Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 187

எம்பெருமானே! எனது மகளான தடாதகையை தாங்கள் திருமணம் செய்து கொண்டு என் நகரத்தையும், இந்நகரத்தில் உள்ள செல்வங்களையும் தாங்கள் அரசாட்சி செய்தருள வேண்டும் என்பதே என்னுடைய சிறு விண்ணப்பம் ஆகும் என்று காஞ்சனமாலை அவரிடம் கூறி விண்ணப்பித்திருந்தார். சிவபெருமான் காஞ்சனமாலையின் உண்மையான வேண்டுகோளுக்கு இணங்கி அவ்விதமே நடைபெறட்டும் என்று வாக்களித்தார். மங்கல வாத்தியங்கள் ஒலிக்க இசைக்கருவிகளுடன் திருமணம் நடைபெறும் மண்டபத்தை நோக்கி அனைவரும் பயணிக்கத் தொடங்கினர்.

திருமண மண்டபத்தில் நான்கு வேதங்கள் முழங்கிட அங்கிருந்த சிங்க ஆசனத்தின்மீது அமர்ந்திருந்தார் எம்பெருமான். திருமண மண்டபத்தில் தேவாதி தேவர்களும், மண்ணுலகத்தாரும், எம்பெருமானுக்கும் தாயாருக்கும் நடைபெறும் திருமணத்தைக் காண காத்துக் கொண்டிருந்தனர். திருமணம் நடைபெறுவதற்கான உரிய நல்ல நேரம் வருவதை அறிந்ததும் தேவ மாதர்களுடன் தடாதகைப் பிராட்டியார் திருமணக்கோலத்தில் வருகை தந்து கொண்டிருந்தார். திருமண மண்டபத்தில் இயல், இசை, நாடகம் என அனைத்தும் அரங்கேற்றம் செய்யப்பட்டு இருந்தன. தடாதகைப் பிராட்டியார் திருமணக்கோலம் புனையத் துவங்கினார். மகாலட்சுமியும், சரஸ்வதி தேவியும் பிராட்டியாருக்கு அலங்காரம் செய்வித்தனர்.

பிராட்டியாரின் அலங்காரமானது எந்தவகையிலும் எவராலும் உருவகமும், உவமையும் படுத்த முடியாத அளவில் இருந்த வண்ணம் இருந்தது. சகலமும் கொண்டிருந்த எம்பெருமானும் தேவியாரின் அலங்காரத்தில் தன்னை மறக்கும் அளவில் ஆனந்தமும், ஆச்சரியமும் கொண்டிருக்கும் வகையில் பிராட்டியாரின் திவ்ய அலங்காரம் இருந்து வந்தது. திருமணத்திற்கு உரிய நல்ல காலம் வந்ததும் திருமகளும் கலைமகளும் இணைந்து சுந்தரவல்லியான பிராட்டியாரை திருமணம் நடைபெறும் மேடைக்கு அழைத்து வர துவங்கினர். தேவியின் வருகையை கண்டதும் திருமண முரசுகள் யாவும் முழங்கின.

திருமணம் நடைபெறும் இடத்தில் இருந்த அனைவருக்கும் வீரத்துடனும், கரங்களில் வாளுடனும் பார்த்து வந்த பிராட்டியார் இன்று திருமணக்கோலத்தில் நளின நடையுடன் தனது மனம் கவர்ந்தவரை காண சிகை அலங்காரம் செய்து கொண்டு வந்திருப்பதை கண்டு வியப்பிலும், ஆச்சரியத்திலும் மூழ்கினர். நடப்பது கனவா? அல்லது கற்பனையா? என்னும் அளவிற்கு பிராட்டியாரின் தாயாரும் தனது விழிகளில் நீர் தளும்ப தனது மகளின் திருமணத்தை காண நின்று கொண்டிருந்தார்.

வெட்கம் மற்றும் நளினத்துடன் கூடிய மெதுவான நடையினால் தனது மனம் கவர்ந்த நாயகனின் அருகில் வந்து அமர்ந்தார். திருமணக்கோலத்தில் சுந்தரர் வடிவத்தில் இருக்கும் எம்பெருமானும் தேவியை காணும்போது கவியும் கற்பனையும், இசையும் ஆனந்தமும், மலரும் நறுமணமும் போல பிரிக்க இயலாத வகையில் காட்சியளித்தனர்.

பிராட்டியார் வந்து அமர்ந்ததும் திருமண நிகழ்ச்சியானது துவங்கியது. பரமேஸ்வரியின் திரு அவதாரமான பிராட்டியாரின் திருமணத்தை வைகுண்டத்தில் வீற்றிருந்த திருமாலே முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். பொற்கலசத்தில் உள்ள புனித நீரால் மகாவிஷ்ணு எம்பெருமானான சிவபெருமானின் திருவடிகளை கழுவி, மணம் கமழும் சந்தனம் இட்டு மலர்களைத் தூவினார்.

எம்பெருமானின் திருவடிகளை தழுவிய நீரினை அனைவரும் தலைமேல் தெளித்துக் கொண்டனர். அதன் பின்பு மகாவிஷ்ணு பெருமானுடைய வலது கையை வைத்து வேத மந்திரம் கூறி, தாரைவார்த்துக் கொடுத்து கன்னிகாதானம் செய்தார். தேவர்கள் பூமழை பொழிந்தனர். பாவலரும், நாவலரும் பாடி மகிழ்ந்தனர். அரம்பையர்கள் ஆடி மகிழ்ந்தனர்.

முனிவர்கள் சிவபெருமானின் தோத்திரங்களை ஒலித்துக்கொண்டு சிவ கோஷங்களை எழுப்பி கொண்டிருந்தனர். அங்கிருந்த அனைவரும் இந்த திருமண விழாவில் பங்கேற்று அதில் கிடைத்த மகிழ்ச்சியில் தங்களை உளமார மறந்து கொண்டிருந்தனர். யாவர்க்கும் காணக்கிடைக்காத காட்சியைக் காண எந்த பிறவியில் செய்த புண்ணியமோ என்று என்னும் அளவில் அனைவரும் மகிழ்ச்சி கொண்ட நிலையில் ஆழ்ந்திருந்தனர்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக