காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரத்திற்கு பின்னர், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தை பாராட்டியுள்ளார். நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்-டவுன் அமல் செய்யப்பட்டதை அடுத்து, இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் ஏழைகளுக்கு உணவு உடப்ட பல திட்டங்கள் அடங்கிய நிதி உதவி தொகுப்பை அறிவித்ததில் ராகுல் காந்தி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். மேலும் முதல் முறையாக இந்த அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
நிதித் தொகுப்பு அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, ராகுல் காந்தி ட்வீட் செய்து, "அரசாங்கத்தின் நிதி உதவி தொகுப்பு சரியான திசையின் முதல் படியாகும். இந்த தனிமைபடுத்துதல் உத்தரவை எதிர்கொள்ளும் விவசாயிகள், தினசரி தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், பெண்கள், விதவை மற்றும் முதியவர்களுக்கு இந்தியா கடன்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
ஏழைகளுக்கு ரூ .1.70 லட்சம் கோடி நிவாரண தொகுப்பு அறிவிப்பு:
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதன் பொருளாதார தாக்கத்தை சமாளிக்க 1.70 லட்சம் கோடி ரூபாய் 'பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா' திட்டத்தின் கீழ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை அறிவித்தார். குறிப்பாக ஏழை, முதியவர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு இது பயன் அளிக்கும். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ், 80 கோடி மக்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி மற்றும் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் கார்டுக்கு ஒரு கிலோ பருப்பு வகைகள் கிடைக்கும் என்று அவர் கூறினார்.
நிதி தொகுப்பை அறிவித்த சீதாராமன், 20.5 கோடி பெண்கள் "ஜன தன் கணக்கு" வைத்திருப்பவர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் வழங்கப்படும். இதனால் அவர்களுக்கு கூடுதல் உதவி கிடைக்கும் என்றார்.
ப.சிதம்பரமும் மோடி அரசைப் பாராட்டியுள்ளார்:
முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியின் 21 நாள் பந்த் அறிவிப்பை ஆதரித்தார். இது கொரோனாவுக்கு எதிரான போரில் ஒரு தீர்க்கமான கட்டம் என்று கூறினார். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட வேண்டும் என்றும், ஜூன் 30 ஆம் தேதிக்குள் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டியை ஐந்து சதவீதம் குறைக்க வேண்டும் என்றும் அவர் மத்திய அரசாங்கத்திற்கு ஒரு அறிக்கை மூலம் வலியுறுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக