சனி, 21 மார்ச், 2020

ஆஞ்சநேயரை சந்திக்கும் அர்ஜூனன்...!


 ர்ஜூனன் வந்த பின் பாண்டவர்கள் தங்கள் தவ வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் மேற்கொண்டனர். பாண்டவர்களை காண முனிவர்கள் வந்துச் சென்றனர். ஒரு நாள் அர்ஜூனன் நதிக்கரை வழியாக சென்று கொண்டிருந்தான். அப்போது மரத்தில் அமர்ந்து ஆஞ்சநேயர் தியானித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தான். அவரைப் பார்த்து, வானரரே! தாங்கள் யார்? என்று கேட்டான். ஆஞ்சநேயர் தன் தவ வலிமையால் தன்னிடம் கேட்பது அர்ஜூனன் என்பதை உணர்ந்து கொண்டார். அர்ஜூனா! நான் இராமாயண காலத்தில் இராமனின் தூதுவனாக இருந்த ஆஞ்சநேயன் என்றார். ஆஞ்சநேயரைப் பற்றி பல வழிகளிலும் கேள்விப்பட்டிருந்த அர்ஜூனன், ஆஞ்சநேயரை பணிவுடன் வணங்கினான். அப்போது அவனுக்குள் இருந்த கர்வம் விழித்துக் கொண்டது.

 வாயு புத்திரரே! இராமாயண காலத்தில் இராமர், சீதாதேவியை தேடி கடலில் வானரங்களை கொண்டு கல்லால் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இராமர் ஒரு சிறந்த வில்லாளி என்றும் அறிந்தேன். ஆனால் அவர் வில்லால் பாலத்தை அமைக்காமல், வானரங்களை வைத்து கல் பாலத்தை அமைத்துச் சென்றிருக்கிறார் என்றால், இராமர் சிறந்த வில் வீரர் இல்லை என்று தோன்றுகிறதே என்று கேட்டான்.

 இராம பக்தனான ஆஞ்சநேயரிடம், அர்ஜூனன் இப்படி இராமரின் திறமையை சந்தேகித்து பேசியவுடன், ஆஞ்சநேயருக்கு கோபம் வந்துவிட்டது. அதற்கு ஆஞ்சநேயர், அர்ஜூனா! இராமர் நினைத்தால் அந்த நிமிடமே நினைத்த இடத்தில் இருக்கும் வல்லமை பெற்றவர். அப்படிப்பட்டவரை நீ இகழ்ந்து பேசிவிட்டாய். வில் வித்தையில் சிறந்தவனான உன்னால் அனைவரையும் தாங்கும் ஒரு பாலத்தை அம்பால் அமைக்க முடியுமா? அப்படி அமைத்தாலும் அது என் ஒருவனின் கட்டை விரல் சுமையாவது தாங்குமா? என்று கேட்டார். மேலும் என் கட்டை விரல் சுமையை நீ அமைக்கும் பாலம் தாங்கிவிட்டால், மகாபாரத போரில் உனது தேரில் கொடியாக இருந்து உனக்கு உதவி புரிகிறேன் என்றார் ஆஞ்சநேயர்.

 அதற்கு அர்ஜூனன், ஏன் முடியாது? இப்போதே இந்த நதியில் என் வில்லின் சக்தி கொண்டு ஒரு பாலம் அமைக்கிறேன் என்று கூறிக்கொண்டே, கண நேரத்தில் அம்புகளை தொடுத்து ஒரு அம்பு பாலத்தை கட்டி முடித்தான். வானரரே! இதோ பாலம் அமைத்துவிட்டேன். இப்போது நீங்கள் இந்த பாலத்தில் ஏறி குதித்து விளையாடுங்கள் என்றான். நீங்கள் விளையாடி நான் கட்டிய அம்பு பாலம் உடைந்து விட்டால் நான் இங்கேயே என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று மீண்டும் ஆணவத்துடன் பேசினான்.

 ஆஞ்சநேயர், ராம ராம என்று துதித்துக்கொண்டே, தனது வலது காலின் கட்டை விரலை அந்த அம்பு பாலத்தின் மீது வைத்து அழுத்தினார். ஆஞ்சநேயர் கட்டை விரலால் அம்பு பாலத்தை அழுத்தியவுடன் அம்பு பாலம் சரிந்து விழுந்தது. இதனை பார்த்து, அர்ஜூனனின் ஆணவம் அழிந்தது.  பிறகு அர்ஜூனன், தான் அளித்த வாக்குறுதியின்படி தீக்குளிக்க முயன்றான். அப்போது அங்கு அந்தணர் உருவில் கண்ணன் வந்தார். அவர் அர்ஜூனனிடம் தீக்குளிக்க முயலும் காரணத்தைக் கேட்டார். அவரிடம் நடந்த விவரங்களை அர்ஜூனன் கூறினான். அதற்கு அந்த அந்தணர், நடுவர் இல்லாமல் எப்படி போட்டி நடத்தி வெற்றி தோல்வியை நிர்ணயிப்பீர்கள். எனவே போட்டி மீண்டும் நடைபெறட்டும். நான் நடுவராக இருந்து தீர்ப்பு கூறுகிறேன் என்று கூறினார்.

 அதன்படி மீண்டும் போட்டி நடந்தது. அர்ஜூனன் இப்போது கண்ணனை நினைத்தபடி மீண்டும் தனது வில்லை எடுத்து அம்பு மழை பொழியச் செய்து பாலத்தை கட்டினான். ஆஞ்சநேயரும் முன்பு செய்தது போலவே, தன்னுடைய கால் கட்டை விரலால் மிதித்தார். இப்போது அர்ஜூனனின் அம்பு பாலம் உடையவில்லை. ஆஞ்சநேயர் எவ்வளவு முயற்சி செய்து பார்த்தும், அந்த பாலம் சிறிது கூட அசையவில்லை. இதைக் கண்டு ஆஞ்சநேயர் திகைத்து நின்றார்.

அப்போது அந்தணர் உருவில் இருந்த கண்ணன், இருவருக்கும் சுயஉருவத்தைக் காட்டி அருள்புரிந்தார். பிறகு கண்ணன், ஆஞ்சநேயருக்கு இராமராக காட்சி தந்து, ஆஞ்சநேயரிடம் நீ கூறியபடியே மகாபாரதப் போரின்போது அர்ஜூனனுடைய தேரில் கொடியாக இருந்து அவனுக்கு உதவியாக இரு! என்று கூறினார். இருவரும் இராமராக காட்சி தந்த கண்ணனை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பிறகு, கண்ணன் அங்கிருந்து மறைந்துச் சென்றார்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்