Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 16 ஏப்ரல், 2020

படகில் பழுவேட்டரையர் !(ஐந்தாம் பாகம் : தியாக சிகரம்)

புயல் அடித்த அன்று காலையிலேதான் பெரிய பழுவேட்டரையர் கடம்பூரிலிருந்து தஞ்சைக்குப் புறப்பட்டார் என்பது நேயர்களுக்கு நினைவிருக்கும். கொள்ளிட நதி வரையில் அவர் வழக்கமான பாதையிலே சென்று, பின்னர் கொள்ளிடக் கரைச் சாலை வழியாக மேற்கு நோக்கித் திரும்பினார். சோழ நாட்டுக் கிராமங்களின் வழியாக அவர் நீண்ட பிரயாணம் செய்ய விரும்பவில்லை. மேற்கே சென்று திருவையாற்றுக்கு நேராக கொள்ளிடத்தைக் கடக்க விரும்பிச் சென்றார்.

வழக்கம் போல் நூற்றுக்கணக்கான பரிவாரங்களுடன் இச்சமயம் பெரிய பழுவேட்டரையர் புறப்படவில்லை. தாம் போவதும் வருவதும் கூடிய வரையில் எவருடைய கவனத்தையும் கவராமலிருக்க வேண்டுமென்று நினைத்தார். ஆகையால் பத்துப் பேரைத்தான் தம்முடன் அழைத்துப் போனார்.

திருவையாற்றுக்கு நேரே கொள்ளிடத்துக்கு வட கரையில் பழுவேட்டரையர் வந்தபோது அந்தப் பெரிய நதியில் வெள்ளம் இரு கரையும் தொட்டுக்கொண்டு பிரவாகமாகப் போய் கொண்டிருந்தது. அங்கிருந்த சிறிய படகில் குதிரைகளைக் கொண்டுபோவது இயலாத காரியம். பெருங்காற்றுக்கு அறிகுறிகள் காணப்பட்டுக் கொண்டிருந்தன. 

ஆகையால் திரும்பிப் போவதற்குச் சௌகரியமாக இருக்கட்டும் என்று குதிரைகளை வடகரையில் விட்டு விட்டுப் பழுவேட்டரையர் தம்முடன் வந்த பத்து வீரர்களுடன் படகில் ஏறினார். படகு நடு நதியில் சென்று கொண்டிருந்தபோது புயல் வலுத்துவிட்டது. படகோட்டிகள் இருவரும் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் படகைச் செலுத்தினார்கள். நதி வெள்ளத்தின் வேகம் படகைக் கிழக்கு நோக்கி இழுத்தது. புயல் அதை மேற்கு நோக்கித் தள்ளப் பார்த்தது. படகோட்டிகள் படகைத் தெற்கு நோக்கிச் செலுத்த முயன்றார்கள். இந்த மூன்றுவித சக்திகளுக்கு இடையில் அகப்பட்டுக் கொண்ட படகு திரும்பித் திரும்பிச் சக்கராகாரமாகச் சுழன்றது.

பழுவேட்டரையரின் உள்ளத்திலும் அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்துச் சுழன்று கொண்டிருந்தது. நந்தினியின் எதிரில் இருக்கும்போது அவருடைய அறிவு மயங்கிப் போவது சாதாரண வழக்கம். அவள் கூறுவதெல்லாம் சரியாகவே அவருக்குத் தோன்றும். வாழ்நாளெல்லாம் தமக்குப் பிடிக்காமலிருந்த ஒரு காரியத்தை நந்தினி சொல்லும்போது அது செய்வதற்குரியதாகவே அவருக்குத் தோன்றிவிடும். ஏதேனும் மனதில் சிறிது சந்தேகமிருந்தாலும் அவருடைய வாய், 'சரி சரி! அப்படியே செய்வோம்' என்று கூறிவிடும். சொல்லிய பிறகு, வாக்குத் தவறி எதுவும் செய்வதற்கு அவர் விரும்புவதில்லை.

இப்போதும் அவரைத் தஞ்சைக்குப் போய் மதுராந்தகரை அழைத்து வரும்படி நந்தினி சொன்னபோது சரி என்று ஒத்துக்கொண்டு விட்டார். பிரயாணம் கிளம்பிய பிறகு அது சம்பந்தமாகப் பற்பல ஐயங்கள் எழுந்து அவர் உள்ளத்தை வதைத்தன. நந்தினியின் நடத்தையில் அணுவளவும் களங்கம் ஏற்படக் கூடும் என்று அவர் எண்ணவில்லை. ஆயினும் நந்தினியை யொத்த பிராயமுடைய மூன்று வாலிபர்களுக்கு மத்தியில் அவளைத் தனியே விட்டு விட்டு வந்திருக்கிறோம் என்ற எண்ணம் அடிக்கடி அவர் மனத்தில் தோன்றி வேதனை தந்தது.

கந்தமாறன், வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன் ஆகிய மூவர் மீதும் அவர் குரோதம் கொள்வதற்குக் காரணங்கள் இருந்தன. பொக்கிஷ நிலவறையில் நள்ளிரவில் தாமும் நந்தினியும் போய்க்கொண்டிருந்த போது, கந்தமாறன் எதிர்ப்பட்டு, நந்தினியை 'தங்கள் மகள்" என்று குறிப்பிட்டது அவர் நெஞ்சத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் சூடு போட்டது போல் பதிந்திருந்தது. அப்போது உண்டான குரோதத்தில் அவனைக் கொன்று விடும்படியாகவே காவலனுக்கு இரகசியக் கட்டளையிட்டு விட்டார். 

பின்னால் அதைப் பற்றி வருந்தினார். எப்படியோ கந்தமாறன் பிழைத்துவிட்டான். அவன் எப்படிப் பிழைத்தான், நிலவறைக் காவலன் எப்படி மாண்டான், என்னும் விவரத்தை இன்னமும் அவரால் அறிய முடியவில்லை. அதற்குப் பிறகு கந்தமாறன் தம் அரண்மனையிலேயே சிலநாள் இருந்ததையும், நந்தினி அவனுக்குச் சிரத்தையுடன் பணிவிடை செய்ததையும் அவரால் மறக்க முடியவில்லை.

பிறகு வந்தியத்தேவனும் கடம்பூரில் இருக்கிறான். முதன் முதலில் அந்த அதிகப்பிரசங்கி வாலிபனைப் பார்த்ததுமே அவருக்கு அவனைப் பிடிக்கவில்லை. பிறகு அவன் தஞ்சாவூரில் சக்கரவர்த்தியிடம் தனியாக ஏதோ எச்சரிக்கை செய்ய விரும்பியதையும் தஞ்சைக் கோட்டையிலிருந்து ஒருவரும் அறியாமல் தப்பி ஓடியதையும் அறிந்தபோது அவருடைய வெறுப்பு அதிகமாயிற்று. அச்சமயம் சின்னப் பழுவேட்டரையர் அவன் தப்பிச் சென்றதற்கு நந்தினி உதவி செய்திருக்கலாம் என்று குறிப்பாகச் சொன்னதையும் அவர் மறக்கவில்லை. அது ஒரு நாளும் உண்மையாக இருக்க முடியாது. ஏனெனில் அவன் குந்தவை பிராட்டிக்கும், இளவரசர் அருள்மொழிக்கும் அந்தரங்கத் தூதன் என்று தெரிய வந்திருக்கிறது. ஆகையால் அவனுக்கும் நந்தினிக்கும் தொடர்பு ஏதும் இருக்கமுடியாது. ஆனாலும், அவனையும் நந்தினியையும் சேர்த்து எண்ணிப் பார்த்த போதெல்லாம் பெரிய பழுவேட்டரையரின் இரும்பு இதயத்தில் அனல் வீசிற்று.

பிறகு ஆதித்த கரிகாலர் இருக்கவே இருக்கிறார். அவர் முன் ஒரு சமயம் ஒரு கோவில் பட்டரின் மகளைக் கலியாணம் செய்து கொள்ள விரும்பினார் என்பதும், அவர்தான் நந்தினி என்பதும், அவர் காதுக்கு எட்டியிருந்தது. அவர்கள் இப்போது சந்தித்திருக்கிறார்கள். எதற்காக? ஒன்று நிச்சயம், ஆதித்த கரிகாலன் பெரிய முரடனாயிருக்கலாம். பெரியோர்களிடம் மரியாதை இல்லாதவனாயிருக்கலாம். ஆனால் அவன் சோழ குலத்தில் உதித்தவன். அந்தக் குலத்திலே யாரும் பிறனில் விழையும் துரோகத்தைச் செய்ததில்லை. கரிகாலனும் பெண்கள் விஷயமான நடத்தையில் மாசு மறுவற்றவன். ஆனால் நந்தினி? அவளைத் தாம் இவ்வளவு தூரம் நம்பி அவள் விருப்பப்படி யெல்லாம் நடந்து வந்திருப்பது சரிதானா? அவளுடைய நடத்தையில் மாசு ஒன்றும் இல்லையென்பது நிச்சயமா? அவளுடைய பூர்வோத்தரமே இன்னும் அவருக்குச் சரி வரத் தெரியாது. அவருடைய சகோதரன் காலாந்தக கண்டன் அவளைப் பற்றிச் சொல்லாமற் சொல்லிப் பலமுறை எச்சரித்திருக்கிறான்.

'தம்பி கூறியதே சரியாகப் போய் விடுமோ? நந்தினி தம்மை வஞ்சித்து விடுவாளா? ஆகா! கதைகளில் சொல்லுகிறார்களே! அது போன்ற வஞ்சக நெஞ்சமுள்ள ஸ்திரீகள் உண்மையிலேயே உலகத்தில் உண்டா? அவர்களில் ஒருத்தி நந்தினியா?..."

இப்படி எண்ணியபோது பெரிய பழுவேட்டரையரின் உள்ளத்தில் குரோதக் கனல் கொழுந்து விட்டது என்றால், அதே சமயத்தில் நந்தினியின் மீது அவர் கொண்டிருந்த மோகத்தீயும் ஜுவாலை வீசியது. இவற்றினால் உண்டான வேதனையை மறப்பதற்காகப் பழுவேட்டரையர் தம் தலையை ஆட்டிக் கொண்டு, தொண்டையையும் கனைத்துக் கொண்டார். பத்துப் பேருக்கு மத்தியில் இருக்கிறோம் என்ற நினைவுதான் அவர் தமது பெரிய தடக்கைகளினால் நெற்றியில் அடித்துக்கொள்ளாமல் தடை செய்தது. அவரை அறியாமல் பெரிய நெடு மூச்சுக்கள் வந்து கொண்டிருந்தன. படகின் விளிம்புகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு பற்களைக் கடித்துக்கொண்டு, 'எல்லா உண்மைகளையும் இன்னும் இரண்டு தினங்களில் தெரிந்து கொண்டு விடுகிறேன்! இதுவரை செய்த தவறுபோல் இனிமேல் ஒருநாளும் செய்வதில்லை!" என்று சங்கல்பம் செய்து கொண்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக