Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 ஏப்ரல், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 008

இயற்பகை நாயனார் !!

புனித தீர்த்தமாகக் கருதப்படும் காவேரி நதியானது சமுத்திரத்தோடு சென்று சேர்ந்து வளம் கொழிக்கும் சோழ நாடான பூம்புகார் அழகிய நகரமாகும். சோழ மன்னனின் ஆதிக்கத்தில் மிகவும் சீருடனும், சிறப்புடனும் மக்கள் யாவரும் மிகவும் மகிழ்வுடன் வாழ்ந்து வந்தனர். சோழ மன்னனின் ஆட்சிக் காலத்தில் பல குலங்கள் மிகவும் செழிப்புடன் வாழ்ந்து வந்தன. அக்குலத்தில் வணிக குலத்தைச் சேர்ந்தோர் பலர் இருந்தனர். அவ்வணிகர் குலத்தில் சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

உலக பற்றுகள் நிரம்பிய இந்த உலகத்தில் அதன் இன்பங்கள் மீது எந்த விதமான பற்றும் இல்லாமல் பற்றற்ற நிலையில் வாழ்ந்து வந்தார். அதனால் இவர் இயற்பகையார் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இயற்பகையார் இறைவனிடம் மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தார். இயற்பகையாரும் அவருடைய துணைவியாரும் இல்லறம் எனும் நல்லறத்தை இனிமையுடன் நடத்தி வாழ்ந்துக் கொண்டு இருந்தனர்.

இல்லறத்தில் இருந்து கொண்டு விபூதி, ருத்ராட்சம் தரித்த சிவபக்தர்களுக்கு அவர்கள் வேண்டிய பொருட்கள் யாவற்றையும் மகிழ்ச்சியோடு கொடுத்துக்கொண்டு அடியார்களுக்கு உதவுவதே தலைச்சிறந்த செயலாக எண்ணி இயற்பகையார் சீரோடும், சிறப்போடும், நிறைவோடும் வாழ்ந்து வந்தார். இறைவனுக்கு செய்யும் திருப்பணிகள் மற்றும் இறைவனை மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் அடியார்களின் தேவைகளை நிறைவேற்றுபவர்கள் எம்பெருமானின் திருப்பார்வையை கிடைக்கப் பெறுவார்கள்.

இயற்பகையாரின் பக்தியின் மார்க்கத்தை உலகறியச் செய்ய எம்பெருமானும் தமது திருவிளையாடலை தொடங்கினார். ஒரு அந்தணர் வடிவம் கொண்டு விபூதி திருமேனியிலே பூசிய வண்ணம் கொண்ட வேடத்துடன் இயற்பகையார் வீட்டில் எழுந்தருளினார். அடியாரை கண்ட இயற்பகை நாயனாரும் அன்பினோடு அவரை அழைத்துக் கொண்டு அடியார்களை பேணுவதற்கான விதிப்படி வரவேற்றார். பின்பு அடியாரிடம் தாங்கள் இங்கே எழுந்தருளியது முன்ஜென்மத்தில் அடியேன் செய்த தவத்தினால் உண்டான பலனே என்று கூறினார்.

இயற்பகையார், அடியாரை வரவேற்று அவரை ஆசனத்தில் அமரச் செய்து, துணைவியார் நீர் இறைக்க அடியாரின் பாதங்களைத் தூய்மை செய்து நறுமலர் தூவினார். எம்பெருமானின் மீது பக்தி கொண்ட அடியாராகிய தாங்கள் இந்த ஏழையின் குடிசைக்கு எழுந்தருளியிருப்பது அடியேன் செய்த புண்ணியம் தான் என்று பணிவோடு கூறினார்.

இயற்பகையார் கூறியதைக் கேட்ட அடியாரோ... உமது பக்தியையும், நீர் செய்து வரும் செயல்களையும் யாம் அறிவோம். யம்மைப் போன்ற சிவனடியார்கள் வேண்டுவதை அறிந்து அவர்களுக்கு இல்லாது என்று உரைக்கும் பண்புடையவர் என்பதை யாம் அறிந்தோம். அதனாலேயே யான் உன்னிடம் ஒன்று கேட்டு பெற்றுக் கொண்டு செல்லலாமே என்று இங்கு வந்துள்ளோம் என்றார்.

அடியார் கூறியதைக் கேட்ட இயற்பகையார் மிகவும் மனம் மகிழ்ந்து, இந்த ஏழையாகிய நான் தாங்கள் எதை கேட்டாலும் கொடுப்பேன் என்று உறுதி அளித்தார். அந்தணர் வடிவத்தில் வந்த எம்பெருமான் இயற்பகையார் பதிலைக் கேட்டு புன்னகை பூத்தார். பின்பு, இயற்பகையாரிடம் நான் எதைக் கேட்டாலும் அதை மறுக்காமல் அளிக்க வேண்டும் என்று மீண்டும் கூறினார்.

ஏதும் அறியாத இயற்பகையாரோ தாங்கள் உரைப்பது யாதுவாக இருப்பினும் அதை தங்களுக்கு அளிப்பேன் என்றும், அதில் அணுவளவும் எவ்விதமான சந்தேகமும் வேண்டாம் என்றும் கூறினார். அடியாரோ... இயற்பகையாரிடம் மிகவும் மகிழ்ச்சி. உம்மைப் பற்றி மற்றவர்கள் கூறியவை அனைத்தும் யாம் அறிவோம். நீர் யாது உரைக்கின்றாயோ அதை நிறைவேற்றக் கூடியவராயிற்றே. யான் உன்னுடைய மனைவியை அழைத்துச் செல்லவே இவ்விடம் வந்திருப்பதாக கூறினார்.

அடியார் உருவத்தில் வந்த எம்பெருமான் உரைத்ததை கேட்டு இயற்பகையார் எவ்விதமான பதற்றமும், திகைப்பும் அடையவில்லை. அவர் உரைத்ததற்கு மாறாக எவ்விதமான வாக்குவாதங்களையும் உரைக்காமல் அமைதியாக இருந்தார். பின்பு, இரு கரம் கூப்பி அடியாரை வணங்கி தாங்கள் என்னிடம் உள்ள பொருளையே கேட்டுள்ளீர்கள். உண்மையிலேயே தங்கள் அருளுக்கும், ஆசிக்கும் இந்த எளியோன் அடிமை என்று கூறினார்.

எம்பெருமான், இயற்பகை அடியாரிடம் கூறிக் கொண்டிருந்ததைக் கேட்ட அவருடைய துணைவியாரும் கணவரின் விருப்பப்படி அம்மையப்பரின் திருவடியை வணங்கி நின்று கொண்டிருந்தார். இயற்பகையார், அடியாரிடம் அடுத்து யாது செய்ய வேண்டும்? என்று கேட்டார். அடியாரே... யான் உமது மனைவியை அழைத்துச் செல்வதை உன் சுற்றத்தார் அறிந்தால் என் மீது வெறுப்பு கொண்டு என்னை தாக்க நேரிடலாம். அதனால் யான் இம்மங்கையோடு இந்த ஊரின் எல்லையை கடக்கும் வரை என்னுடன் துணையாக வருதல் வேண்டும் எனக் கேட்டார் அடியார் உருவத்தில் இருந்த எம்பெருமான்.

இப்பணியை மேற்கொள்ள நான் செய்த பாக்கியம் என்னவோ என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார் இயற்பகையார். பின்பு துரிதமாக தனது அறைக்குள் சென்ற இயற்பகையார் போர்க்களத்திற்கு செல்லும் வீரர்கள் அணியும் உடையை அணிந்துக் கொண்டு கரங்களில் வாளும், கேடயமும் ஏந்திய வண்ணம் வெளியே வந்து அடியார்க்கு தேவையான பாதுகாப்புகளை அளிக்கும் பொருட்டு அவர்களுடன் செல்லத் துவங்கினார். அதற்குள் இச்செய்தியானது ஊர் முழுவதும் பரவத் துவங்கியது. இயற்பகையாருக்கு என்னவாயிற்று என்று எண்ணிய வண்ணம் இதை எவ்விதத்திலாவது தடுத்தாக வேண்டும் என்று எண்ணி மக்கள் அனைவரும் இயற்பகையாரிடம் முறையிடச் சென்றனர்.

ஆனால் அங்கு அவர்கள் கண்ட காட்சியானது அவர்களை சினம் கொள்ளச் செய்தது. யாரென்று தெரியாத அடியாருடன் தமது மனைவியையும் முன்னே செல்ல கூறி, அவர்களுக்கு தக்க பாதுகாப்பாக பின்னே எவ்விதமான வருத்தமும் இன்றி வீர நடைபோட்டு சென்று கொண்டிருந்தார். இனி இவரிடம் முறையிட்டு எவ்விதமான பலனும் இல்லை என்று அறிந்த வணிக குல பெரியவர்கள் தங்கள் குலத்திற்கும் தீராத அவப்பெயரை ஏற்படுத்திவிட்டாய் என்று வெகுண்டு கூறினார்கள். ஆனால் இயற்பகையாரோ அவர்களின் பேச்சுக்கு செவி சாய்க்காமல் அடியார்க்கு பாதுகாப்பு அளிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்.

வணிக குல பெரியோர்களின் கோபமானது எல்லையை கடக்கத் துவங்கியது. பின்பு கிராம மக்களுக்கும், இயற்பகையாருக்கும் இடையே போர் மூண்டது. ஆனால், இயற்பகையாரின் போர் திறமைக்கும், வீரத்திற்கும் முன்பு அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தன்னை எதிர்த்து நின்ற எதிரிகளின் பலத்தை அழித்து அவர்களை சின்னாப்பின்னமாக திசைக்கு ஒருவராய் ஓடி ஒளியும் அளவில் இயற்பகையாரின் வாள்வீச்சு இருந்தது. இயற்பகையார் தன்னை எதிர்த்து நின்ற அனைவரையும் வெற்றிக் கொண்டார்.

அடியாரை வணங்கிய இயற்பகையார் அடியாரிடம் இனி எவ்விதமான அச்சமும் வேண்டாம். தாங்கள் எப்போதும் போலவே செல்லலாம் என்று கூறினார். பிறகு மூவரும் அவ்வூரின் எல்லையில் அமைந்துள்ள சாய்க்காட் என்னும் இடத்தை எவ்வித ஆபத்துமின்றி அடைந்தனர். அவ்விடத்திற்கு வந்ததும் அடியார், இயற்பகையாரை நோக்கி இனிமேல் நாங்கள் செல்கிறோம். இனி நீ திரும்பி செல்லலாம் என்று கட்டளையிட்டார். அவரின் கட்டளைக்கு அடிபணிந்த இயற்பகையாரும் அவரின் திருவடிகளில் விழுந்து வணங்கி ஆசிப்பெற்று தான் வந்த வழியை நோக்கி திரும்பினார்.

செய்வதற்கு அரிய பெரும் தியாகத்தைச் செய்து திரும்பும் இயற்பகையாற் செவிகளில் விழுமாறு இயற்பகையாரே எம்மை காக்க வேண்டும்... நீ வர வேண்டும்... என அடியார் கூவி அழைத்தார். அடியாரின் அபயக்குரலைக் கேட்டதும் இயற்பகையார் இதோ வருகிறேன் அடியாரே... மீண்டும் தங்களைத் துன்புறுத்த வருவோரை இவ்வாளால் கொன்று அவர்களை வெற்றி கொள்வேன் என்று உரக்கக் கூறியபடியே அடியார் குரல் கொடுத்த திசையை நோக்கி விரைந்தார்.

அப்பொழுது அடியார் உருவத்தில் வந்த எம்பெருமான் மறைந்தார். தமது மனைவி மட்டும் தனியாக நிற்பதைக் கண்டு, அடியாரைக் காணாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார் இயற்பகையார். நிகழ்வது என்னவென்று அறியாமல், அப்பொழுது வானத்து வீதியிலே ஞானத்து வேத நாயகன் உமையாளுடன் விடையின் மேல் அற்புதமான அருட்பெருஞ் ஜோதியாகத் திருத்தொண்டருக்குக் காட்சி கொடுத்தார். அந்த காட்சியைக் கண்டதும் சிவத்தொண்டர் நிலத்தில் வீழ்ந்தார். பின்பு எழுந்து இரு கரம் குவித்துச் சிரம் தாழ்த்தி வணங்கினார். அவர் தம் மனைவியாரும் கணவரோடு சேர்ந்து வணங்கினார்.

எம்பெருமான் அவர்களை நோக்கி அன்பனே... உன் எல்லையற்ற அன்பின் திறத்தைக் கண்டு அகம் மகிழ்ச்சி அடைந்தோம். இந்த உலகமே வியக்கும் வண்ணம் எம்மீது பக்தி கொண்ட அடியாரே... நீயும், உன் கற்புடைச் செல்வியும் பூவுலகில் பன்னெடுங்காலம் வாழ்ந்து பின்னர் நம்பால் வந்து அணைவீர்களாக என்று திருவாய் மலர்ந்து அருளி மறைந்தார். இயற்பகையார் மனைவியுடன் இல்லத்திற்குத் திரும்பினார். எம்பெருமானின் அற்புத திருவிளையாடலைப் பற்றி உணர்ந்த ஊர் மக்கள் இயற்பகையாரின் பக்திக்கு அடிபணிந்தார்கள். இயற்பகையார் எல்லோராலும் தொழுதற்குரிய மகான் ஆவார். இயற்பகையாரும், அவரது மனைவியும் பல்லாண்டு காலம் இன்புற்று வாழ்ந்து பின் இறைவனின் திருவடிகளை சென்றடைந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக