்தவர். சுக்ரீவன் சூரியனின்
குமாரன். இவர்கள் இருவரும் ஒன்றுப்பட்டு இருந்தனர். சுக்ரீவன் இராமனை பார்த்து,
பெருமானே! தங்களை கண்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் பெரும் தவம் செய்து
இருக்கின்றேன். ஆதலால் தான் தங்களை இன்று நான் சந்தித்து உள்ளேன் என கூறினான்.
இராமர் சுக்ரீவனிடம், சுக்ரீவரே! மதங்க மகரிஷி ஆசிரமத்தில் சவரி மூதாட்டி உன்னுடைய
நற்குணங்களை என்னிடம் கூறி உன்னை சந்திக்கமாறு கூறினார். ஆதலால் தான் நான் உன்னை
நாடி வந்துள்ளேன் என்றார்.
சுக்ரீவன் பெருமானே! குற்றம் செய்யாத
என்னை, என் அண்ணன் வாலி மிகவும் துன்புறுத்தி வந்தார். ஆதலால் நான் இம்மலைக்கு
வந்து ஒளிந்து கொண்டேன். இம்மலைக்கு வந்தால் என் அண்ணன் வாலியின் தலை வெடித்து
விடும். இது மதங்க முனிவரின் சாபம் ஆகும். ஆதலால் நான் இம்மலையில் துன்பம் இன்றி
வாழ்ந்து வருகிறேன் என்றான். இதனைக் கேட்ட இராமர் சுக்ரீவனை கட்டி தழுவிக்
கொண்டார். சுக்ரீவா! இன்று முதல் நீ என் தம்பி. உன்னுடைய நண்பர் எனக்கும் நண்பர்.
உன்னுடைய பகைவர் எனக்கும் பகைவர். இன்று முதல் தசரதருக்கு ஆறு புதல்வர்கள்.
உன்னுடைய இன்ப துன்பங்களில் எனக்கும் பங்கு உண்டு. இனி நீ கவலைக் கொள்ளாதே என
ஆறுதல் கூறினார். இந்த கண்கொள்ளா காட்சியைக் கண்ட அனுமன் மிகவும்
மகிழ்ச்சியடைந்தான். மற்ற வானர வீரர்களும் இதனைக் கண்டு மகிழ்ச்சியுடன் ஆரவாரம்
செய்தனர். பிறகு எல்லோரும் சுக்ரீவனின் குகைக்குச் சென்றனர்.
சுக்ரீவன் தன் குகையில் இராம இலட்சுமணரை அமரச்
செய்தார். பிறகு சுக்ரீவன் தன்னிடமிருந்த காய் கனிகளை கொடுத்து உபசரித்தான். இதனை
பார்த்த இராமர் தன் மனதில், இவ்வுலகில் மனைவியுடன் இல்லறத்தில் வாழ்பவர்கள், தேடி
வரும் விருந்தினருக்கு மனைவிமார்கள் தான் உபசரித்து உணவு படைப்பார்கள். அது தான்
நியதி. மனைவி இருக்க கணவர் விருந்ததினை படைக்க மாட்டார்கள். இங்கு சுக்ரீவனின்
மனைவி உணவு படைக்க வில்லையே! என நினைத்தார். சுக்ரீவனிடம், தம்பி! நீ உன் மனைவியை
பிரிந்து வாழ்கிறாயா? எனக் கேட்டார். இதனை கேட்ட சுக்ரீவன், மிகவும் வருந்தி கண்
கலங்கி நின்றான். பிறகு அனுமன் நடந்தவற்றையெல்லாம் கூறினான். வாலியும்,
சுக்ரீவனும் அண்ணன் தம்பி. வாலியின் மனைவி தாரை, சுக்ரீவனின் மனைவி ருமாதேவி
ஆவாள்.
தொடரும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக