Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

சிவபுராணம்..! பகுதி190



திருமண விழாவில் அதிக வேலையின் காரணமாக பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என குண்டோதரன் சாப்பிடாமல் இருந்து கொண்டிருந்தார். அதை அறிந்த எம்பெருமானும் குண்டோதரனை அழைத்து உணவு அருந்தி வர ஆணையைப் பிறப்பித்தார். எம்பெருமானின் ஆணையை எவராலும் மீற இயலுமா? எம்பெருமானின் ஆணைக்கேற்ப குண்டோதரனும் உணவருந்த சென்றுகொண்டிருந்த பொழுது அவரது வயிற்றில் வடவைதீயை எனும் கொடும் பசியை எரிய வைத்தார் எம்பெருமான்.

அதுவரை பொறுமையுடன் நடந்து கொண்டிருந்த குண்டோதரனுக்கு வடவைதீயின் காரணமாக ஏற்பட்ட பசியினால் என்ன செய்கின்றோம் என்று அறியாத அளவில் இருந்ததால் மடப்பள்ளியில் நுழைந்தவுடன் தன் கண்ணில் பட்ட அனைத்து உணவு பொருட்களையும் உண்ண துவங்கிவிட்டார். அவ்வளவு உணவுகளையும் சாப்பிட்ட பின்பும் பசி அடங்கவில்லை, இன்னும் சாப்பாடு வேண்டும் என்று புலம்பிக் கொண்டே இருந்தார்.

குண்டோதரரின் புலம்பல்களை அறிந்த சமையற்காரர்கள் அவருக்காக மீண்டும் சமையல் செய்யப்பட்டு பரிமாறப்பட்டன. சமைத்துப் பரிமாறப்படும் உணவுகள் உண்ணப்பட்டு தீர்ந்து போயின. அவ்வளவு உணவு சாப்பிட்டும் இன்னும் பசிக்கிறதே... பசிக்கிறதே... என்று குண்டோதரன் புலம்பிக் கொண்டே இருந்தார். சமைத்த உணவுகளை மட்டும் இல்லாமல் பசியின் காரணமாக பழங்கள் மற்றும் காய்கறிகள் என அனைத்தையும் சாப்பிட்டு முடித்துவிட்டார். பால், தயிர் என எதையும் மீதம் வைக்காமல் அனைத்தையும் உண்ட பின்னும் தனக்கு இன்னும் பசி அடங்கவில்லையே என்று புலம்பிக் கொண்டே இருந்தார் குண்டோதரன்.

நிகழ்ந்தவற்றை சமையல்காரர்கள் மீனாட்சி அம்மையாரிடம் உரைத்தனர். நிகழ்வது யாது என்று புரியாமல் நின்று கொண்டிருந்த மீனாட்சி அம்மையார் ஒரு தனி நபரால் இவ்வளவு உணவுகளை உண்ண முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு சமையற்காரர்கள் அவன் வாயைத் திறந்தும் உணவுப் பொருளானது அவனது வாயை நோக்கி போய் விடுகின்றது. அரண்மனையில் வாங்கி வைத்திருந்த அனைத்துப் பொருட்களும் காலியாகிவிட்டன என்று கூறினர். அவ்வேளையில் அவ்விடத்திற்கு வந்த எம்பெருமானும் தேவியரை நோக்கி நான் அனுப்பிய பூதம் உண்டது போக இன்னும் உணவு இருக்கும் பட்சத்தில் மேற்கொண்டு சில பூத கணங்களை அனுப்புவதாக கூறினார்.

எம்பெருமானின் கூற்றுக்களை கேட்ட பிராட்டியார் சிறிது வெட்கமடைந்தார். எம்பெருமானே...!! தாங்கள் அனுப்பி வைத்த ஒரு பூதமே அங்கிருந்த அனைத்து உணவுகளையும் முழுமையாக உண்டு முடித்து விட்டது. மேற்கொண்டு சமைத்த உணவுகளையும் அவர் ஒருவர் மட்டுமே உண்டு மகிழ்ந்து கொண்டிருக்கின்றார். மேலும், உணவு வேண்டும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஐயனே!! என்னிடம் உள்ள செல்வ வளத்தால் நான் உலக மக்கள் அனைவருக்கும் உணவளிக்க இயலும் என்ற கர்வம் கொண்டு இருந்தேன். ஆனால், நான் கொண்ட செல்வத்தை கொண்டு தாங்கள் அனுப்பிய ஒரு பூதத்தின் பசியைக்கூட என்னால் போக்க முடியவில்லை. என்னை மன்னித்தருளுங்கள் என்று கூறி எம்பெருமானிடம் சரணடைந்தார்.

இதற்கு மேலும் தாங்கள் பூதங்களை அனுப்பினால் உண்பதற்கு எதுவும் இல்லை. அவர்கள் இந்த உலகத்தையே விழுங்கி விடுவார்களோ என்ற அச்சமும் உண்டாகின்றது. இப்பிரச்சனையிலிருந்து தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று பணிவுடன் கூறினார்.

குண்டோதரன் பெரும் பசியின் காரணமாக வெள்ளியம்பலத்தில் திருநடனம் புரிந்து கொண்டிருந்த சுந்தர பெருமான் முன்னிலையில் குவித்து வைத்திருந்த அன்னம் முழுவதையும் உண்ட பிறகு தனக்கு இன்னும் பசி தீரவில்லை நான் என்ன செய்யட்டும்? என்ன செய்வேன், என்று கதறி புலம்பிக் கொண்டே இருந்தார். பெருமூச்சுகளுடன் இந்நிலையை எண்ணி மனம் வருந்திக் கொண்டிருந்தார். சுந்தர பெருமான் வெள்ளியம்பலத்தில் ஆடிய திருநடனத்தை கண்ட வண்ணமே அவ்விடத்தில் அமைதியாக ஆனால் பெரும் பசியுடனும், சோர்வுடனும் அமர்ந்து கொண்டிருந்தார்.

பிரபஞ்ச நாயகனான சோமசுந்தரர், தடாதகைப் பிராட்டியாரை நோக்கி உள்ளத்தில் புன்னகைப் பூத்த வண்ணமே பசிப்பிணியால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற குண்டோதரனுக்காக தமது சக்திகளில் ஒன்றாகிய உலகிற்குக்கே அன்னத்தை அருளும் அன்னப்பூரணியை அவ்விடத்தில் நினைத்து அருளினார்.

எம்பெருமான் அன்னப்பூரணியை நினைத்த மாத்திரத்தில் குண்டோதரன் அமர்ந்திருந்த அவ்விடத்தில் தயிர் அன்னத்தினை உடைய நான்கு பெரிய குழிகள் தோன்றின. சோமசுந்தரரும் குண்டோதரனிடம் பசிநோயால் வாடும் குண்டோதரனே, இந்த குழிகளில் உள்ள தயிர் அன்னத்தினை உண்பாயாக என்று அருளினார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக