சனி, 11 ஏப்ரல், 2020

சம்பாதி சீதையின் இருப்பிடத்தை கூறுதல்!

அனுமன் சம்பாதியிடம், இராவணன் சீதையை கவர்ந்து சென்ற போது ஜடாயு இராவணனிடம் போரிட்டார். போரின் போது இராவணன், சிவன் கொடுத்த வாளால் ஜடாயுவின் சிறகுகளையும், கால்களையும் வெட்டி வீழ்த்தியதால் ஜடாயு இறந்து விட்டார் எனக் கூறினார். 

இதைக்கேட்ட சம்பாதி மயங்கி கீழே விழுந்தார். மயக்கம் தெளிந்த சம்பாதி, எம்பெருமான்! இராமரின் மனைவியை காக்கும் பொருட்டு ஜடாயு உயிர் துறந்து புகழை அடைந்துள்ளான். பிறகு சம்பாதி, அனுமனையும், மற்ற வானர வீரர்களையும் பாராட்டினான். 

சம்பாதி, வானர வீரர்கள் அனைவரிடமும் இராம நாமத்தை சொல்லச் சொன்னான். அனைவரும் இராம நாமத்தை சொல்லும்போது சம்பாதியின் சிறகுகள் முளைக்க ஆரம்பித்தது. திரும்பவும் தன் சிறகுகளை பெற்ற சம்பாதி மிகவும் வலிமையுடையவனாக மாறினான்.

பிறகு சம்பாதி, நானும் என் தம்பி ஜடாயுவும் ஆகாயத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு பறந்தோம். தம்பி ஜடாயு சூரியனை நெருங்க நெருங்க அவன் வெப்பத்தை தாங்க முடியாமல் துன்பப்பட்டான். 

அப்போது நான் என் சிறகுகளை விரித்து ஜடாயுவை காப்பற்றினேன். வெப்பத்தினால் என் சிறகுகள் கருகி நான் மலையின் மேல் விழுந்து உயிர் தப்பினேன். அப்பொழுது சூரியன் என்னிடம், சம்பாதி நீ வருந்த வேண்டாம். 

ஜனக மகாராஜரின் குமாரியும், இராமபிரானின் மனைவியுமான சீதையை தேடி வானர வீரர்கள் வருவார்கள். அவர்களிடம் இராமரின் நாமத்தை உச்சரிக்க சொல்லி உன் சிறகுகளை நீ திரும்ப பெற்றுக் கொள் என்று அருளினார். உங்களால் நான் என் சிறகுகளை பெற்று வலிமையுடையவனாக மாறினேன் என்றான்.

சம்பாதி சொன்னதை கேட்ட அனைவரும், இராமரைப் போற்றி கொண்டாடினர். பிறகு அனுமன், இராவணன் சீதையை தென் திசை நோக்கி கவர்ந்து சென்றதால் இவ்வழியாகத் தேடி வந்துள்ளோம் என்றான். 

சம்பாதி, வீரர்களே! வருந்த வேண்டாம். நான் அரக்கன் இராவணன் சீதையை கவர்ந்து சென்றதை பார்த்தேன். அவன் அன்னை சீதையை கவர்ந்து கொண்டு இலங்கை நோக்கிச் சென்றான். மிகுந்த துன்பத்தில் இருந்த அன்னையை அங்கே இராவணன் சிறை வைத்து உள்ளான். 

நீங்கள் அங்கே சென்று சீதையை காண்பீராக என்றான். பிறகு சம்பாதி, நீங்கள் அனைவரும் அங்கே செல்வது எளிதான விஷயம் அல்ல. உங்களில் மிக்க வலிமையும், தைரியமும் மிக்கவர் அங்கு சென்று, இராமர் கூறியதை சீதையிடம் கூறி அவரின் துயரங்களை நீக்கிவிட்டு வருவீராக என்றான். 

அப்படி உங்களால் இலங்கை செல்ல முடியாவிட்டால் இராமரிடம் சென்று சீதை இருக்கும் இடத்தை சொல்லுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு பறந்து சென்றான்.

சம்பாதி சென்ற பிறகு, அங்கிருந்த வானர வீரர்கள், கழுகரசன் பொய் சொல்ல மாட்டான். ஆதலால் நாம் சீதையை தேடி கண்டுபிடித்தால் தான் நம்மால் உயிர் வாழ முடியும் என்றனர். 

பிறகு அனைவரும் யார் கடலை கடந்து இலங்கை செல்வது என்று ஆலோசித்துக் கொண்டு இருந்தனர். அங்கிருந்த பல வீரர்கள் தங்களால் கடலை கடந்து செல்ல இயலாது எனக் கூறினர். அங்கதன், என்னால் கடலை கடந்து செல்ல முடியும். ஆனால் அங்கிருந்து என்னால் திரும்பி வர இயலாது எனக் கூறினான். 

கரடி வீரனான ஜாம்பவான், தன்னாலும் கடலை தாண்டிச் செல்ல முடியாது என வருந்திக் கூறினான். பிறகு ஜாம்பவான் அங்கதனிடம், அரச குமாரரே! நம்மில் கடலை கடந்து செல்லவும், மிக்க வலிமை உடையவனும், எல்லா விதங்களிலும் ஏற்ற தகுதி உடையவன் அனுமன் தான் என்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்