Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 18 ஏப்ரல், 2020

நாம் மறந்து போன விளையாட்டுகள்..!!

நமது பாரம்பரிய விளையாட்டுகளில் மிக முக்கியமான ஒன்று, தாயம். இந்த விளையாட்டு நமது தமிழ் வரலாற்றில் இடம்பெற்ற பெருமைமிகுந்த ஒரு விளையாட்டு ஆகும்.

இதற்கு சதுரங்க பலகை விளையாட்டு என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த விளையாட்டை இரண்டு அல்லது நான்கு பேர் இணைந்து விளையாடுவர்.

இந்த விளையாட்டை சதுரங்க பலகையில் விளையாட வேண்டும். சதுரங்க பலகை இல்லாதவர்கள் சுண்ணாம்பு கட்டிக்கொண்டு தாயக் கட்டங்களை தரையில் வரைந்துக் கொள்ளலாம்.

தாயக் கட்டைகள் மரத்திலோ, இரும்பு அல்லது வெண்கலம் போன்ற உலோகத்திலோ செய்யப்பட்டிருக்கும். பொதுவாக, இந்த தாயக் கட்டைகள் ஒவ்வொன்றும் நான்கு முகங்களை கொண்டிருக்கும். சில வகை தாயக் கட்டைகள் ஆறு முகங்களைக் கூடக் கொண்டிருக்கும்.

இந்த விளையாட்டில், நான்கு பேர் பங்கேற்கும் பட்சத்தில் ஒவ்வொருவரும் நான்கு காய்களை கொண்டு விளையாடுவர்.

மற்றவர்களிடமிருந்து தங்கள் காய்களை வித்தியாசப்படுத்திக் கொள்ள, வௌ;வேறு நிறங்களில் அல்லது வடிவங்களில் அல்லது உருவங்களில் காய்களை வைத்திருப்பர்.

ஊரி, சிறு கற்கள், உடைந்த கண்ணாடி மற்றும் பீங்கான் துண்டுகள், புளியங் கொட்டைகள், சிறு விதைகள் போன்றவற்றை காய்களாக கொண்டு விளையாடலாம்.

சதுரங்க பலகையை விளையாட தயார் செய்த பிறகு, முதலில் ஒருவர் தாயக்கட்டைகளை உருட்ட வேண்டும். ஒருவர்பின் ஒருவராக தாயக்கட்டைகளை உருட்டும்பொழுது, யாருக்கு முதலில் தாயம் (ஒன்று) விழுகிறதோ அவர்கள் முதலில் ஆட்டத்தை தொடங்குவார்கள்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால், நான்கு காய்களையும் தாயம் விழுந்து முதல்படியில் ஆரம்பித்து பலகையை சுற்றி வர வேண்டும். அதாவது, ஆட்டத்தை எங்கே ஆரம்பிக்கிறோமோ அங்கேயே முடிக்க வேண்டும்.

ஆனால் இதில் ஒரு திருப்பம் உண்டு. மற்ற மூவரின் காய்களை வெட்டிய பிறகே (குறைந்தது ஒரு காயை வெட்ட வேண்டும்) உங்களால் ஆரம்ப புள்ளிக்கு மீண்டும் வர முடியும். இதுதான் இந்த விளையாட்டின் சுவாரஸ்யம். முதலில் நான்கு காய்களையும் ஆரம்ப புள்ளிக்கு கொண்டு வருபவரே இந்த விளையாட்டில் வெற்றி பெறுவார்.

சில சமயங்களில் நான்கு பேர் கொண்ட ஆட்டத்தில், எதிரெதிரே அமர்ந்திருப்பவர்கள் ஓரணியாகக் கொண்டு அவர்களில் ஒருவரின் மனையை தங்கள் அணிக்கு தேர்ந்தெடுத்துக்கொண்டு, ஈரணியாக ஆடுவதும் உண்டு. இதன் மூலம் நான்கு பேர் கொண்ட ஆட்டத்தை சீக்கிரம் முடிக்க முடியும்.

நான்கு பேர் இல்லாத பட்சத்தில் இருவர் இந்த விளையாட்டை ஆடலாம். இருவரில் யார் மேற்கூறியவாறு எதிரணியின் காய்களை வெட்டி தனது நான்கு காய்களையும் ஆரம்ப புள்ளிக்கு கொண்டு வருபவரே வெற்றி பெறுவார்.

பயன்கள் :

🎲இந்த விளையாட்டு பார்க்க சுலபமாக தெரிந்தாலும் வெற்றிபெற சில தந்திரங்களை கையாள வேண்டும்.

🎲தாய விளையாட்டின் வாயிலாக அறிவுத்திறன் சார்ந்த செயல்கள் அதிகரிக்கின்றன.

🎲காய்களை நகர்த்துவதற்கு நுண்ணிய அறிவுத்திறன் வேண்டும்.

🎲எதிரியின் காய்களை வெட்டுவதற்கு சிந்தனைத்திறன் தேவை.

🎲கணித அறிவை வளர்த்துக் கொள்வதற்கு தாய விளையாட்டு உறுதுணையாக அமையும்.

🎲சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடக்கூடிய ஓர் அற்புத விளையாட்டு இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக