Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி196

ஜலந்திரனுடைய வீரத்தின் முன்னிலையில் தேவ வீரர்களின் செயல்பாடுகள் யாவும் தோற்று போயின. அதுவரை படைத்தளபதின் ஆணையில் கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வந்த தேவ படையானது சிதற துவங்கியது. 

தேவ வீரர்கள் யாவரும் சிதறி ஓடுவதைக் கண்ட தேவேந்திரன் மிகுந்த வேகத்துடன் வந்து ஜலந்திரனுடன் நேருக்கு நேராக மோத துவங்கினார். தேவேந்திரன் தனது வஜ்ஜுராயுதத்தை கொண்டு ஜலந்திரன் மீது தாக்கத் தொடங்கினார். 

அதனை எதிர்பார்த்து கொண்டிருந்த ஜலந்திரன் தனது வாளினால் எவராலும் வெல்ல இயலாத, உடைக்க இயலாத வஜ்ஜுராயுதத்தை உடைத்தெறிந்தார்.

தன்னுடைய வஜ்ஜுராயுதம் உடைந்ததை கண்ட இந்திரன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து ஒரு வேலினை கொண்டு ஜலந்திரனின் மார்பை நோக்கி மிகவும் வேகமாக வீசத் தொடங்கினான். 

தன்னை நோக்கி வருகின்ற வேலினை ஜலந்திரன் தான் கொண்ட வாளினால் தடுத்து அவர் எறிந்த அதே வேலினை தனது கரங்களில் ஏந்தி திரும்பவும் இந்திரனை தாக்குவதற்காக ஏறிந்தார். ஜலந்திரன் எறிந்த வேலானது இந்திரன் அமர்ந்திருந்த ஐராவதத்தின் மீது தாக்கத் துவங்கியது.

 ஜலந்திரனின் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் ஐராவதம் மிகுந்த வேதனையுடன் கர்ஜித்தபடி சரிந்து விழுந்தது.

ஐராவதமும் தேவ படைவீரர்களும் தனது பலத்தை இழந்து கொண்டு வருவதை அறிந்த இந்திரன் தனது சக்திகள் யாவும் ஜலந்திரன் இந்நிலையில் வெற்றி கொள்ள போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டதும் அவ்விடத்திலிருந்து மறைந்து சென்றார். 

இந்திரன் போர்க்களத்தில் இருந்து மறைந்து சென்றதும் தேவ படைவீரர்கள் யாவரும் யாது செய்வதென்று புரியாமல் அவ்விடத்திலிருந்து மறையத் தொடங்கினர். தேவ படைவீரர்கள் அனைவரும் அவ்விடத்திலிருந்து மறையத் தொடங்கியதும் அசுர வீரர்கள் யாவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேவர்கள் பயந்து ஓடிவிட்டனர், இந்திரன் ஓடி விட்டான் என்று கர்ஜித்தப்படி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

தேவர்கள் அசுரர்களை கண்டு பயந்து ஓடுவதைக் கண்டதும் அசுரர்கள் தேவலோகத்திற்குள் நுழைந்து தேவலோக கன்னியர்கள் மற்றும் பொருட்களை கைப்பற்றத் தொடங்கினர். தேவர்கள் அனைவரும் போர்க்களத்தில் மறைந்து சென்றதை அறிந்த தேவேந்திரனின் மனைவியான இந்திராணி தேவகுரு பிரகஸ்பதிடம் சென்று தஞ்சம் அடைந்து கொண்டார். தேவகுருவும், இந்திராணி தேவியரும் அசுரர்களின் பார்வையில் இருந்து மறைந்து சென்றனர்.

தேவலோகம் முழுவதும் தனது கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் ஜலந்திரனுடைய கவனம் அடுத்தாக அக்னி தேவன் ஆட்சி புரிந்து வந்த ஜோதிஷ் மதி பட்டணத்தின் பக்கம் திரும்பியது. தனது அசுர படைகளுடன் அவ்விடத்திற்கு சென்று ஜோதிஷ் மதி பட்டணத்தை முற்றுகையிட்டான். அக்னி தேவன் தனது படைகளை திரட்டிக் கொண்டு வந்து ஜலந்திரனுடன் போர் புரிந்தார். அக்னி தேவனுடைய வீரர்கள் தங்கள் ஆயுதமான தீ ஜுவாலையுடன் கூடிய ஆயுதங்களால் பல அசுரர்களை சாம்பலாக்கினார்.

அக்னி வீரர்களினால் தனது பெரும்படையானது குறைந்து கொண்டு இருக்கின்றது என்றும், மேலும் பல அசுர வீரர்கள் அக்னி வீரர்களின் தீ ஜுவாலைகளுக்கு பயந்து புறமுதுகிட்டு ஓடுவதை அறிந்ததும் அவர்கள் செல்லும் பாதையின் குறுக்கே தனது தேரை நிறுத்தினான் ஜலந்திரன். பின்பு பயந்து ஓடி கொண்டு இருக்கும் அசுர வீரர்களை நோக்கி இந்திர தேவர்களையும் இந்திரலோகத்தினையும் கைப்பற்றிய நமக்கு அக்னி வீரர்கள் சாதாரணமானவர்களே... இவர்களை வெல்வதற்கு பயந்து புறமுதுகிட்டு ஓடுவது என்பது நமது வீரத்திற்கு இழுக்காகும். இவர்களை வெற்றி கொள்வதே நம் இலக்காகும் என்பதை மனதில் கொண்டு போர் புரியுங்கள்.

தைரியத்துடன் எதிரி படைகளை அழித்து அவர்களின் ராஜ்ஜியத்தை வெற்றி கொள்வோம்... யாம் என்றும் உங்களுடன்தான் இருக்கின்றோம்... தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்களாக... என்று பயத்தில் இருந்து வந்த அசுர வீரர்களை தைரியமாக போர் புரியும் வகையில் உற்சாகமூட்டினான் ஜலந்திரன். அதுவரை புறமுதுகிட்டு ஓடிக்கொண்டிருந்த அசுர வீரர்களும் ஜலந்திரனின் உரையாடலைக் கேட்டவுடன் மனதில் புதிய தன்னம்பிக்கையுடன் அக்னி வீரர்களை எதிர்கொள்ள தயாராகி கொண்டிருந்தனர். அசுரர்கள் திரும்பவும் தங்களை தாக்க வருவதை உணர்ந்த அக்னி வீரர்கள் மேலும் தங்களது அக்னியை பிரயோகிக்க துவங்கினர். அக்னியினால் தனது வீரர்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்ததும் சிறு பொழுதில் அக்னி வீரர்களின் ஆயுதங்கள் மற்றும் அவர்களின் சக்திகளை அழிக்கும் வேகத்தில் செயல்படத் துவங்கினர்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக