வியாழன், 9 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 195

பிரம்மதேவரை கண்ட கடல் அரசன் அவரை வணங்கி நின்றார். பின்பு பிரம்மதேவர் அக்குழந்தையை வாங்கியவுடன் குழந்தையின் அழுகையானது நிற்க துவங்கியது. பிரம்மதேவர் அந்தக் குழந்தையை தன் மடியின் மீது வைத்து கொஞ்ச துவங்கினார். 

அதே வேளையில் குழந்தையானது தன் கரங்களால் பிரம்மதேவரின் தாடியை பிடித்து இழுத்துக் கொண்டது. குழந்தையின் உள்ளங்கையின் பிடியிலிருந்து பிரம்மதேவரால் வெளிவர இயலவில்லை. குழந்தைக்கு பலவாறு விளையாட்டுகளைக் காட்டியும் குழந்தையின் பிடியிலிருந்து பிரம்மதேவரால் தப்பிக்க இயலவில்லை. 

பின்பு பிரம்மதேவர் குழந்தையின் பிடியில் இருந்து தப்பிக்க பல வரங்களை அளித்தார். அவ்வரங்களில் சிவபெருமானை தவிர எவராலும் உன்னை அழிக்க முடியாது என்ற வரத்தை பெற்ற பின்னரே குழந்தையின் பிடியில் இருந்து தப்பித்தார்.

குழந்தையாக இருந்து வந்த ஜலந்திரன் வளர்ந்து பருவ வயதை அடைந்தான். அவன் அசுரர்களோடு சேர்ந்து ஆற்றல் மிகுந்து விளங்கினான். காலநேமி என்பவனுடைய மகளான பிருந்தையை ஜலந்திரனுக்கு கடல் அரசன் மணம் முடித்து வைத்தார். 

மகா பதிவிரதையான அவளுடன் ஜலந்திரன் இனிதே வாழ்ந்து வந்தான். தேவ சாஸ்திரத்திலும், அஸ்திரத்திலும், சாஸ்திர வித்தைகளிலும் கற்றுத் தேர்ந்த ஜலந்திரன் தனக்கு ஒரு நிலையான பதவி வேண்டும் என்ற நோக்கத்துடன் தனது பலத்தை நிரூபித்து பல போட்டிகளை சந்தித்து தன்னை அசுரர்களின் மன்னனாக நியமித்துக் கொண்டான்.

தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட சமுத்திரத்திலிருந்து உற்பத்தியான அமிர்தம் மற்றும் நவரத்தினங்கள் யாவும் தேவர்கள் மட்டும் அனுபவித்து வருகின்றனர் என்றும், தனது அசுர குலத்திற்கு எவ்விதமான பலன்களும் அளிப்பதில்லை என்பதை அறிந்து மிகவும் வெகுண்டு எழுந்தார். 

இதை எவ்விதத்திலாவது தடுத்தாக வேண்டும் என்றும், தேவர்களின் வாழ்விடமான சொர்க்கபுரி மற்றும் செல்வங்களை அவர்களிடமிருந்து அபகரித்து சொர்க்கபுரியை அசுரர்கள் மட்டும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஜலந்திரனிடம் மேலோங்கத் துவங்கியது.

தேவர்களை வெற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜலந்திரன் மிகப்பெரிய படையுடன் அசுர வீரர்களை அணிவகுத்துக் கொண்டு தேவலோகம் சென்று கொண்டிருந்தான். மிகப்பெரிய உருவத்துடனும், பெரிய கூரிய பற்களுடனும் கரங்களில் வாள் ஏந்தி சிரத்தில் மிகப்பெரிய ஆரியனின் ஒளியை மறைக்கும் வகையில் ஜொலித்த கீரிடம் ஒன்றை அணிந்து கொண்டு வழி நடத்திக் கொண்டு சென்றார்.

ஜலந்திரனின் படைகளில் உள்ள அனைத்து அசுர வீரர்களிடமிருந்த அனைத்து கருத்து வேறுபாடுகளையும் குறைத்து இரத, கஜ, துரக, பதாதிகப் படைகளுடன் ஜலந்திரன் தேவ லோகத்தை அடைந்து தேவர்களின் மனம் அச்சம் கொள்ளக்கூடிய வகையில் கர்ஜித்துக் கொண்டிருந்தான். தேவலோகத்தில் இருந்த ஒற்றர்கள் ஜலந்திரன் சொர்க்க லோகத்தின் மீது போர்புரிய வந்துக்கொண்டு இருப்பதைக் தேவேந்திரனிடம் கூறினர்.

ஒற்றர்கள் கூறியதை அறிந்ததும் இந்திரன் தனது தேவ படைகளுக்கு அசுர படைகளுடன் போர்புரிய தயாராகும் வகையில் உத்தரவை பிறப்பித்தார். பின்பு தானும் போருக்கு செல்ல அனைத்து தேவ வீரர்களையும் படைத் திரட்டிக் கொண்டு தனது கரங்களில் வஜ்ஜுராயுதம் ஏந்திக் கொண்டு, ஐராவதத்தின் மீது அமர்ந்துக் கொண்டு, தனது தேவ படைகளை வழி நடத்திக் கொண்டு போருக்குப் புறப்பட்டார். இரு வேறு படைகளான தேவ, அசுர படைகள் ஒருவருக்கு ஒருவர் இணையாக வலிமை கொண்டு போர்புரியத் துவங்கினார்கள். இரு படைகளில் உள்ள வீரர்கள் அனைவரும் தங்கள் சக்தியை முழுமையாய்க் கொண்டு போர்புரியத் துவங்கினார்கள்.

இரு படைகளிலும் இருந்து வந்த யானைப் படைகள் ஒன்றை ஒன்று தாக்கத் துவங்கின. இரதங்களில் இருந்த வீரர்களும் ஒருவரை ஒருவர் தாங்கள் வைத்திருந்த அஸ்திரத்தால் தாக்கத் துவங்கினார்கள். அவர்கள் உபயோகித்த அஸ்திரங்கள் யாவும் நெருப்பினால் உருவாகும் மழையை போன்று பூமியின் மீது விழுந்தன. இவ்விதமாக இரு படையினரும் ஒருவரை ஒருவர் தாக்கி அழித்துக் கொள்வது என்பது ஒரு பிரளயம் கண நேரத்தில் உருவாகுவது போன்ற நிலையை உருவாக்கத் துவங்கியது. போரின் துவக்கத்தில் தேவ வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அசுர வீரர்களை வதம் செய்யத் துவங்கினார்கள்.

அதாவது, தேவ வீரர்களின் ஆயுதங்களால் அசுர வீரர்களின் சிரங்கள் மற்றும் புஜங்கள் யாவும் வெட்டப்பட்டு அசுர படை வீரர்களின் எண்ணிக்கையும் குறையத் துவங்கியது. அசுர வீரர்கள் போரில் பலியாகிக் கொண்டிருப்பதை அறிந்த ஜலந்திரன் கர்ஜனை செய்தவாறு தேவ படைகளுக்குள் தனியாக சென்று தேவ வீரர்களை அழிக்க துவங்கினான்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்