Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 003

அமர்நீதி நாயனார் புராணம்!!

காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் சோழநாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு அருகில் அமைந்துள்ள பழையாறை என்னும் ஊரில் வணிகர் குலத்தில் பிறந்தவர் அமர்நீதி நாயனார். இவர் சிவபெருமானின் மீது பக்தி மிகுந்தவர். பிறந்த குலத்திற்கு ஏற்ப வணிகத்தின் மூலம் பொன்னோடும், பொருளோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தார்.

தான் செய்து வந்த வணிகத்தில், நல்வழியில் ஈட்டிய பொருள் செல்வத்தின் பெரும்பகுதியை சிவத்தொண்டிற்கும், அடியார்களுக்கும் செலவழித்தார். தனது இல்லத்திற்கு வரும் சிவனடியார்களுக்கு திருவமுது அளித்தும், அவர்களுக்கு தேவையான ஆடைகளையும், அரைத்துண்டுகளையும் அளித்து ஆனந்தம் அடைந்து கொண்டிருந்தார்.

பழையாறைக்கு அருகில் உள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலம் திருநல்லூர். இவ்விடத்தில் ஆண்டுதோறும் அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்குத் திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். இவ்விழாவில் கலந்துகொண்டு எம்பெருமானின் அருளைப் பெறுவதற்காக வெளியூர்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் திரண்டு வருவார்கள். அவ்விழாவிற்கு அமர்நீதி நாயனாரும் தம் குடும்பத்துடன் சென்று இறைவனை வழிபாடு செய்து கொண்டிருந்தார்.

அவ்விழாவின்போது சிவனடியார்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றும் பொருட்டு திருநல்லூரில் சிவமடம் ஒன்றை நிறுவினார். அங்கு வரும் சிவனடியார்களுக்கு தேவையான அன்னம், வஸ்திரம் ஆகியவற்றை தானம் செய்து கொண்டிருந்தார். திருவிழாக்காலங்களில் தம் உறவினர்களோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, ஆடை ஆகியவற்றை அளித்து வந்தார்.

இவ்வாறு இருக்கையில் ஒருநாள் இறைவன் அவர் பெருமையை உலகிற்கு உணர்த்த விரும்பி திருவிளையாடல் நிகழ்த்த திருமடம் வந்தார். அதாவது அந்தணர் குல பிரம்மச்சாரியாய் உருவம் கொண்டு கோவணம் மட்டும் அணிந்து இரு கோவணம் முடிந்த தண்டுடன் திருநல்லூரிலிருக்கும் அமர்நீதியார் மடத்திற்கு வந்தார்.

அமர்நீதி நாயனார், தன்னுடைய மடத்திற்கு வந்த பிரம்மச்சாரியை இன்முகத்துடன் வரவேற்று தாங்கள் இங்கே முதல் தடவையாக வருகை தந்துள்ளீர்கள் என்று கருதுகிறேன் என்று கூறினார். அதைக்கேட்ட அடியாரும், அடியார்க்கு வேண்டிய உணவும், ஆடையும் மற்றும் கோவணமும் தருவதாக கேள்விப்பட்டோம். அதனால் உம்மை கண்டு செல்லலாமே என்று இங்கு வந்திருக்கின்றோம் என்று பதிலுரைத்தார்.

பிரம்மச்சாரி உருவில் வந்த சிவபெருமான் கூறியதைக் கேட்ட அமர்நீதி நாயனார் உள்ள மகிழ்வுடன் அவருக்கு பாதபூஜை செய்து திருவமுது உண்ண பணிவுடன் அழைத்தார். உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுகிறோம். ஆனால் பிரம்மச்சாரியோரோ முதலில் யாம் காவிரியில் நீராடி விட்டு வருகின்றோம். வானம் மப்பும், மந்தாரமுமாக இருப்பதால் ஒருவேளை மழை வந்தாலும் வரலாம். அவ்வாறு இருக்கையில் இக்கோவணம் இரண்டும் நனைந்து போக வாய்ப்புள்ளது. அதனால் ஒன்றை மட்டும் கொடுத்து விட்டுப்போகிறேன். அதுவரை என்னுடைய ஒரு கோவணத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். இந்த கோவணம் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். யாம் எனது கடமைகளை முடித்துவிட்டு திரும்பி வந்து வாங்கிக்கொள்கிறேன் என்றும், நீராடிவிட்டு மாற்றுவதற்கு கையில் இருந்த மற்றொரு கோவணத்தை எடுத்துச்சென்றார்.

இவ்வாறு உரைத்த அடியார் தனது தண்டத்தில் இருந்த கோவணங்களில் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் ஒப்படைத்து விட்டு நீராடி வருவதற்காக காவிரிக்குப் புறப்பட்டார். அடியார் உரைத்ததை நினைவில் கொண்ட அமர்நீதி நாயனார், அடியார் தன்னிடம் கொடுத்த கோவணத்தை மற்ற கோவணங்களோடு வைக்காமல் தனியே ஒரு பெட்டகத்தில் தக்க பாதுகாப்புடன் வைத்தார்.

எம்பெருமான் தனது திருவிளையாடலை தொடங்கினார். அதாவது வணிகரிடம் கொடுத்த கோவணத்தையும் மாயமாக மறையச் செய்தார். அதுமட்டுமல்லாமல் மேகங்களை கூடச் செய்து மழைப் பொழிவையும் ஏற்படுத்தினார். காவிரியில் நீராடிய பிறகு சிவனடியார் திரும்பி வந்து கொண்டிருந்தபோது மழை துளியால் முழுமையாக நனைந்தார். அதனால் அவர் அணிந்திருத்த கோவணமும் நனைந்தது.

சிவனடியார் நீராடி விட்டு வருவதற்குள் அமர்நீதி நாயனார் அவருக்கு வேண்டிய உணவை சமைத்து தயார் நிலையில் வைத்துக்கொண்டு அவரின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார். அவ்வாறு இருக்கையில் அடியார் மழையில் நனைந்து கொண்டு வருவதைக் கண்டதும் மனம் பதறிப்போன அமர்நீதி நாயனார், விரைந்து சென்று அடியார் மேனிதனைத் துவட்டிக் கொள்ள துணியை கொடுத்தார்.

அடியாரோ... எதற்கு இந்த துணி? எனக்கு நான் கொடுத்த கோவணம் மட்டும் எடுத்து வாரும்... பெய்த மழையினால் எனது உடலும், கோவணமும் ஈரமாகிவிட்டது என்றார். அடியாரின் கூற்றுக்களை கேட்டதும் அமர்நீதி நாயனார், கோவணத்தை எடுத்து வர உள்ளே சென்றார். அடியாரின் கோவணத்தை வைத்திருந்த பெட்டகத்தை திறந்து பார்த்ததும் அதில் கோவணம் இல்லாமல் வெறுமையாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்பு அந்த அரை முழுவதும் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் அடியாரின் கோவணத்தை காணவில்லை. அமர்நீதி நாயனாரின் துணைவியார் என்னவாயிற்று நாதா? ஏன் இவ்வளவு பதற்றத்துடன் இருக்கிறீர்கள் என வினவினார். அமர்நீதி நாயனார் நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்தார். பின்பு அமர்நீதி நாயனாரும், அவர் மனைவியாரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

மனைவியோடு கலந்து ஆலோசித்து இறுதியில் இன்னொரு அழகிய புதிய கோவணத்தை எடுத்துக்கொண்டு அடியார் முன்பு சென்று கவலைக்கொண்ட முகத்துடன் தோன்றி என்ன செய்வது? என்று தெரியாமல் தலைகுனிந்து நின்றார். கண்களில் நீர் வழிய அடியாரை நோக்கி எம்மை அறியாமல் தவறு ஒன்று நிகழ்ந்து விட்டது. அதனை தாங்கள் பொறுத்தருள வேண்டும் என்றார் அமர்நீதி நாயனார்.

அமர்நீதி நாயனாரின் கூற்றுக்களை கேட்டதும் அடியார் எமக்கு ஒன்றும் புரியவில்லை என்று யாதும் அறியாதது போல் இருந்தார். அடியாரே... தங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட கோவணத்தைப் பாதுகாப்பான இடத்தில்தான் வைத்திருந்தேன். ஆனால் தங்கள் வந்த பின்பு போய் பார்த்தால், வைத்திருந்த இடத்தில் கோவணத்தைக் காணவில்லை. பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது. அதனால் அடியார் அவர்கள் இதனை அணிந்து கொண்டு நான் இழைத்த இப்பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று மிகத் தாழ்மையோடு மனம் உருகி வேண்டினார்.

அமர்நீதி நாயனாரின் கூற்றுக்களை கேட்டதும் அடியார்க்கு சினம் ஏற்பட்டது. இப்படித்தான் வரும் சிவனடியார்களிடம் உள்ள கோவணத்தை எடுத்து விற்று விடுகிறாயா? எனக்கு என்னுடைய கோவணம் தான் வேண்டும் என்று கூறினார். செய்வதறியாமல் திகைத்து நின்றார் அமர்நீதி நாயனார். பின்பு, அடியாரிடம் பலமுறை மன்னிப்பு கேட்டார். அமர்நீதி நாயனாரின் கூற்றுக்களை கேட்டதும் சினம் சற்று தணிந்தாற்போல் பாவனை செய்தார் சிவனடியார்.

பின்பு, நான் செய்த இப்பிழைக்கு தங்களுக்கு வேண்டிய பொன்னும், பொருளும் அளிப்பதாக கூறினார் அமர்நீதி நாயானார். அதற்கு அடியாரோ... எனக்கு எதற்கு உன்னுடைய பொன், பொருள். என்னுடைய கோவணம் மட்டும் போதுமானது என்றார். அமர்நீதியாரோ... என்னால் உங்களின் கோவணத்தை தர இயல முடியவில்லை. ஆனால், அதற்கு ஈடாக என்னிடமுள்ள கோவணத்தைத் தருகிறேன் என்று கூறி உள்ளே சென்று துலாக்கோலை எடுத்து வந்து அடியார் முன்பு நீட்டினார்.

அடியவரிடமிருந்து கோவணத்தை வாங்கி ஒரு தட்டிலும் தம் கையில் வைத்திருந்த கோவணத்தை மற்றொரு தட்டிலுமாக வைத்தார். துலாக்கோலின் நிறை சரியாக இல்லை. அதைக் கண்டதும் அமர்நீதி நாயனார் அடியார்களுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த கோவணங்கள் என அனைத்தையும் எடுத்து வந்து வைத்தார். அப்பொழுதும் துலாக்கோலின் நிறையானது சரியாக நிற்கவில்லை. துலாக்கோலில் அமர்நீதி நாயனாரின் தட்டு உயர்ந்தே இருந்தது.

அமர்நீதி நாயனார் தான் நெய்து வைத்த அனைத்து கோவணங்களையும் எடுத்து வந்து ஒவ்வொரு கோவணங்களாக தட்டில் வைத்துக்கொண்டே வந்தார். அவைகள் அனைத்தையும் வைத்தும் எடையானது சமமாகவே இல்லை. அடியாரின் கோவணமானது துலாக்கோலில் இருந்த தட்டில் தாழ்ந்தே இருந்தது. நிகழ்வது யாதென்று புரியாமல் நின்று கொண்டிருந்தார். இதென்ன உலகில் நிகழாத மாயமாக உள்ளது என்று எண்ணியவாறு தன்னிடம் உள்ள நூல் பொதிகளையும், பட்டாடைகளையும் துலாக்கோலின் தட்டில் வைத்துக்கொண்டே இருந்தார்.

பொன்னும், பொருளும், வெள்ளியும், வைரமும், நவமணித் திரளும் மற்றும் பலவகையான உலோகங்களையும் கொண்டு வந்து தட்டில் குவித்தார். எவ்வளவுதான் வைத்தப்போதும் எடை மட்டும் சரியாகவே இல்லை. அமர்நீதி நாயனார் தட்டு உயர்ந்தும், அடியாரின் தட்டு தாழ்ந்தும் இருந்தது. அங்கு கூடியிருந்த அனைவரும் இக்காட்சியைக் கண்டு வியந்து நின்றனர்.

அமர்நீதி நாயனார் தம்மிடமுள்ள எல்லாப் பொருட்களையும் கொண்டுவந்து தராசுத்தட்டில் மலைபோல் குவித்து வைத்தார். அவரிடமுள்ள பொருட்கள் அனைத்தும் ஒரு வழியாகத் தீர்ந்தது. இனிமேல் அவரிடமிருப்பது அவரின் குடும்பம் மட்டும் தான். இருப்பினும் அமர்நீதி நாயனார் சற்றும் மன உறுதி தளரவில்லை. இறைவனை மனதிலே தியானித்தார்.

இப்போது நான் என் மனைவி, மகனோடு தராசுத்தட்டில் அமர்கிறேன். எங்களை அடிமையாக வைத்துக்கொள்ளுங்கள் என்றார். சிவனடியாரும் சம்மதிக்கவே குடும்பசகிதமாய் கண்களை மூடி சிவனை துதித்தப்படி தராசுத்தட்டில் அமர்ந்தார்கள். துலாக்கோல் சமமானது. அனைவரும் கண்களை விழித்தப்போது அடியார் அவ்விடம் விட்டு மாயமாகி இருந்தார்.

அடியார் மறைந்து போனதை கண்டதும் பொது மக்கள் அனைவரும் வியப்பில் மூழ்கினார்கள். அப்பொழுது வானத்தில் தூய ஒளி பிரகாசித்தது. நீலகண்டப் பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது காட்சி அளித்தார். அவ்வேளையில் வானத்தில் இருந்து பூ மழை பொழிய துலாக்கோல் புஷ்பக விமானமாக மாறியது. அமர்நீதி நாயனார் குடும்பத்தோடு கைலாய மலையை அடைந்து சிவனின் திருவடியைப் பற்றி வாழ்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக