Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 16 ஏப்ரல், 2020

அனுமன் சீதையை தேடுதல்

அனுமன் மதில் மீது ஏறி நகருக்குள் சென்றான். அந்நகரின் சிறப்புகளை கண்டு அனுமன் வியந்து போனான். அந்நகரின் ஓரமாக சீதையை தேடி ஆராய்ந்துக் கொண்டு சென்றான். அனுமன் போகும் வழியில் சோலைகள், இரத்தின மாளிகைகள், மாட்டுக் கொட்டில்கள், குதிரை லாயங்கள், அரக்கர்கள், தேவ மாதர்கள் போன்றவர்களை கடந்து சீதையை தேடிக் கொண்டு சென்றான். 

இவ்வாறு அனுமன் சீதையை தேடிக் கொண்டு போகும் போது கும்பகர்ணனின் மாளிகையை அடைந்தான். அங்கு கும்பகர்ணன் தூங்கிக் கொண்டு இருந்தான். கும்பகர்ணனை பார்த்தவுடன் அவன் இராவணன் என நினைத்து அவன் மீது மிகுந்த கோபம் கொண்டான், அனுமன். கும்பகர்ணன் பக்கத்தில் நெருங்கிச் சென்றான். இவனுக்கு பத்து தலைகளும், இருபது தோள்களும், இருபது கைகளும் இல்லையே. ஆதலால் இவன் இராவணன் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டான். அனுமனின் கோபம் சிறிது தணிந்தது.

இவன் இராவணன் இல்லை என்பதை அறிந்து, இவன் யாராக இருந்தால் நமக்கு என்ன? இவன் இப்படியே சில காலம் நன்றாக தூங்கட்டும் என்று நினைத்துக் கொண்டு சீதையை தேட தொடங்கினான். 

அனுமன் சீதையை பல இடங்களில் தேடினான். மாடங்கள், மாளிகைகள், அந்தபுரம், மண்டபங்கள், ஆலயங்கள் என அனைத்து இடங்களிலும் சீதையை தேடி அலைந்தான். எங்கு தேடியும் சீதையை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இவ்வாறு அனுமன் சீதையை தேடி போகும்போது விபீஷணனின் மாளிகையை அடைந்தான். அங்கு மற்ற மாளிகைகளில் கண்டது போல் மதுகுடங்களை காணவில்லை. அதற்கு பதிலாக தேன், பால், பஞ்சாமிர்தம் போன்ற பூஜைக்குரிய பொருட்களை கண்டான். பிறகு தூங்கி கொண்டிருக்கும் விபீஷணனின் அருகில் சென்று அவனது முகத்தைப் பார்த்தார். விபீஷணனின் முகத்தில் கருணை வலிந்தது.

இவன் குற்றம் செய்யாத உயர்ந்த குணமுடையவன் என்பதை அறிந்துக் கொண்டான். பிறகு அங்கிருந்து சென்று பல மாளிகையில் தேடினான். அங்கு பல பெண்கள் ஆடுவது பாடுவதுமாக இருந்தனர்.

பலர் உறங்கி கொண்டு இருந்தார்கள். இவர்களை எல்லாம் கடந்து சீதை தேடி, நுழைய முடியாத இடங்களிலும் சென்று தேடினான். அனுமன் சீதையை தேடிக் கொண்டு போகும்போது இந்திரஜித்தின் மாளிகைக்கு சென்றான். இந்திரஜித், ஆறுமுக கடவுள் முருக பெருமான் உறங்குவது போல் உறங்கி கொண்டு இருந்தார். 

இவன் அரக்கனா? முருக பெருமானா? இல்லை இவர் வேறு யாராக இருக்கக்கூடும்? என மனதில் நினைத்துக் கொண்டான். இவன் மிகுந்த பலம் மற்றும் வலிமை உடையவன் என்பதை உணர்ந்தான். இவனுடன் இராமரும், இலட்சுமணரும் பல நாட்கள் போரிட நேரிடும் என கருதினான்.

பிறகு அனுமன் இங்கேயே நின்றிருந்தால் தாமதமாகிவிடும் என நினைத்து அங்கிருந்து அக்ஷய குமாரன், அதிகாயன் போன்ற பல வீரர்களின் மாளிகையில் சென்று சீதையை தேடினான். 

இலங்கை நகரின் இடையில் ஓர் அகழியும், இராவணனின் மாளிகையைச் சுற்றி ஓர் அகழியும் இருந்தது. அனுமன் இவ்விடத்தை அடைந்தான். இலங்கை நகரமே உறங்கி கொண்டிருந்த நேரத்தில் அனுமன் மட்டும் சீதையை தேடி அலைந்து கொண்டு இருந்தான். 

அனுமன் எல்லா இடங்களிலும் தேடிய பிறகு இராவணனின் மாளிகையை அடைந்தான். அங்கு அனுமன் மண்டோதரியின் மாளிகையை கண்டான். அனுமன், இம்மாளிகையை கூர்ந்து கவனித்தான். 

இம்மாளிகை மற்ற மாளிகையை காட்டிலும் சந்திரனை போல் ஒளி வீசிக் கொண்டிருந்தது. இந்த மாளிகை தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. ஆதலால் இம்மாளிகையில் தான் இராவணன் நிச்சயம் சீதையை வைத்திருக்க வேண்டும் என நினைத்தான்.

தேடல் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக