Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 16 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 201

ஜலந்திரனின் போர் திறமைக்கு முன்னாள் தேவ வீரர்கள் அனைவரும் சிதறத் துவங்கினர். இவை யாவற்றையும் கண்டு கொண்டிருந்த எம்பெருமானும் ஜலந்திரன் நின்று கொண்டிருந்த தேரின் அச்சினை மூர்ச்சையாகி விலக செய்தார். தேரில் இருந்து எழுந்த ஜலந்திரன் தனது மாயை சக்தியினால் ஒரு மோகினியை உருவாக்கினான். அந்த மோகினியை கொண்டு எம்பெருமானின் கவனம் முழுவதும் அவளிடம் இருக்கும் வகையில் கொண்டு சென்று, எம்பெருமான் வேடம் தரித்து உமையவள் இருக்கும் இடத்தை அடைந்தான் ஜலந்திரன்.

எம்பெருமான் உருவத்தில் வந்திருந்த ஜலந்திரன் பார்வதி தேவியின் அருகில் நெருங்கும்போது, பார்வதி தேவிக்கு வந்திருப்பவர் என்னவர் அல்ல என்பதை புரிந்து கொண்டு அவ்விடம் விட்டு மறைந்து சென்றார். ஜலந்திரனிடம் இருந்து மறைந்து சென்ற பார்வதி தேவி திருமால் இருக்கும் இடத்தை அடைந்தார். திருமாலிடம் ஜலந்திரனின் பலம் என்பது அவனது மனைவியான பிருந்தையின் பதிவிரதை தன்மையினால் மட்டுமே உள்ளது என்றும், அந்த தன்மையின் பொருட்டு எம்பெருமானாலும் ஜலந்திரனை வதம் செய்ய முடியவில்லை என்றும், பார்வதி தேவி கூறினார்.

ஆகையினால் ஜலந்திரனுடைய மனைவியின் கற்புக்கு ஏதாவது பங்கம் ஏற்படுமாயின் ஜலந்திரனின் வதம் உறுதியாகக்கூடும் என்று கூறினார். பார்வதியின் கூற்றுகளிலிருந்து திருமாலும் ஜலந்திரனின் அழிவிற்கான இடம் எங்கு இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டு அதற்கான செயல் திட்டத்தை செய்ய ஆரம்பித்தார். திருமாலும் ஒரு முனிவரின் வேடம் தரித்துக்கொண்டு ஜலந்திரனுடைய அரண்மனையை அடைந்தார். முனிவர் வருகையை அறிந்ததும் ஜலந்திரனின் மனைவியான பிருந்தை அவரை வரவேற்று உபசரிக்க துவங்கினார்.

பின்பு முனிவரிடம் தனது கணவரான ஜலந்திரன் எம்பெருமானால் மட்டுமே அளிக்கக்கூடிய வரத்தினை பெற்றிருக்கக்கூடியவர் என்றும், ஆனால் இவ்வேளைகளில் எம்பெருமானையே எதிர்த்து போர் புரிய சென்று கொண்டு இருக்கின்றார். அவரை பல முறை தடுத்தும் அதைக் கேளாது எம்பெருமானை வதம் செய்வேன் என்று கூறி சென்றுள்ளார். அவர் போருக்கு சென்றது முதல் என் மனம் ஒரு நிலையில் இல்லை... மிகவும் பதட்டமான நிலையில் இருக்கின்றேன். என் சுவாமி இப்போது நலமாக உள்ளாரா? அவருக்கு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? என்பதை முனிவரிடம் கேட்டார் பிருந்தை.

ஜலந்திரனின் அரண்மனையில் இருந்த திருமால் தன்னுடைய மாய சக்தியினால் ஜலந்திரனின் வெட்டப்பட்ட உடலை இரு குரங்கு வடிவம் கொண்ட அரக்கர்களால் கொண்டுவரும்படி உருவாக்கினார். அதை கண்டதும் பிருந்தையின் மனமானது மிகவும் உடைந்து கதறி அழத் துவங்கினாள். ஐயோ சுவாமி... நான் எவ்வளவு சொல்லியும் கேளாது சர்வம் படைத்த, எல்லாம் வல்ல பரம்பொருளான சிவபெருமானை அழிக்க சென்றீர்களே... இப்பொழுது தாங்களே மாண்டுபோய் வந்து உள்ளீர்களே... இனி நான் என்ன செய்வேன்... இனி எனக்கென்று யாரும் இல்லையே... என்று புலம்பத் தொடங்கினாள்.

பிருந்தையின் மனக்கவலையை கண்ட முனிவர் உருவத்தில் இருந்த திருமால் உயிர் இழந்த ஜலந்திரனை உயிர்த்தெழச் செய்ய இயலும் என்று கூறினார். பின்னர் முனிவரிடம் தனது கணவரை உயிர்ப்பித்து தருமாறு வேண்டி நின்றாள் பிருந்தை. முனிவரும் ஜலந்திரனின் உடலுக்கு உயிர் அளிக்கும் வகையில் தான் கொண்டு வந்திருந்த கமண்டலத்திலிருந்து தீர்த்தத்தை எடுத்து ஜலந்திரனின் உடலின் மீது தெளித்தார். உடனே ஜலந்தரனின் உடல் உயிர் பெற்று எழுந்து முனிவரை வணங்கி நின்றது.

பின்னர் ஜலந்திரனும் பிருந்தையும் முனிவரை வணங்கினர். அதன் பின்னர் முனிவரும் அவர்களுக்கு ஆசி அளித்து அவ்விடத்தை விட்டு மறைந்தார். முனிவர் சென்றதும் உயிர் பெற்று இருந்த தனது கணவர் என்று நினைத்து ஆரத்தழுவி மகிழ்ச்சி வசப்பட்டார். ஆயினும் சிறிது நேர பொழுதில் இது தனது கணவர் அல்ல என்பதை உணர்ந்து கொண்டாள். பின்பு கணவரை விட்டு விலகி சென்று வந்திருப்பவன் யார் என்பதை தனது பதிவிரத சக்தியினால் உணர்ந்து கொண்டாள் பிருந்தை.

ஜலந்திரன் உருவாக்கியுள்ள மாயையிலிருந்து எம்பெருமான் விலகத் தொடங்கினார். ஜலந்திரன் உருவாக்கிய மாயையிலிருந்து எம்பெருமான் விடுபட்டார் என்பதை பார்வதி தேவி அறிந்தார். மறைந்து சென்ற சிவபெருமானை அழித்தால் பார்வதி இவ்விடத்திற்கு வந்தடைவாள் என்பதை உணர்ந்து சிவபெருமானை எதிர்க்க துவங்கினான் ஜலந்திரன். நிகழ்ந்ததை யாது என்று அறிந்து கொண்டாள் பிருந்தை.

திருமால் தனது கற்புக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தனது பதிவிரதத்தை அவமதித்ததை உணர்ந்ததும் ஜலந்திரன் உருவத்தில் இருந்த திருமாலுக்கு சாபம் அளிக்க தொடங்கினாள். அதாவது, நீ செய்த இவ்வினையினால் மனிதனாக பிறந்து உன் மனைவியை அரக்கர்கள் கவர்ந்து செல்ல, அதனால் நீ மாளாத துன்பம் அனுபவிப்பாயாக என்றும், எனது பிராண நாதரை குரங்குகள் உருவத்தில் இருந்த அரக்கர்கள் தூக்கி வரவைத்தாய் அல்லவா... அந்த குரங்குகளின் உதவியை நாடுவாய் என்றும் சாபத்தை அளித்து தன்னுடைய உடலை அக்னிக்கு இரையாக்கி சாம்பலானாள் பிருந்தை.

ஜலந்திரனின் உயிருக்கு பாதுகாப்பு கேடயமாக இருந்து வந்த பிருந்தையின் பதிவிரதை கேடயம் முழுவதுமாக அகல துவங்கியது. திருமாலும் தனது கண்முன்னே எந்தப் பிழைகளும் இழைக்காத பிருந்தையின் உடலானது எரிந்து சாம்பலானதை கண்டதும் அச்சாம்பலினை தனது கரங்களில் ஏந்திக் கொண்டு கதறிக்கொண்டே இருந்தார். தன்னுடைய இப்பிழையை எவ்விதத்தில் மாற்றிக்கொள்ள இயலும் என்ற கண்ணோட்டத்திலேயே அவர் முழுவதும் தன்னையே மறந்து அவ்விடத்தை விட்டு அகலாது அவ்விடத்திலேயே சுயநினைவின்றி கதறிக் கொண்டிருந்தார் திருமால்.

திருமால் தன்னை மறந்து பிருந்தையின் நினைவால் இருந்தமையால் வைகுண்டமே இருளில் மூழ்கியது. ஜலந்திரனின் கேடயமானது அகன்றுவிட்டது என்பதை உணர்ந்து கொண்ட எம்பெருமான் ஜலந்திரனை நோக்கி என்னை விட அதிபயங்கர சக்தியுள்ள பராக்கிரமசாலியா நீ? என்று முழங்கினார். அதைக் கேட்டதும் ஜலந்திரன் நான் உன்னைக் காட்டிலும், ஏன் இந்த பிரபஞ்சத்திலேயே அதிகம் சக்தி கொண்ட பராக்கிரமசாலியாவேன் என்று கூறினான்.

உனது பராக்கிரமத்தையும் சக்தியையும் பார்க்கலாம் என்றுரைத்த எம்பெருமான் தனது கட்டை விரலினால் பூமியில் ஒரு சக்கரத்தை வரைந்து உன்னால் இந்த சக்கரத்தை பூமியில் இருந்து பெயர்த்து எடுக்க முடியுமா? என்று வினவினார். எம்பெருமானின் திருவிளையாடல் எது என்பதை அறியாத ஜலந்திரன் இது என் சக்திக்கு சாதாரண ஒரு வேலையாகும். இதோ இப்பொழுதே இச்சக்கரத்தை பெயர்த்தெடுத்து தாங்கள் இருக்கும் கயிலாய மலையைப் பெயர்த்து எடுத்து வருமாறு இதை ஏவுகின்றேன்.

அப்பொழுது என்னுடைய சக்தியையும், பராக்கிரமத்தையும் நீ அறிந்து கொள்வாய் என்றுரைத்து தனது கரங்களினால் எம்பெருமான் வரைந்த அந்த சக்கரத்தை பூமியிலிருந்து பெயர்த்தெடுக்கத் துவங்கினார். ஆனால் பெயர்த்தெடுத்த சக்கரத்தை சிறிதளவுகூட நகர்த்த முடியவில்லை. ஆயினும் அச்சக்கரத்தை பெயர்த்தெடுக்க அவனது உடலெங்கும் இருந்த சக்திகள் யாவும் வீணாகவே உடல் பலமும் குறையத் துவங்கியது. உடலில் இருந்து வியர்வை சிந்திட என்ன செய்வது என்று மலைத்து நின்றான் ஜலந்திரன். அவ்வேளையில் எம்பெருமான் அசாதரணமாக அந்த சக்கரத்தை பெயர்த்தெடுத்து ஜலந்திரன் மீது வீச... அந்த சக்கரமானது அவனது உடலை இரு கூறுகளாக பிரித்து எடுத்தது.

ஜலந்திரனோ அடியற்ற மரம் போல விழுந்து மடிந்தான். திருமாலின் நிலைமையை உணர்ந்த பார்வதி தேவி அவ்விடத்தில் தோன்றி பிருந்தையின் சாம்பலில் இருந்து துளசி செடியை உருவாக்கினார். துளசி மாலையை திருமால் அணிவித்துக் கொண்டு இருக்கும் பொழுது எவ்விதத் துன்பமும் இன்றி மகிழ்ச்சியுடன் இருப்பாய் என்று வரம் கொடுத்து திருமாலை மீளா துன்பத்தில் இருந்து மீட்டு எழுப்பினார் பார்வதி தேவி. ஜலந்திரன் அழிந்து போனதை அறிந்ததும் தேவர்கள் அனைவரும் பூமாரி பொழிந்து சிவபெருமானை துதித்து போற்றினார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக