Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

கூரை மிதந்தது ! ( ஐந்தாம் பாகம் : தியாக சிகரம்)


அச்சந்தர்ப்பத்தில் கொடும்பாளூர் இளவரசி இம்மாதிரி ஒரு சபதத்தைச் செய்வாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதைக் கேட்டு அனைவரும் திகைத்துப் போனார்கள்.

இளையபிராட்டி கோபமும் பரிதாபமும் கலந்து பொங்கிய குரலில், 'பெண்ணே! இது என்ன சபதம்? எதற்காகச் செய்தாய்? இப்படியும் ஒரு மூடத்தனம் உண்டா? ஏதோ வெறி பிடித்தவள் போல அல்லவா பிதற்றிவிட்டாய்?" என்றாள்.

'இல்லை, அக்கா! இல்லை! எனக்கு வெறி இல்லை. என் அறிவு தெளிவாயிருக்கிறது. பல நாளாக யோசித்து என் மனத்திற்குள் முடிவு செய்து வைத்திருந்ததையே இப்போது பலர் அறியக் கூறினேன்" என்றாள் வானதி.

அதற்குக் குந்தவை மறுமொழி சொல்வதற்குள் பூங்குழலியின் சிரிப்பு அவள் கவனத்தைக் கவர்ந்தது. அந்தப் பெண்ணுக்கு உண்மையிலேயே இப்போது வெறி பிடித்துவிட்டது போலத் தோன்றியது. முதலில் கலகலவென்று சிரித்தாள். பிறகு முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு விம்மி விம்மி அழுதாள். பின்னர் திடீரென்று அழுகையை நிறுத்திவிட்டு மெல்லிய குரலில்,

'அலைகடலும் ஓய்ந்திருக்க

அகக்கடல்தான் பொங்குவதேன்?"

என்று பாடத் தொடங்கினாள்.

குந்தவை ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, 'இந்த இரண்டு பெண்களும் சேர்ந்து என் மனத்தையும் குழப்பிப் பைத்தியமாக்கி விடுவார்கள் போலிருக்கிறது. திருமலை! இளவரசரைப் பார்க்கப் புறப்பட்டவன் இவளை எதற்காக இங்கு அழைத்துக் கொண்டு திரும்பி வந்தாய்?" என்று கேட்டாள்.

'தேவி! பொன்னியின் செல்வரைச் சந்திப்பதற்குத்தான் புறப்பட்டுச் சென்றேன். வழியெல்லாம் ஒரே வெள்ளமாயிருந்தபடியால் போக முடியவில்லை. என்னைப் போலவே இவளும் தடைப்பட்டு நின்றதைப் பார்த்தேன். படகு சம்பாதித்துக் கொடுத்தால் தள்ளிக்கொண்டு போய்த் திருவாரூர் சேர்ப்பதாகச் சொன்னாள். அதற்காக ஜோதிடரிடம் திரும்பி வந்தேன். கோயிலுக்குப் பக்கத்தில் தங்கள் ரதப் படகைப் பார்த்ததும் சந்தோஷமாயிற்று. தங்களிடம் கேட்டுப் படகு வாங்கிச் செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் பழுவேட்டரையர் ரதத்தோடு படகையும் கொண்டு போய் விட்டார்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

'இப்போது என்ன யோசனை சொல்கிறாய்? பழுவேட்டரையர் கூறியதையெல்லாம் நீயும் கேட்டுக் கொண்டிருந்தாய் அல்லவா?" என்றாள் குந்தவை.

'ஆம் தாயே! அதைக் கேட்ட பிறகு இங்கே வீண்போகும் ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாகத் தோன்றுகிறது. இந்தப் பெண் சொல்வதிலிருந்தும் சக்கரவர்த்தியை உண்மையிலேயே பயங்கரமான அபாயம் நெருங்கியிருப்பதாகத் தெரிகிறது. அது முதன் மந்திரிக்குக் கூடத் தெரியாது. ஆகையால் தாங்கள் கொடும்பாள%2Bர் இளவரசியை அழைத்துக் கொண்டு உடனே தஞ்சாவூருக்குச் செல்லுங்கள். கொடும்பாள%2Bர் படைகள் ஒருவேளை கோட்டையை முற்றுகையிட்டிருந்தால் தங்களைத் தவிர யாராலும் அப்படைகளைத் தாண்டிக் கொண்டு போக முடியாது. வானதி தேவியும் தங்களுடன் வந்தால் அதிக வசதியாகப் போய்விடும். நான் இந்த ஓடக்காரப் பெண்ணைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு, ஒரு படகு சம்பாதித்துக் கொண்டு பொன்னியின் செல்வரிடம் போகிறேன். ஜோதிடரின் சீடனைப் படகு கொண்டு வருவதற்காக ஏற்கனவே அனுப்பி விட்டேன்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.


வானதி திடுக்கிட்டு எழுந்தவள் அவனை வெறிக்கப் பார்த்து, 'முடியாது! முடியாது! பொன்னியின் செல்வரிடந்தான் போவேன்! செத்தாலும் அவர் காலடியிலேதான் சாவேன்!" என்றாள்.

அதைக் கேட்ட பூங்குழலி, 'கிறீச்" என்ற குரலில், 'வைஷ்ணவரே! நான் உம்முடன் வரமுடியாது! கோடிக்கரையில் என் காதலர்கள் என்னை அழைத்திருக்கிறார்கள்! நள்ளிரவில் நெருப்பைக் கக்கும் என் காதலர்கள் என்னை அழைக்கிறார்கள்! இளவரசி ஓலை கொடுத்து அனுப்பினாரே, அந்த வாணர்குல வீரருக்குக்கூட என் காதலர்களை நான் காட்டினேன். அவர்களிடம் நான் போகவேண்டும்!" என்று கூவினாள்.

இதுவரையிலும் இவர்களுடைய சம்பாஷணையில் கலந்து கொள்ளாமல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு திகைத்து நின்ற ஜோதிடர் இப்போது குறுக்கிட்டார். 'அம்மா! அம்மா! எல்லாரும் சற்றுச் சும்மா இருங்கள்!" என்று இரைந்து கத்தினார்.

ஒரு நிமிடம் அங்கே பேச்சின் ஒலி நின்றிருந்தது. அப்போது வேறோர் ஒலி, - ரோமாஞ்சனத்தை உண்டாக்கும்படியான பேரொலி, - புயல் அடிக்கும்போது அலை கடலில் உண்டாகும் இரைச்சலையொத்த பேரோசை - கேட்டது.

'தாய்மார்களே! இந்தச் சந்தர்ப்பம் பார்த்து நீங்கள் இந்தப் பாவியின் குடிசைக்கு வந்தீர்களே! நான் நாட்டுக்கெல்லாம் ஜோதிடம் சொல்லி வந்தவன். உங்களுக்கு எச்சரிக்கை செய்து அனுப்பாமல் இருந்து விட்டேனே?" என்று ஜோதிடர் புலம்பினார்.

'ஐயா! இது என்ன? புதிய அபாயம் எங்களுக்கு என்ன வருகிறது?" என்று குந்தவை கேட்டாள்.

'தாயே! அரசலாற்றில் வெள்ளம் பெருகி வடகரையை உடைத்துக் கொள்ளும் போலிருக்கிறது என்று காலையிலேயே என் சீடன் சொன்னான். அரசலாறு உடைத்துக் கொண்டால் அந்த ஜலமெல்லாம் காவேரியில் வந்து விழும். காவேரி கரை புரண்டால் இந்த ஏழையின் வீடு அடியோடு முழுகிப் போய்விடும். காவேரிக்கு வெகு சமீபத்தில் இந்த வீடு இருக்கிறது. வாருங்கள்! வாருங்கள்! வெளியே வாருங்கள்!" என்று ஜோதிடர் கதறிக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே ஓடினார்.

எல்லாரும் அவரைத் தொடர்ந்து வெளியேறினார்கள். பீதி கொண்ட முகத் தோற்றத்துடன் ஜோதிடர், 'அதோ!" என்று சுட்டிக் காட்டினார். அவர் சுட்டிக் காட்டிய தென்மேற்குத் திசையில் ஓர் அபூர்வமான காட்சி தென்பட்டது. அரைத் தென்னை மரம் உயரமுடைய ஒரு பசுமையான சுவர், - நீண்டு படர்ந்து ஓரளவு வளைந்திருந்த விசாலமான சுவர், - அந்த வீட்டை நோக்கி இரைச்சலிட்டுக் கொண்டு வந்ததைக் கண்டார்கள். காவேரியின் கரை உடைந்து நீர் வெள்ளம் அப்படிச் சுவரைப் போல் நகர்ந்து வருகிறது என்பதை அங்கிருந்த அனைவரும் ஒரு நொடியில் அறிந்து கொண்டார்கள்.

'அம்மா! வாருங்கள்! எல்லாரும் ஓடி வாருங்கள்! அம்மன் கோவில் மண்டபத்தின் மீது ஏறி நிற்கலாம்! தப்ப வேறு மார்க்கம் இல்லை! திருமலை என் சீடனைப் படகு கொண்டுவர அனுப்பியதே நல்லதாய்ப் போயிற்று! ஓடி வாருங்கள்!" என்று சொல்லிக் கொண்டே ஜோதிடர் வழி காட்டினார்.

மற்றவர்களும் அவரைப் பின்பற்றினார்கள். பூங்குழலியின் வெறியெல்லாம் இப்போது போய் விட்டது. 'தேவி! தாங்கள் சிறிதும் அஞ்ச வேண்டாம். இதைக் காட்டிலும் எத்தனையோ பெரிய வெள்ளங்களை நான் சமாளித்திருக்கிறேன்!" என்று கூறிக் கொண்டே அவள் ஓடினாள். எல்லாருக்கும் முன்னதாகக் கோவில் மண்டபத்தை அடைந்து அதில் தாவி ஏறினாள்.


இதற்குள் வெள்ளம் கோவில் அருகிலும் வந்து சூழ்ந்து கொண்டு விட்டது. கீழே நின்றவர்களின் முழங்கால் வரை ஏறிவிட்டது. ஜோதிடரும், ஆழ்வார்க்கடியானும் தத்தித் தடுமாறி மண்டபத்தின் மீது ஏறினார்கள். குந்தவையும், வானதியும் மட்டும் இன்னும் கீழே நின்றார்கள். இருவரும் ஏற முயன்றார்கள், மேலேயிருந்த பூங்குழலி இளையபிராட்டியின் கைகளைப் பிடித்துத் தூக்கி விட்டாள். வானதி மட்டும் கீழே நின்றாள். அவள் இரண்டு தடவை ஏற முயன்று இரண்டு தடவையும் கைதவறி விட்டு விட்டாள்.

மேலே இருந்த இரு பெண்மணிகளும் அவளைப் பிடித்து மண்டபத்தில் தூக்கிவிட முயன்றார்கள். பூங்குழலி ஒரு கரத்தையும் இளைய பிராட்டி குந்தவை ஒரு கரத்தையும் பிடித்துத் தூக்கினார்கள். வானதி சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய ஒரு கரத்தைப் பூங்குழலி பிடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. உடனே அந்தக் கையை உதறினாள். அவள் பிடியிலிருந்து கையை விடுவித்துக் கொண்டாள்.

அந்த வேகத்தில் குந்தவை பிடித்திருந்த கரமும் நழுவி விட்டது. வானதி தொப்பென்று விழுந்தாள். தண்ணீரிலேதான் விழுந்தாள். அதற்குள் தண்ணீர் அவளுடைய கழுத்துவரையில் ஏறி விட்டது. கால் நிலை கொள்ளவில்லை. வானதி தண்ணீரில் மிதந்தாள். வெள்ளம் அவளை அடித்துக் கொண்டு போயிற்று.

இவ்வளவும் ஒரு கணத்தில் நடந்து விட்டது. மண்டபத்தின் மேலேயிருந்தவர்கள், 'ஆ!" என்று பரிதாபமாகக் கதறினார்கள்.

சில கண நேரத்துக்குள் வெள்ளம் வானதியை ஜோதிடர் வீட்டுக் கூரைமேல் கொண்டு போய்ச் சேர்த்தது. அந்தக் கூரை மேல் அவள் ஏறிக்கொண்டாள். 'நல்ல வேளை! அபாயம் ஒன்றுமில்லை!" என்று எண்ணினாள்.

மண்டபத்தின் மேலிருந்தவர்களும் அவளைப் பார்த்தார்கள். வீட்டுக் கூரை மீது தொத்திக் கொண்டதைப் பார்த்தார்கள். அவர்களும், 'நல்ல வேளை! அபாயம் ஒன்றுமில்லை. படகு வந்ததும் அவளை எப்படியும் தப்புவிக்கலாம்!" என்று கருதினார்கள்.

'கூரையை விட்டுவிடாதே! கெட்டியாகப் பிடித்துக் கொள்!" என்று பலமாகக் கத்தினார்கள். வானதி ஜோதிடர் வீட்டுக் கூரையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சிறிது நேரத்துக்கெல்லாம் அந்தக் கூரையே அசைவது போலத் தோன்றியது. 'அடடா! வீடு இடிந்து விழுகிறதா, என்ன?' ஆம். ஜோதிடர் வீட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்து விட்டன. ஆனால் கூரை மட்டும் விழவில்லை! கூரை, வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கி விட்டது.

வானதி அந்தக் கூரையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மிதந்தாள். கோவில் மண்டபத்தை நோக்கித் திரும்பிப் பார்த்தாள்.

'அக்கா! நான் அவரைப் பார்க்கப் போகிறேன். பொன்னியின் செல்வரைப் பார்க்கப் போகிறேன். காவேரித்தாய் என்னை அவரிடம் கொண்டு போகிறாள்!" என்று கூவினாள்.

அவள் கூறியது அவர்கள் காதில் விழுந்திருக்கும். முக்கியமாகப் பூங்குழலியின் காதில் விழுந்திருக்கும், என்று மனப்பூர்வமாக நம்பினாள்.

ஜோதிடர் வீட்டுக் கூரை வெள்ளத்தில் மிதந்து சென்று கொண்டிருந்தது. வானதியும் போய்க்கொண்டிருந்தாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக