Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

அனுமன் சீதையை பார்த்தல்

திரிசடை தன் கனவை பற்றி கூறியதை கேட்ட சீதை, திரிசடை தாயே! உன் கனவின் மிஞ்சிய பகுதியையும் கண்டுவிட்டு, எனக்கு கூறு. இப்பொழுது நீ உறக்கத்திற்கு செல் என்றாள். 

தூரத்தில் தங்கத்திலான மண்டபத்தைக் கண்ட அனுமன் அங்கு வந்து சேர்ந்தான். அப்போது அங்கு தூங்கி கொண்டிருந்த அரக்கியர்கள் தூக்கத்தை கலைத்து சீதையை காவல் புரிய தொடங்கினர். 

இதை பார்த்த அனுமன் உடனே ஓடி சென்று தன்னை யாரும் பார்க்காத வண்ணம் மரத்தில் ஏறி கொண்டான். அப்போது அரக்கிகள் சீதையிடம், நீ எதற்கு அழுது கொண்டிருக்கிறாய்? உன்னை யார் என்ன செய்தார்கள்? எங்கள் அரசன் இராவணனுக்கு அறிவே கிடையாது. 

அவர் எங்கள் யாரையாவது விரும்பி இருந்தால் நாங்கள் மகிழ்ச்சியாக அவரின் மனைவியாக இருப்போம். எங்கள் அரசரை நீ ஏற்றுக் கொண்டால் இங்கு நீ மகிழ்ச்சியாக இருக்கலாம். எங்கள் அரசர் இங்கு வந்தால் அவரை வரவேற்று வணக்கம் சொல் என்று அச்சுறுத்தினார்கள்.

இவர்களின் இச்சொற்களை கேட்டு சீதை மிகவும் துன்பப்பட்டாள். அனுமன் சீதையின் நிலைமையை பார்த்து, யார் இந்த பெண்? இவளின் முகம் ஒளியிழந்து காணப்படுகிறதே. 

இவள் ஏன் அழுக்கு ஆடையை அணிந்து இருக்கிறாள்? இப்பெண்ணின் முகத்தில் தெய்வ ஒளி வீசுகிறதே. அரக்கியர் கூட்டம் சூழ இவள் யாரையோ நினைத்து அழுது கொண்டிருக்கிறாள். 

இராமர், சீதை பற்றி கூறிய அம்சங்கள் எல்லாம் இவளிடம் உள்ளது. அப்படியென்றால் இவள் நிச்சயம் சீதை தான் என்று தீர்மானித்துக் கொண்டான். நான் பட்டபாடு வீணாகவில்லை. 

நான் சீதையை கண்டுவிட்டேன். இனி நான் சாகமாட்டேன். அனுமன் மகிழ்ச்சியால் அங்கும் இங்கும் துள்ளி குதித்தான். இப்பெருஞ்செல்வியை தர்மம் காத்ததா? இல்லை ஜனக மகாராஜரின் புண்ணியம் தான் காத்ததா? கற்பு என்ற ஒன்று இவரை காத்தது என்றாள் அது மிகையாகாது என்று சீதையை பற்றி பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தான்.

தூங்கி கொண்டிருந்த இராவணன் சீதை தன் ஆசைக்கு இணங்கவில்லை என்ற கோபத்தில் தூக்கத்தை கலைந்தான். இராவணன் ஒளி வீசுகின்ற மணிகளை அணிந்து சீதையை நோக்கி வந்தான். 

ஊர்வசி உடைவாளை ஏந்திக் கொண்டு அவனுடன் வந்தாள். மேனகை வெற்றிலை பாக்கை மடித்து கொடுத்துக் கொண்டு உடன் வந்தாள். திலோத்தமை அவனுடைய காலணிகளை தூக்கிக் கொண்டு உடன் வந்தாள். மற்றும் ஏனைய தேவ மாதர்கள் சூழ ஆடம்பரமாக இராவணன் நடந்து வந்தான். 

இராவணன் அசோக வனத்திற்கு வந்தவுடன் அங்கு இருந்த அரக்கிகள் இராவணனுக்கு வழிவிட்டு நின்றனர். இராவணன் வருவதை கண்ட அனுமன் மரத்தில் ஒளிந்து கொண்டான். இராவணன் சீதையின் முன் நின்றான். அவனை கண்டதும் சீதையின் உடல் கூசியது. 

இராவணன் சீதையிடம், நீ என் மேல் இரக்கம் காட்ட மாட்டாயா? இதுநாள் வரை உனக்காக காத்திருந்து நாட்கள் வீணாகிவிட்டது.

நீ என்னை அடைந்தால் மூவுலகமும் உன்னை வந்தடையும். இராமனிடம் இருந்து பிரிந்து வந்த பிறகு அவனை நினைத்து அழுவதில் ஒரு பயனும் இல்லை. உன் அழகுக்கு ஏற்றவன் நான் மட்டும் தான். என்னை வேண்டாம் என்று சொல்லாதே. என்னை போல் பலம் கொண்டவன் இவ்வுலகில் எவரும் இல்லை. 

உனக்கு நல்வாழ்வு காத்துக் கொண்டிருக்கிறது. அதை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். நீ என்னுடன் வந்தால் என் செல்வங்கள் மேலும் பெருகும். நீ இராமனையே நினைத்து கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை. 

இராமன் இங்கு வந்து உன்னை மீட்டு செல்ல போவதில்லை. தேவர்கள் முதலானோர் என் அடிமைகளாக இருக்கின்றனர். நான் உன் அடிமையாக இருக்கிறேன். உன் அடிமையாகிய என்னை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என தன் இரு கரங்களையும் கூப்பி மண்டியிட்டு கேட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக