Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

இந்திரன் தானமாக கேட்கும் கவச குண்டலங்கள்...!

கௌரவர்கள், அசுவத்தாமன், பாண்டவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறி சபதம் செய்திருக்கிறான் என்று தவறாக எண்ணிக் கொண்டார்கள். ஆனால் கிருஷ்ணர், அவ்வாறு அவர்கள் நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாடகம் நடத்தினார் என்பது அவர்களுக்கும், அசுவத்தாமனுக்கும் தெரியாது. 

ஆனால் துரியோதனன், இனிமேல் அசுவத்தாமனை நம்பமுடியாது. அவனுக்கு போரில் படைத்தலைமை அதிகாரமும் கொடுக்க முடியாது. அவன் பாண்டவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று கிருஷ்ணரிடம் சபதம் செய்து நமக்கு துரோகம் செய்து விட்டான் என்று அருகில் இருந்தவர்களிடம் கூறினான். 

கிருஷ்ணர் தாம் வந்த வேலை முடிந்ததும், அசுவத்தாமனிடம், என் வேண்டுகோளை ஏற்க உனக்கு விருப்பமில்லை என்று நினைக்கிறேன். இனிமேல் உன்னை நான் வற்புறுத்த விரும்பவில்லை என்று கூறி அசுவத்தாமனுக்கு விடை கொடுத்து விட்டு, அவரும் புறப்பட்டார்.

அங்கிருந்து புறப்பட்ட கிருஷ்ணர் விதுரர் மாளிகைக்குச் சென்றார். அங்கு தனியாக அமர்ந்து இந்திரனை நினைத்துக் கொண்டிருந்தார். கிருஷ்ணர் நினைத்துக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் இந்திரன் அவர் முன் தோன்றி வணங்கினார். 

கிருஷ்ணர், இந்திரனை அழைத்து தன் அருகில் அமர வைத்து நலம் விசாரித்தார். பின்பு அவர் கூற வேண்டிய விஷயத்தை கூறினார். இந்திரனிடம், நடக்க இருக்கும் போரில் உன் மகன் அர்ஜுனன் உயிர் பிழைப்பதற்காக நீ ஒரு காரியம் செய்ய வேண்டும். கர்ணனுடன் அவன் பிறக்கும் போதே தோன்றிய கவசகுண்டலங்கள் இரண்டு உள்ளது.

அந்த கவசகுண்டலம் அவனிடம் இருக்கும் வரை, அவனை யாராலும் வெல்ல முடியாது. மேலும் காண்டவ வனத்திலிருந்து பாம்பு ஒன்று அர்ஜுனனை கொல்வதற்கு கர்ணனிடம் வளர்ந்து வருகிறது. இத்தனை ஆபத்தை தாண்டி அர்ஜூனன் உயிர் பிழைக்க வேண்டும் என்றால் நீ நான் கூறுவதை செய்ய வேண்டும் என்று கேட்டார்.

கிருஷ்ணர், இந்திரனிடம் நீ அந்தணன் போல மாறுவேடம் அணிந்து கர்ணனிடம் சென்று எப்படியாவது அவனுடைய கவச குண்டலத்தை தானமாக பெற்றுக் கொண்டு வந்துவிடு. இந்தக் கவச குண்டலங்களை கர்ணனிடம் இருந்து பிரிக்கப்படவில்லை என்றால் போரில் அர்ஜுனனால் கர்ணனை வெல்லவே முடியாது என்று இந்திரனிடம் கூறினார். 

கிருஷ்ணரின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்திரன் அந்தணன் போல் கர்ணனுடைய மாளிகையை அடைந்தான். எப்போது யார் வந்து எதைக் கேட்டாலும் மறுக்காமல் கொடுக்கக் கூடியவனான கர்ணன் இந்த அந்தணனை வரவேற்று உபசரித்தான்.

பெரியவரே, உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்று கூறினான். நிச்சமாக நான் எதைக் கேட்டாலும் நீங்கள் கொடுப்பீர்களா? என்று பெரியவர் கேட்டார்.

 அதற்கு கர்ணன் கண்டிப்பாக கொடுக்கிறேன். என்ன வேண்டும் என்று கேளுங்கள் என்று கேட்டான். உங்கள் செவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் குண்டலங்களும், நீங்கள், பிறக்கும் போதே உடன்பிறந்த கவசங்களும் எனக்கு கழற்றி கொடுங்கள் என்று கேட்டார். 

கர்ணன், பெரியவர் கேட்டதும் திகைத்துப் போனான். வாக்கு கொடுத்தபின் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான். பெரியவருக்கு வாக்கு கொடுத்ததால் குண்டலங்களையும், கவசங்களையும் கழற்றத் தொடங்கினான்.

ஆனால் அசரீரியாக வானத்தில் இருந்து சூரியன் எழுப்பிய எச்சரிக்கை குரல் கர்ணன் செவிகளில் கழற்றாதே இதில் சூழ்ச்சி இருக்கிறது. இதனை கழற்றிக் கொடுப்பதனால் உனக்கு நீயே அழிவைத் தேடிக் கொள்கிறாய் என்று கேட்டது. 

ஆனால் கர்ணன் அந்த அசரீரியை பொருட்படுத்தவில்லை. தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக குண்டலங்களையும், கவசங்களையும் கழற்றி அந்தணனிடம் கொடுத்துவிட்டான். 

கொடுக்கக்கூடாதவற்றை கொடுத்துப் பெருமை கொண்ட இந்தக் கொடையாளியின் தியாகம் சகலபுவனங்களிலும் ஓர் வியப்பை உண்டாக்கியது என்று கூறி போலியாக வேடம் அணிந்த இந்திரன் தன் சுய உருவில் கர்ணன் முன் தோன்றினார்.

இந்திரன், கர்ணனின் கொடைத்திறனை பாராட்டி வாழ்த்தினார். தனது பாராட்டுக்கு அடையாளமாக சிறப்பு வாய்ந்த வேலாயுதம் ஒன்றைக் கர்ணனுக்குப் பரிசளித்தார். 

கர்ணா! இந்த வேலாயுதம் குருக்ஷேத்திரப் போரில் கடோத்கஜனோடு போர் செய்ய நேரிடும் சந்தர்ப்பத்தில் உனக்கு பயன்படும் என்று கூறிச் சென்றார். இந்திரன், கிருஷ்ணரை சந்தித்து நடந்தவற்றை கூறினான். 

கிருஷ்ணர் இந்திரனிடம் கொடை என்ற மகாவேள்விக்காகவே அவதரித்தவன் கர்ணன். கவசகுண்டலங்களை இழந்த பின்பு, தான் தோல்வி அடைவது உறுதி என்று தெரிந்தும் உனக்கு தானம் அளித்துள்ளான். சாதாரண மக்கள் பொருளை தானம் செய்யக்கூட தயங்குவார்கள். ஆனால் உயிரைக் காக்கும் கவசகுண்டலத்தை உனக்கு தியாகம் செய்துவிட்டான் என்று கர்ணனை பாராட்டினார்.

இந்திரனும், தன் மகன் அர்ஜுனனுக்கு போரில் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க முடிந்தது என்ற மனநிறையுடன் கிருஷ்ணரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றார். இந்திரன் சென்ற பிறகு கிருஷ்ணர், குந்தியை சந்திக்கச் சென்றார். 

அஸ்தினாபுரத்தில் கிருஷ்ணருக்கு இருந்த கடைசி வேலை குந்தியின் மூலம் கர்ணன் மனதை கலைத்து பாண்டவர்கள் பக்கம் சேர்க்க வேண்டும் என்பதுதான். அதனால் கிருஷ்ணர் குந்தியை சந்தித்து தான் கூறிய காரியத்தை விரைவில் முடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டார். குந்தியும், யுத்த களத்தில் கர்ணன் தன்னுடைய நாகாஸ்திரத்தை அர்ஜூனன் மீது ஒரு முறை மட்டுமே பிரயோகிக்க வேண்டும். அர்ஜூனனைத் தவிர மற்ற நான்கு பேரை கர்ணன் கொல்லக்கூடாது என்னும் இந்த இரண்டு வரங்களை தான் வாங்கி வருவதாக கிருஷ்ணரிடம் கூறிவிட்டு கர்ணனைக் காண புறப்பட்டாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக