அந்த ஊழியர் யார்? அப்படி என்ன கேள்விகளைக் கேட்டு இருக்கிறார்? கடைசியாக, நம் ஜெஃப் பிசாஸுக்கு அந்த ஊழியர் சொன்ன செய்தி என்ன என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.
ஊழியர்
அமேசான் நிறுவனத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தவர் தான் க்ரிஸ் ஸ்மால்ஸ் (Chris Smalls). இவர் சமீபத்தில் அமேசான் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார். Fire செய்யப்பட்டார் என்பது தான் சரியான வார்த்தை. வேலையில் இருந்து நீக்கப்படும் போது, நியூயார்க் நகரத்தில் ஸ்டேடன் தீவில் (Staten Island) அமேசானுக்குச் சொந்தமான குடோனில், மேனேஜர் உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
காரணம்
இவர் வேலை பார்த்த அமேசான் நிறுவன குடோனில் பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக இல்லை. அதோடு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போதுமான முக மூடிகள், சானிட்டைசர்கள் என எதுவும் இல்லை. ஆகையால் குடோனை மூடி, முழுமையாக சானிட்டைஸ் செய்ய வேண்டும் எனச் சொன்னார்.
பணி நீக்கம்
அதோடு க்ரிஸ் ஸ்மால் வைத்த சில கோரிக்கைகளுக்கு அமேசான் நிறுவனம் செவி சாய்க்காததால், தன் அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதோடு நிறுவனத்தில் இருக்கும் பிரச்சனை குறித்து, விவரமாக பத்திரிகையாளர்களிடமும் நிலைமையை எடுத்துச் சொன்னார். எனவே க்ரிஸ் ஸ்மால் அமேசான் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
கோரிக்கை
மேலே சொன்னவைகள் எல்லாம் போக, வேலையில் இருந்து நீக்கப்பட்ட பின்னும், க்ரிஸ் ஸ்மால்ஸ் (Chris Smalls) ஒரு கோரிக்கை வைத்து இருக்கிறார். 'நீங்கள் அமேசான் வாடிக்கையாளரா? அமேசானில் பொருட்களை வாங்காதீர்கள். நீங்களே நேரடியாக மளிகை கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குங்கள். நீங்கள் சில உயிர்களை காப்பாற்றலாம்' என உருக்கமான கோரிக்கையையும் முன் வைத்து இருக்கிறார். அதன் பிறகு அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசாஸுக்கும் ஒரு செய்தி சொல்லி இருக்கிறார்.
கேள்வி
'மிஸ்டர் ஜெஃப் பிசாஸ், என் செய்தி எளிமையானது தான். உங்கள் அதிகார பலத்தை பற்றி எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை. நீங்கள் தான் பெரிய ஆள் (பலம் வாய்ந்தவர்) என்று நினைக்கிறீர்களா..?' என ஒரு பொளேர் கேள்வியைக் கேட்டு இருக்கிறார், அமேசானின் முன்னாள் ஊழியர் க்ரிஸ் ஸ்மால்
பதில்
அதற்குப் பின் அந்த கேள்விக்கு அவரே பதிலும் சொல்லி இருக்கிறார் 'எங்களிடம் தான் அந்த பலம் இருக்கிறது. நாங்கள் வேலை பார்க்கவில்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களிடம் பணம் இருக்காது. எனவே எங்களிடம் தான் பலம் இருக்கிறது. நாங்கள் உங்களுக்காக பணம் சம்பாதிக்கிறோம். அதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்' என கார சாரமாகச் சொல்லி இருக்கிறார் க்ரிஸ் ஸ்மால்.
என்ன தவறு
ஒரு ஊழியர், தன் அலுவலகத்தில் சுகாதாரம் சரியாக இல்லை. அதுவும் கொரோனா வைரஸ் கொடூரமாக பரவும் இந்த நேரத்தில் சுகாதாரம் போதவில்லை எனச் சொன்னது தவறா? அதற்காக அவரை வேலையில் இருந்து எல்லாம் நீக்க வேண்டுமா? எந்த முதலாளியும் தொழிலாளி இல்லாமல் வாழ முடியாது தானே..! அதை ஜெஃப் பிசாஸும் கொஞ்சம் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். புரிந்து கொள்வார் என நம்புவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக