இந்த கொரோனா வைரஸால், லட்சக் கணக்கான நிறுவன ஊழியர்கள், தற்போது வீட்டில் இருந்து வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
வங்கிகள்
இந்த சூழலிலும் இந்தியாவின் நிதி செயல்பாடுகள் வழக்கம் போல செயல்பட வேண்டும் என்பதால், வங்கிகள் செயல்பட அனுமதி கொடுத்து இருக்கிறது மத்திய அரசு. என்ன செய்ய, வங்கியில் வேலை செய்பவர்களும் மனிதர்கள் தானே..! ஆக அவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டாமா..? அப்படி தங்கள் ஊழியர்களைப் பாதுகாக்க கோட்டக் மஹிந்திரா சில நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்கள்.
கோட்டக் மஹிந்திரா
கோட்டக் மஹிந்திரா வங்கிக் கிளைகள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் என ஒட்டு மொத்த கோட்டக் மஹிந்திரா அலுவலகத்திலும் மிகக் குறைந்தபட்ச ஊழியர்கள் மட்டுமே வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்களாம். வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என, நலன் கருதி இந்த நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்களாம்.
ஆன்லைன்
கோட்டக் மஹிந்திரா வாடிக்கையாளர்கள், தங்கள் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகளை முழுமையாக வீட்டில் இருந்த படியே பயன்படுத்திக் கொள்ளலாம். முழு வங்கிச் சேவைகளையும் பெறலாம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதோடு கடந்த மார்ச் 23 முதல் கோட்டக் மஹிந்திரா வங்கிக் கிளைகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட்டு வருகிறதாம்.
வீட்டில் இருந்தே வேலை
எந்த துறைகளில் எல்லாம் வீட்டில் இருந்தே வேலை பார்க்க முடியுமோ அந்த துறைகளுக்கு எல்லாம் வீட்டில் இருந்தே வேலை பார்க்கச் சொல்லி இருக்கிறார்களாம். ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்த்தாலும் இணைய அளவில் பாதுகாப்பாகத் தான் இருக்கிறது எனவும் அடிக்கோடு போட்டுச் சொல்லி இருக்கிறார்கள்.
கோட்டக் மஹிந்திரா குழுமம், தன் ஊழியர்களுக்கு, இந்த மார்ச் 2020 மாதத்துக்கான சம்பளத்தை, முன் கூட்டியே, இன்றே (மார்ச் 26, 2020) கொடுத்து இருக்கிறார்களாம். சபாஷ், சரியான நடவடிக்கை என பாராட்டி முடிப்பதற்குள் இன்னும் ஒரு நல்ல திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள்
சோதனைச் செலவுகள்
கோட்டக் மஹிந்திரா வங்கி ஊழியர்கள் மற்றும் ஊழியர்களின் உடனடி உறவினர்கள் (கணவன், மனைவி, குழந்தைகள், அப்பா, அம்மா...) கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டு இக்கிறார்களா என அவசியம் சோதனை செய்து கொள்ளச் சொல்லி இருக்கிறார்கள். இப்படி தனியார் லேப்களில் சோதனை செய்து கொள்ளும் செலவை கோட்டக் ம்ஹிந்திரா வங்கி திருப்பிக் கொடுக்கும் எனவும் சொல்லி, நெஞ்சை அள்ளி இருக்கிறார்கள்.
கொரோன தவிர்ப்போம்
இப்படி ஒவ்வொருவரும் தங்கள் ஊழியர்கள் மற்றும் சுற்றி இருப்பவர்களை பார்த்துக் கொண்டாலே பாதி கொரோனா பயம் தன்னால் போய் விடும். பயத்தை தவிர்ப்போம், ஆனால் எச்சரிக்கையாக இருப்போம். சுய சுத்தத்தோடு, அரசுக்கு உதவுவோம், சமூக விலகளை கடை பிடிப்போம், கொரோனாவை வெல்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக