5 ஆயிரம் ஏக்கர் அன்னாசி பழங்கள்
கடந்த ஆண்டு இதே மாதம் பயிர்போக காலத்தில் பயிரிடபட்ட அன்னாசிப்பழம் அறுவடை செய்ய துவங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 144 தடை உத்தரவு செய்யப்பட்டுள்ள காரணத்தால் கேரள வியாபாரிகள் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏற்றுமதி செய்வோர் வராத காரணத்தால் இந்த பழங்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் டெல்லி, அகமதாபாத் , விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் ஏற்றுமதி, கொரோணா காரணமாக முற்றிலும் தடை பட்டுள்ளது. கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது அறுவடை செய்து பழம் கிலோ 7 ரூபாய் விலை என்று வியாபாரிகள் மினி லாரிகள் மூலம் சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
அங்கு வியாபாரிகள் இந்த பழங்களை நாற்பது முதல் நாற்பத்தைந்து ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். மேலும் உள்ளூர் வியாபாரமும் முற்றிலும் 144 தடையால் முடங்கியுள்ளது. இந்த அன்னாசி விவசாய தோட்டங்களில் மலைகிராமங்களை சேர்ந்த ஆதிவாசி பழங்குடியின மக்கள் அதிகம் பேர் வேலை செய்து வருகின்றனர்.
தற்போது 144 தடை காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் அந்த பழங்குடி மக்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பல விவசாயிகள் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த காரணத்தால் குத்தகை கட்டவும் விலை கிடைக்காத சூழ்நிலையில் உள்ளனர்.
கடந்த காலங்களில் கேரள அரசு விலை நிர்ணயம் செய்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியான அன்னாசி பழம் தற்போது விலை வீழ்ச்சியால் இன்னும் சில தினங்களில் அறுவடை செய்யாவிட்டால் அழுகி வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழக அரசு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் 144 தடை உத்தரவில் பழங்கள், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்ல வாகனங்களுக்கு விலக்கு இல்லை என்ற போதிலும் குமரியில் இருந்து அன்னாசி பழம் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு காவல்துறை அதிகாரிகளின் கெடுபிடிகள் இருப்பதால் இந்த விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். எனவே அரசு அன்னாசி பழங்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக